RaaGaM GloBaL ChaT FoRuM

RaaGaM GloBaL ChaT FoRuM

Never Blame any Day In Your Life. Good Days Give You Happiness. Bad Days Give You Experience. Both Are Essential In Life. All Are God's Blessings.
 
HomeGalleryCalendarFAQSearchMemberlistUsergroupsRegisterLog inChaT
Latest topics
June 2019
MonTueWedThuFriSatSun
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
CalendarCalendar

Share
 

 Tamil Story - காஷ்மீர் மிளகாய்

Go down 
AuthorMessage
AruN
Admin
Admin
AruN

Posts : 1961
Join date : 2012-01-26

Tamil Story - காஷ்மீர் மிளகாய்   Empty
PostSubject: Tamil Story - காஷ்மீர் மிளகாய்    Tamil Story - காஷ்மீர் மிளகாய்   Icon_minitimeMon Apr 22, 2013 2:50 pm


Tamil Story - காஷ்மீர் மிளகாய்

கண்ணன் ஸாரைப் பற்றி கோபிதான் சொன்னான். நேற்று ஒரு இலக்கியக்கூட்டத்தில் கலந்துகொண்டு விட்டு பஸ் ஸ்டாப்பை நோக்கி நடந்தபோது தோளில் ஒரு கை தட்டியது. கோபி. என் பால்ய சிநேகிதன். பொன்னேரிக்காரன். நானும்தான். ஒன்றாய் ஒரே பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்தோம். அதற்கப்புறம் அவன் சினிமா ஆசையில் சென்னை போனவன் தான். இப்போதுதான் சந்திக்கிறேன்.

'கோபி'

'கரெக்டா கண்டுபிடிச்சிட்டியே'

'எப்படிடா ஐம் ஸாரி எப்படி இருக்கீங்க கோபி'

'டேய் நான் ஒண்ணும் சூப்பர் ஸ்டார் ஆயிடலை. என்னை எப்பவும் போல கூப்பிடு'

'அப்ப சரிடா தக்ளி.'

கோபி கடகடவென்று சிரித்தான்.

'தக்ளி பரவாயில்லையே இன்னும் ஞாபகம் வச்சிருக்கியே. யாரு என்னை அப்படிக் கூப்பிடுவாருன்னு சொல்லு'

'வேறே யாரு? நம்ம கண்ணன் ஸார்தான்'

'கரெக்ட் நம்ம கண்ணன் ஸார்தான். கிராப்ட் பிரியட்ல தக்ளிலெ நூல் திரிக்கச் சொன்னாரு. பஞ்சு பிஞ்சதே தவிர நூல் வரலை. அப்புறம் எங்க பாத்தாலும் "தக்ளி" ன்னுதான் கூப்பிடுவாரு'

'உனக்கு தக்ளிலெ நூல் நூக்க மட்டுமா வரலை. அவர் சொல்லிக்கொடுத்த தமிழும் வரலை. அதுக்குக் கூட அவர் கவிதையா ஒரு வரி சொன்னது எனக்கு இன்னும் ஞாபகமிருக்கு'

'நான் சொல்றேன். நூலறியா உனக்கு தமிழ் எப்படி வரும்? கரெக்டா? ஆனா வராத தமிழ்தான் என்னை இப்போ வாழவைக்குது. சினிமாவுக்கு பாட்டெழுதறேன். வண்டி ஓடுது'

'தமிழ் வராத நீ பாட்டெழுதறே... தமிழ்ல முதல் மார்க் வாங்கிய நான் பாங்கில கணக்கெழுதறேன். கண்ணன் ஸாருக்கு தெரிஞ்சா வருத்தப்படுவாரு'

'தெரியப்படுத்திடுவோம்... கண்ணன் ஸார் இப்ப சென்னைலதான் இருக்காரு. புரசைவாக்கம் முத்துச்செட்டித் தெருவில. போன வாரம் பாத்தேன். ரிட்டயர்டாயிட்டாராம். ஒரு பொண்ணு. கட்டிக் கொடுத்திட்டாரு. அவளும் புரசைவாக்கத்திலதான் இருக்காளாம். அதான் இங்கேயே வந்திட்டேன்னாரு'

கண்ணன் ஸார் சென்னையிலா! பழைய பள்ளி ஞாபகங்களெல்லாம் மனதில் வந்து அலை மோத ஒரு தெருவிளக்கின் வெளிச்சத்தில் அவரது முகவரியைக் குறித்துக்கொண்டேன். அந்தப் பக்கம் போகும்போது கண்ணன் ஸாரை அவசியம் பார்க்கவேண்டும்.

இரண்டு வாரங்கள் டிரெயினிங்கிற்காக ஹைதராபாத்திற்கு செல்ல வேண்டியதால் கண்ணன் ஸார் பற்றி மறந்தே போனது. கோபிதான் ஒரு நாள் வங்கிக்கு •போன் செய்து விசாரித்தான். கண்ணன் ஸாரை மறுபடியும் ஞாபகப்படுத்திய அவனுக்கு நன்றி சொன்னேன்.

ஞாயிற்றுக்கிழமை காலையில் அஞ்சலா ஆச்சரியப்பட்டாள். நான் சீக்கிரமே எழுந்துவிட்டதும், காலைக் கடன்களை முடித்துவிட்டு உடனே குளித்ததும், டிரஸ் மாட்டிக்கொண்டு வெளியே கிளம்பியதும் அவள் ஆச்சர்யத்திற்கு காரணம்.

'என்னங்க காலையில கெளம்பிட்டீங்க. கடன் வசூலுக்கு எல்லோரும் போகணும்னு பாங்கில சொல்றாங்கன்னு சொன்னீங்களே? அது வந்திருச்சா?'

இதுவும் ஒரு மாதிரி கடன் வசூல்தான். ஆனால் கடன் வாங்கியவனே கடன் கொடுத்தவரிடம் நேரில் சென்று கொடுப்பது. கல்விக்கடனில் விதிமுறைகள் தலை கீழ்.

எங்கள் வங்கிக்கிளையைத் தொடர்பு கொண்டு ஏற்கனவே கண்ணன் ஸார் இருக்கும் தெரு எங்கிருக்கிறது என்று சரியாக குறித்து வைத்திருந்தேன். அதனால் என்னால் சுலபமாக தெருவையும் வீட்டையும் கண்டுபிடிக்க முடிந்தது. இருபதடி சந்து அந்தத் தெரு. வீட்டின் முன் கதவு பழையகால பாணியில் ரூல்ட் நோட்டு போல் கம்பிகள் நிறைந்திருந்தது. அழைப்பு மணி சிறுவர்களுக்கு எட்டாத உயரத்தில் இருந்தது. அழுத்தினேன். நாக்குடைந்த மணி போல் ஒரு சத்தம் உள்ளே கேட்டது. உள்ளே கொஞ்சம் இருட்டாக இருந்தது. ஒண்டிக்குடித்தன சந்து வீடுகளில் இருட்டு ஒரு இலவச இணைப்பு. அறைகளில் கூட சூரிய வெளிச்சம் கூறையின் சதுரக் கண்ணாடி வழியாகத்தான் வரும். சில சமயம் அந்த வெளிச்சம் படும்படியாக ஒரு பக்கெட்டில் நீர் வைக்கப்பட்டிருந்தால் அந்த நீரில் வெளிச்சம் பட்டுத் தெறித்து சுவர்களில் கோலம் போடும். அது ஒரு சுகமான ஓவியம். அதை நான் பல முறை நான் குடியிருந்த பல வீடுகளில் ரசித்திருக்கிறேன்.

தாழ்ப்பாள் அகற்றும் ஓசையும் கதவு முனகிக்கொண்டே திறக்கும் ஓசையும் ஒரு சேரக் கேட்டது. ஒரு மெலிய உருவம் வாசலை விட்டு இறங்கி தெருவில் கால் வைத்தது. கண்ணன் ஸார்!!

கண்களை இடுக்கிக்கொண்டு என்னைப் பார்த்தார் கண்ணன் ஸார். இருட்டிலிருந்து சட்டென்று வெளிச்சத்திற்கு வந்தால் சில வினாடிகளுக்கு கண்கள் கூசும். வயதானதில் பார்வை மங்கியிருக்கவும் கூடும்.

'வணக்கம் கண்ணன் ஸார்'

'யாரு? சங்கரனா?'

'ஆமாம் ஸார்'

'செய்யுள் சங்கரன்' அவர் உதடுகள் என் பெயரை பெருமையுடன் முணுமுணுத்தன.

எனக்கு அவர் வைத்த பெயர் செய்யுள் சங்கரன். எந்தச் செய்யுளையும் மனனம் செய்து ஒப்பிப்பதில் நான் கெட்டிக்காரன். அதிலும் அதை கண்ணன் ஸார் சொல்லிக்கொடுத்தவாறே ஒப்பிப்பேன். சபாஷ் என்பார் அவர்.

தோள் மேல் கை போட்டு அணைத்தவாறே என்னை உள்ளே அழைத்துப்போனார். ஒரு சாய்வு நாற்காலியும் அதற்கு முன்னால் ஒரு ஸ்டூலும் அதன் மேல் ஒரு டம்ளரில் தண்ணீரும் வைக்கப்பட்டிருந்தது. காலை உணவுக்கு அவர் தயாராகும்போது என் அழைப்பு மணி அவரை வாசலுக்கு அழைத்திருக்கிறது. எதிரே இருந்த ஒரு பெஞ்சில் என்னை உட்காரச் சொல்லிவிட்டு சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டார்.

'எப்படி கண்டுபிடிச்சே?'

'கொஞ்ச நாளுக்கு முன்னால "தக்ளி" யைப் பார்த்தேன். அவன் தான் சொன்னான் ஸார்'

'தக்ளி? ஓ கோபியா? இன்னும் அந்தப் பேரை நினைவு வச்சிருக்கியா?' கண்ணன் ஸார் சிரித்தார்.

'அவனும் மறக்கல ஸார்.'

'எப்படி மறக்கமுடியும்? அந்தப் பேரில தானே அவன் சினிமா பாட்டு எழுதறான்'

எனக்கு ஆச்சரியாமாகவிருந்தது. பல படங்களுக்கு கோபி அந்தப் பெயரையா வைத்துக்கொண்டு பாட்டெழுதுகிறான்?

கண்ணன் ஸார் நிறைய பேசினார். ஜெயித்த மாணவனை பார்த்த ஒரு உண்மையான ஆசிரியரின் சந்தோஷம் அவரிடம் தெரிந்தது.

அறை ஓரத்தில் நிழலாடியது. கண்ணன் ஸார் நிமிர்ந்து பார்த்தார்.

'ஆங் பார்வதி இது என்னோட மாணவன். செய்யுள் சங்கரன். என்னாமா செய்யுள் ஒப்பிப்பான் தெரியுமா? இவன் என்னை மாதிரியே ஒரு தமிழாசிரியரா வருவான்னு நெனைச்சேன். பாங்கில வேலை செய்யறானாம்'

கண்ணன் ஸார் மனைவி அவருக்கு நேரெதில் தோற்றத்தில். கொஞ்சம் குண்டாக குள்ளமாக கறுப்பாக... அதிலும் அந்த முகம்... நதிகள் வரைந்த இந்தியா வரைபடம் போல.

'வணக்கம் தம்பி'

முகத்தைப் போலவே குரலும் கொஞ்சம் தடிப்பானதாக இருந்தது. ஆண் வாடை அதிகம் அந்தக் குரலில். கண்ணன் ஸார் ஏதோதோ பேசிக்கொண்டிருந்தார். என்னால் அதில் முழுக் கவனமும் செலுத்த முடியவில்லை. அவரது மனைவியின் முகம் என்னை இன்னும் பயமுறுத்திக் கொண்டிருந்தது. எப்படி இவ்வளவு ரசனையுள்ள கண்ணன் ஸாருக்கு இப்படி ஒரு முகத்தோடு ஒரு மனைவி? கண்ணன் ஸார் அதிரப் பேசமாட்டார். ஆனால் அந்த அம்மாவின் குரல்...

'தம்பி சாப்பிடுங்க'

மீண்டும் அதே குரல். எனக்கு திடுக்கிட்டது போல் ஒரு உணர்வு. என் எதிரே வேறொரு ஸ்டூல் வைக்கப்பட்டு ஒரு தட்டில் நான்கு இட்லிகளும் மிளகாய் பொடியும் எண்ணை குழைத்து வைக்கப்பட்டிருந்தது. பக்கத்தில் ஒரு டம்ளரில் தண்ணீர்.

கண்ணன் ஸார் சாப்பிட ஆரம்பித்திருந்தார். நான் தட்டைப் பார்த்தேன். மிளகாய்ப்பொடி கருஞ்சிவப்பில் இருந்தது.

தேவையில்லாமல் அந்த முகமும் குரலும் எனக்கு ஞாபகம் வந்தது. சாப்பிடு என்பது போல் கண்ணன் ஸார் தலையை அசைத்தார்.

ஒரு துண்டு இட்லியைப் பிய்த்து பட்டும் படாமலும் மிளகாய்ப் பொடியில் தொட்டு வாய்க்குள் போட்டுக்கொண்டேன்.

ஒரு அசாத்தியக் காரம் வந்து என்னைத் தாக்கப் போகிறது என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. தன்னிச்சையாக ஒரு கை டம்ளர் தண்ணிரை நோக்கி நகர்ந்தது.

'காரம் இருக்காது தம்பி. நெறம்தான் அப்படி.. கொஞ்சம் தூக்கலா இருக்கும். காரம்தான் உங்க ஸாருக்குப் பிடிக்காதே? அதான் காஷ்மீர் மிளகா போட்டு செஞ்சிருக்கேன்.'

மீண்டும் அதே குரல்.. ஆனால் இப்போது என்னமோ அந்தக் குரலில் பாசமும் பரிவும் இருப்பதாக எனக்குப் பட்டது.

எனக்குப் புரிந்துவிட்டது. காஷ்மீர் மிளகாய் நிறம்தான் கொஞ்சம் முரடு. காரம் கொஞ்சம்கூட இல்லை.


Back to top Go down
View user profile
 
Tamil Story - காஷ்மீர் மிளகாய்
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
RaaGaM GloBaL ChaT FoRuM :: ENTERTAINMENT :: SHORT STORIES-
Jump to: