RaaGaM GloBaL ChaT FoRuM
RaaGaM GloBaL ChaT FoRuM
RaaGaM GloBaL ChaT FoRuM
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

RaaGaM GloBaL ChaT FoRuM

Never Blame any Day In Your Life. Good Days Give You Happiness. Bad Days Give You Experience. Both Are Essential In Life. All Are God's Blessings.
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inChaT
Latest topics
» The Girl Next Door
Tamil Story - தொலைக்‍காட்சி Icon_minitimeSat Oct 26, 2013 3:00 pm by Anjali

» The Role Play
Tamil Story - தொலைக்‍காட்சி Icon_minitimeFri Oct 25, 2013 2:37 pm by Lekha

» Yealae Yealae Dosthu Da Song Lyrics From Endrendrum Punnagai Movie
Tamil Story - தொலைக்‍காட்சி Icon_minitimeThu Oct 24, 2013 3:20 pm by Selection

» Vaan Engum Nee Minna Song Lyrics From Endrendrum Punnagai Movie
Tamil Story - தொலைக்‍காட்சி Icon_minitimeThu Oct 24, 2013 3:17 pm by Selection

» Othaiyila Ulagam Song Lyrics From Endrendrum Punnagai Movie
Tamil Story - தொலைக்‍காட்சி Icon_minitimeThu Oct 24, 2013 3:11 pm by Selection

» Kadal Naan Thaan Song Lyrics From Endrendrum Punnagai Movie
Tamil Story - தொலைக்‍காட்சி Icon_minitimeThu Oct 24, 2013 3:07 pm by Selection

» Ennai Saaithaale Song Lyrics From Endrendrum Punnagai Movie
Tamil Story - தொலைக்‍காட்சி Icon_minitimeThu Oct 24, 2013 3:01 pm by Selection

» Oru Nodi Piriyavum Song Lyrics From Rummy Movie
Tamil Story - தொலைக்‍காட்சி Icon_minitimeThu Oct 24, 2013 2:52 pm by Selection

» Kooda Mella Kooda Vachi Song Lyrics From Rummy Movie
Tamil Story - தொலைக்‍காட்சி Icon_minitimeThu Oct 24, 2013 2:25 pm by Selection

April 2024
MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930     
CalendarCalendar

 

 Tamil Story - தொலைக்‍காட்சி

Go down 
AuthorMessage
Friendz




Posts : 177
Join date : 2013-06-27

Tamil Story - தொலைக்‍காட்சி Empty
PostSubject: Tamil Story - தொலைக்‍காட்சி   Tamil Story - தொலைக்‍காட்சி Icon_minitimeFri Aug 02, 2013 2:28 pm

.



Tamil Story - தொலைக்‍காட்சி




இருவர் மட்டும் அங்கிருந்த அனைத்துக் கட்டுக் காவல்களையும் பொருட்படுத்தாமல் அத்துமீறி தப்பிச் செல்ல துணிவுடன் முடிவெடுத்தனர். அவர்களால் பொருத்துக் கொள்ள முடியவில்லை. விஷயத்தை மதியம் வாக்கில் கேள்விப்பட்டு துடிதுடித்துக் கொண்டிருக்கிறார்கள். வெகுநேரமாக காத்துக்கொண்டிருக்கிறார்கள் ஜன்னல் கம்பிகளுக்கு அந்தப்பக்கமாக இருந்து கொண்டு. இவர்கள் விடுவதாகத் தெரியவில்லை. மணி அடித்தால் என்ன அடிக்காவிட்டால் என்ன தப்பிச் சென்றுவிட வேண்டியதுதான் என்கிற முடிவுக்கு வந்தார்கள் அந்த இருவரும். ஒரே கடினமான விஷயம் அந்த ஆளுயர சுவற்றை தாண்டிச்செல்ல வேண்டும். அதில் உப்புசோடா பாட்டிலை உடைத்து கண்ணாடி சில்லுகளை குத்து குத்தாக பதித்து வைத்திருந்தார்கள். அது ஒன்றும் பிரமாதம் இல்லை. கடினமான சாக்கு இரண்டு உள்ளது. ஒன்றில் மேல் ஒன்றை போட்டு அதில் ஏறிவிடலாம். ஏற்கனவே பலபேர் அந்த பாதையை தப்பிக்க பயன்படுத்தயிருப்பதால் பதிக்கப்பட்டிருந்த அந்தக் கண்ணாடிகள் ஏற்கனவே ஆபத்தில்லாமல் சில்லு சில்லாக உடைக்கப்பட்டிருந்தன. அந்த சாக்குகள் தனக்கு பின்னால் தப்பிச்செல்ல எத்தனிப்பவர்களுக்கு உதவியாக இருக்கும் என்கிற நல்லெண்ணத்தில் அருகிலிருந்த ஒரு புதருக்குள் ஒளித்து வைத்திருந்தார்கள் இதற்கு முன் தப்பிச் சென்றவர்கள். ஆனால் ஒரே ஒரு கடினமான விஷயம் சுவற்றில் ஏறிய பின் அங்கிருந்து குதிப்பது தான். சுவற்றுக்கு வெளியே சுவரை ஒட்டியபடி ஒரு சாக்கடை ஓடிக் கொண்டிருந்தது. அதைத் தாண்டி குதிக்க வேண்டும். வலு இல்லாதவர்கள் அதில் விழுந்து விட்டால் இடுப்பளவுக்கு உள்ளே சென்று விடும். பல வருடங்களாக அந்தப்பக்கமாக துர்நாற்றத்தை கிளப்பியபடி ஓடிக் கொண்டிருந்த அந்த ஓடையை கடக்க 2 நிமிடங்களுக்கு மேல் எடுத்துக் கொள்ளக் கூடாது. இல்லையென்றால் மூச்சு முட்டி இறந்து விட வாய்ப்புண்டு.

இத்தனை ஆபத்துகளையும் தாண்டி அந்தப் பள்ளிக் கூடத்திலிருந்து தப்பிச்செல்ல வேண்டும் என்று எத்தனித்த அந்த இருவரின் பெயர் வேலுச்சாமி, சீனிவாசன். 5ஆம் வகுப்பு வரை மட்டுமே உள்ள அந்தப்பள்ளிக் கூடத்தில் 4ஆம் வகுப்பு மற்றும் 5ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மட்டும்தான் அங்கிருந்து தப்பிச் செல்லும் துணிவும், சிந்தனையும், தகுதியும் உள்ளது என்பது அனைவரும் அறிந்த விஷயம். அதனால் ஆசிரியர்கள் சிறுவர்களை தொந்தரவு செய்வதே இல்லை. 4ஆம் வகுப்பை தொட்டதிலிருந்தே தாண்டிக் குதிக்கும் பயிற்சிகளை சிறப்புற எடுத்துக் கொண்ட வேலுவும், சீனியும் இனியும் தங்களது பயிற்சித்திறனை நடைமுறைக்கு கொண்டுவரவில்லை என்றால் தங்களது சீனியாரிட்டிக்கு மதிப்பில்லாமல் போய்விடும் என்கிற காரணத்துக்காக இன்று அந்த சுவற்றை தாண்டிக்குதிக்கும் முடிவுக்கு வந்துவிட்டார்கள். மேலும் அவர்களை தாண்டிக்குதிக்கத் தூண்டிய அந்த விஷயம் மச்சு வீட்டு மணிமாறன் (ஊர் பிரசிடெண்ட் பதவியேற்று ஆறு மாதங்கள் ஆகின்றன) ஒரு புது டெலிவிஷன் வாங்கியிருக்கிறார். 2 மாதங்களுக்கு முன்பு ராஜ்தூத் பைக் வாங்கிய போது ஊர்மக்கள் அனைவரும் வரிசையில் நின்று இரண்டு இருண்டு பேராக பார்க்க அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். அதேபோல் இந்த முறையும் டெலிவிஷனை பார்க்க அனுமதிப்பார் என்று முழுமையாக நம்பினார்கள்.

செய்தி மதியம் 12 மணிக்கே வந்து விட்டது. டி.வியின் பெயர் ஒனிடாவாம். அதற்கென்று தயாரிக்கப்பட்ட ஒரு மரப்பெட்டிக்குள் அழகாக அந்த டி.வி வைக்கப்பட்டிருப்பதாக மதியம் 2 மணி நிலவரப்படி செய்தி வெளியாகியிருந்தது. அப்பொழுதே ஆர்வம் தாங்க முடியாமல் சீனியின் இடது கை நடுங்கத் துவங்கியிருந்தது. ஒருநிலையில் அவனால் இருக்க முடியவில்லை. நட்புக்கு இலக்கணம் வகுத்த அவனது சிறந்த நண்பனான வேலும், சீனியிடம் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டான். இருவர் கருத்துக்களும் ஒன்றாகிப் போனது. இன்று எப்படியும் அந்த டி.வியை பார்த்துவிட வேண்டும் என்று எச்சிலைத் தொட்டு கைகளில் அடித்து சபதம் எடுத்துக்கொண்டார்கள்.

சனிக்கிழமை தோறும் பள்ளிக்கூடம் நடத்துவதை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட வேண்டும் என்கிற அவர்கள் இருவரின் உள்மனக் கருத்துக்களை இதுவரை அவர்கள் யாரிடமும் சொல்லிக் கொள்ளவில்லை. 2.30 மணியளவில் இருவரும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்து விட்டார்கள். இதுவரை சுவர்ஏறிக்குதிக்கும் திட்டத்தை தள்ளி வைத்து வந்த அவர்கள் இன்று அதை நிறைவேற்றிவிட வேண்டும் என்கிற முடிவுக்கு வந்து விட்டார்கள். 2.45 மணியளவில் ஒரு புது செய்தி அவர்கள் காதுகளை எட்டியது. இன்று தொலைக்காட்சியில் திரைப்படம் காட்டப் போகிறார்களாம். ஊர் மக்கள் அனைவரும் மணிமாறன் வீட்டிற்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். பொறுமையை இழந்தார்கள் இருவரும்.

இரவில் வீட்டுவேலைகள் செய்து களைத்துப் போயிருந்த ஆசிரியர் அழகுமலை எங்கே தூங்காமல் போனால் வேலை செய்ய முடியாமல் போய்விடுமோ என்கிற பயத்தில் வழக்கம்போல ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். ஒரே இடத்தில் வெட்டித்தனமாக அமர்ந்திருக்கும் தண்டனையிலிருந்து தப்பிப்பதற்காக மாணவர்கள் தங்களுக்குள் ஊர்க்கதைகளை பேசிக்கொண்டிருந்தனர். வகுப்பறைக்குள் அமர்ந்தவாறு விளையாடுவதற்கு ஏராளமான விளையாட்டுக்களை கண்டுபிடித்து வைத்திருந்தார்கள். சில மாணவர்கள் ஆசிரியரைப் பின்பற்றி தூங்கிக் கொண்டிருந்தனர். ஒரு மாணவன் வெகுநேரமாக புத்தகத்திற்குள் சினிமா இத‌ழை வைத்துக்கொண்டு வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். பள்ளிக் கூடத்தில் சம்பந்தமே இல்லாமல் ஒரு மாணவன் புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கிறானே என மனம்நொந்தபடி சில மாணவர்கள் அவனையே பார்த்தபடி தங்களுக்குள் குசுகுசுவென பேசிக் கொண்டிருந்தனர். இதுதான் சமயம் என யூகித்த வேலும், சீனியும் ஒன்றுக்குப் போவது போல் அப்படியே நழுவினர்.

தாவிக்குதிக்க வேண்டிய மதில்சுவரை இருவரும் நெருங்கிய போது அங்கு ஏற்கனவே 2 பேர் தாவிக்குதிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்கள். நான்கு பேரும் ஒருவரையொருவர் வெறித்துப் பார்த்துக் கொண்டார்கள். யார் யாரை கண்காணிக்கிறார்கள் என்று யாருக்கும் புரியவில்லை. நான்கு பேரும் தங்களைத் தாங்களே குற்றவாளியாக நினைத்துக் கொண்டு ஒடுங்கிப் போய் 2 நிமிடங்கள்அப்படியே நின்று கொண்டிருந்தார்கள். சாக்கை கையில் வைத்துக்கொண்டிருந்த மாணவன் போட்டுக்கொண்டிருந்த கால்சட்டையின் ஓரமாக சற்று நனைந்து விட்டது. அந்த விஷயம்தான் அவர்கள் நால்வரையும் தங்களுக்குள் எந்த ஸ்பையும் இல்லை என்கிற முடிவுக்கு வரச் செய்தது. யாரைக் கண்டாலும் பயந்து சாகும் தன்மை பள்ளிக் கூட மாணவர்களின் பொதுப்பண்பு என்பதை அவர்கள் நால்வரும் அறிந்து வைத்திருந்தனர்.

சென்ற மாதம் டில்லி (ட்ரில்) வாத்தியர் நடத்திய ஓட்டப்பந்தயப் போட்டியில் கூட அவ்வளவு வேகமாக ஓடவில்லை. புதிதாக ஒன்றை அறிந்து கொள்ளும் ஆர்வம் அவர்களை வெறும்காலில் கரட்டு மேடு வழியாகவும், சரளைக் கற்களிலும், முட்காடுகள் வழியாகவும் வெறிப்பிடித்தது போன்று ஓடச்செய்தது. கரட்டு மேடு வழியாக ஓடும் போது கீழே விழுந்த வேலுவின் கால்களில் ஏற்பட்ட காயம் குறித்து பெரிதாக வருத்தப்படாத வேலு, தனக்குத்தானே வைத்தியம் செய்து கொண்டான். அவருக்கு நினைப்பு அவரது எச்சிலில் ஏதோ மருத்துவ குணம் உள்ளது என்று. யாருக்கு காயம் பட்டாலும் சரி அவர் எச்சிலைத் தொட்டு தடவிவிட்டு, இன்னும் 2 நாட்களில் காயம் ஆறவில்லை என்றால் தன்னை செருப்பால் அடிக்கும்படி முறைத்துப் பார்த்து சவால்விட்டுச் செல்வார்.

வழக்கமாக மாங்காய் திருடும் தோட்டம் அருகே வந்த போது கூட தங்களை கட்டுப்படுத்திக் கொண்டு கடந்து சென்றார்கள். செருப்பை எடுத்து அக்குளில் வைத்துக் கொண்டு ஓடி வந்துகொண்டிருந்த சீனிவாசன், முள் குத்திய போது கூட அந்த செருப்பை கால்களில் அணிந்து கொள்ளவில்லை. காரணம், அடுத்த மாதம் குடியரசுத்தினத்திற்கு காலில் செருப்புஅணிந்து வரவில்லையென்றால் டில்லி வாத்தியார் கொடூரத் தாக்குதலில் ஈடுபடுவார். புதுச்செருப்பு கேட்டால் வீட்டில் வாங்கித் தருவது பற்றி யோசிக்கக் கூட மாட்டார்கள். அரசு வழங்கிய அந்தச் செருப்பை பாதுகாப்பதே பெரும்வேலையாக போய்விட்டது சீனிவாசனுக்கு. அரசு வழங்கிய அந்த வெள்ளை நிறச் கதர்ச் சட்டையில் 2 பட்டன்கள் இருப்பது குறித்து சீனிவாசனுக்கு மிகுந்த பெருமை உண்டு. ஏனெனில் வேலுச்சாமிக்கு அந்த பட்டன் கூட இல்லை. அவன் ஊக்கு குத்ததிக் கொண்டு கவர்ச்சி நடிகையை போல் வெட்கமில்லாமல் சுற்றித்திரிந்து கொண்டிருப்பான். ஆனால் வேலுச்சாமியின் கருத்துப்படி வெட்கம் என்ற ஒன்று இருக்க வேண்டுமானால் அது சீனிவாசனுக்குத்தான் இருக்க வேண்டும் என்று அடித்துப் பேசுவான். ஏனெனில் அவனது காக்கி ட்ரவுசர் இன்னும் பெரிதாக கிழியவில்லை. அதில் எட்டணா சைசுக்கு மட்டுமே ஒரு ஓட்டை உண்டு.

ஆனால் சீனிவாசனின் ட்ரவுசரில் எட்டணா சைஸ் ஓட்டையை ஒளிப்பெருக்கியில் பார்த்தால் எவ்வளவு பெரிதாக இருக்குமோ அவ்வளவுபெரிய ஓட்டை உண்டு. அதனால் தனது சட்டையில் பட்டன் இல்லாதது குறித்து அவன் வருத்தப்படுவது இல்லை. அவனைப் பொறுத்தவரை மறைக்க வேண்டிய இடத்தை மறைத்தால் போதும் என்பது அவனுடைய சித்தாந்தம். ஆனால் சீனிவாசனுக்கு அதில் மாற்றுக் கருத்து உண்டு. தனது ட்ரவுசரின் முன் பகுதியில் இன்னும் ஒரு பட்டன் அறுந்து விழாமல் தொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. அதனால், தன்னுடைய மானம் தான் உண்மையில் பாதுகாக்கப்படுகிறது. அதனால் சட்டப்படி தான் வெட்கப்பட வேண்டியதில்லை என்று அடித்துக் கூறுவான். அவனைப்பொறுத்தவரை பட்டன்கள் அறுந்துவிழாமல் பாதுகாப்பதில் அவனுக்கு அக்கறை அதிகம். ஆனால், வேலுச்சாமிக்கு பட்டன் என்றால் என்னவென்றே மறந்து போய்விட்டது. அவனுக்கு முன்பகுதி காற்றோட்டமாக இருப்பது ஆரோக்கியமானது என்று நினைத்தானோ என்னவோ, அவன் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டான்.

என்னதான் ஆயிரத்தெட்டு மனக்குறைகளும், கருத்துவேறுபாடுகளும் அவர்களுக்குள் இருந்தாலும், அவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை. பிரசிடெண்ட் வீட்டுக்குச்செல்ல இன்னும் 2 கிலோமீட்டர்கள் செல்ல வேண்டும். அதற்குள் தொண்டை வறண்டு விட்டது. தண்ணீர் தாகம் எடுத்தது இருவருக்கும். போகிற வழியில் யார் வீட்டிலாவது தண்ணீர் வாங்கிக் ​குடித்தால் அதில் 2 நிமிடங்கள் வீணாகிவிடும் என்கிற கவலை சீனிவாசனை வாட்டி வதைத்தது. அதனால் தாகத்தை பொறுத்துக் கொண்டு ஓடிக்கொண்டிருந்தார்கள் இருவரும். மதிய வெயிலில் கரட்டு மேட்டில் ஓடிக்கொண்டிருந்ததால் சூடு தாங்க முடியவில்லை. இருப்பினும் நிழலில் கூட ஒதுங்கிக் கொள்ளாமல் இருவரும் தலைதெறிக்க ஓடினார்கள்.

ஓடிக்கொண்டிருக்கும்போதே தன்னுடைய அனுபவத்தை சீனிவாசன், வேலுவிடம் கூறினான். சென்ற வருடம் தீபாவளியன்று மதுரை டவுனுக்கு சென்றிருந்த போது ஒரு கடைவீதியில் அந்த ஒனிடா டி.வியை தான் பார்த்ததாகக் கூறினான். ஆனால் அதை வேலுச்சாமியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதுஎப்படி ஒரே ஊரில் பிறந்து, ஒரே பள்ளியில் படித்து,ஒரே ஊரில் வளர்ந்த அவர்கள் இருவரில் ஒருவன் மட்டும் தான் பார்க்காததைப் பார்க்க முடியும். இதைத் தன்னால் நம்ப முடியாது என்று அடித்துக் கூறினான் வேலுச்சாமி. அதனால்வேறு வழியில்லாம் சீனிவாசன் சத்தியம் செய்ய வேண்டியிருந்தது.

"என் படிப்பு மேல சத்தியமா நான் அந்த டி.வியைப் பார்த்தேன். அதில் ஒரு மொட்டைத் தலையனுக்கு வால் முளைத்திருக்கும், அவன் வாலை கையில்பிடித்துக் கொண்டு என்னமோ கூறுவான். என்ன சொல்வான் என்று தெரியவில்லை"

படிப்பு மேல் சத்தியம் செய்த பின் நம்ப மறுக்கும் சிறுவர்கள் அந்த ஊரிலேயே இல்லை என்பதால் வேலுச்சாமி ஆச்சரியத்துடன் நம்பினான். சீனி மட்டும் பார்த்த அந்த டி.வியை தானும் இன்று பார்த்துவிட வேண்டும் என்கிற லட்சிய வெறி அவன் உள்ளத்தில் எழுந்தது. அதனால் அவன் இன்னும் வேகமாக ஓட ஆரம்பித்தான். மணி 3:20 ஐத் தொட்டது. தூரத்தில் தென்னந்தோப்புக்கு மத்தியில் மணிமாறனின் வீடு இருந்தது. அங்கு 200 அல்லது 250 பேர் இரண்டிரண்டு பேராக வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள்.

இரண்டு பெண்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டு சென்றார்கள். அந்த டி.வி. பெட்டிக்கு பின்னே யாரோ மறைந்து கொண்டு குரல் கொடுத்துக் கொண்டிருப்பதாகவும்,தங்களை யாரும் ஏமாற்ற முடியாது என்றும் சிரித்துக் கொண்டே பேசிக்கொண்டு சென்றார்கள். ஒருவேளை அப்படியும் இருக்குமோ என்று சந்தேகப்பட்டார்கள் வேலுவும், சீனியும். எதுவாக இருந்தாலும் உள்ளே சென்று பார்த்துவிட வேண்டியதுதான் தங்களது தலையாய கடமை என்று கூறிக்கொண்டார்கள்.

தோப்புக்குள் நுழைந்ததும் வரிசையை மதிக்காமல் திடுதிடுவென வீட்டுக்குள்ளே ஓடினார்கள். ஆனால், இரண்டு நிமிடம் கழித்து காதைப் பிடித்து திருகிக்கொண்டு ஒரு பெரிய மனிதர் அவர்களை தரதரவென இழுத்து வந்து கொண்டிருந்தார். ஒருவேளை இந்த பெரிய மனிதர் பள்ளிக்கூட வாத்தியாராக இருந்திருப்பாரோ என்று இருவரும் சந்தேகம் அடைந்தார்கள். காதைப்பிடித்து திருகும் குரூரமான யோசனைகள் எல்லாம் ஆசிரியர்களை தவிர வேறு யாருக்கு வரும். வரிசையைப் பார்த்தால் இன்றைக்குள் முடிவதாக இல்லை. தியேட்டரில் கூட வரிசையில் நின்று டிக்கெட் வாங்குவது என்பது அவமானத்துக்‍குரிய செயலாகக்‍ கருதும் அந்த ஊர் மக்களே வரிசையில் நின்று கொண்டிருக்கிறார்கள் என்றால், கட்டுப்பாடுகள் அதிகமாகதான் இருக்க வேண்டும் என்று நினைத்தார்கள். பல்லைக் கடித்துக் கொண்டு 15 நிமிடம் வரிசையில் நின்றார்கள். அதற்கு மேல் அவர்களால் நிற்க முடியவில்லை.

எப்போதும் சிறுவர்களை எந்த தவறும்செய்யாத சிறுவர்களாக, இந்த சமுதாயத்தைச் சேர்ந்த பெரியவர்கள் இருக்‍க விடுவதேயில்லை. சிறுவர்கள் எந்தத் தவறும்செய்யக்‍ கூடாது என்று சின்சியராக மனதிற்குள் நினைப்பதை அவர்கள் மதிப்பதே இல்லை. அவர்கள் தவறுசெய்யத் தூண்டப்பட்டார்கள். கடந்த 2 வருடங்களாக ஜாலியாக ஒரு கலவரத்தைக் கூட காண முடியாமல் போரடித்துப்போய் காணப்பட்ட இந்த ஊர் மக்‍களுக்‍கு, இன்று அந்த வாய்ப்பை வழங்கலாம் என முடிவெடுத்தார்கள். கூட்டத்திற்குள் யாருக்‍கும் தெரியாமல் கல்லை விட்டு எறிவது எல்லாம் பழைய ட்ரிக். புதிதாக எதையாவது செய்ய வேண்டும். நமது வழிமுறைகள் எதுவும் கிளிஸ்ஷேவாக இருக்‍கக் கூடாது என்று சீனிவாசன் கூறினான். சரி கூட்டத்திற்குள் பாம்பு வருகிறது என்று புரளியை கிளப்பி விடலாமா என்று யோசித்தார்கள். ஆனால் அதிலும் ஒரு சிக்‍கல். வருட ஆரம்பத்தின் முதல் நாள் அன்று ஏதேனும் ஒரு நல்ல விஷயத்தை கடைபிடிக்‍க வேண்டும் என நைச்சியமாக பேசி அனைவரிடமும் படிப்பின் மேல் சத்தியம் வாங்கிவிட்டார் சோசியல்சைன்ஸ் வாத்தியார். அதன்படி சீனிவாசனும், வேலுச்சாமியும் இன்று முதல் ஒருவருடத்திற்கு பொய் பேசுவதில்லை என்று சோசியல் சைன்ஸ் புத்தகத்தின் மீது தூசிபறக்‍க அடித்து சத்தியம்செய்து விட்டனர்.

இப்போது என்ன செய்வது. ஒரு பாம்பும் வராமல் எப்படி பாம்பு, பாம்பு என்று பொய் சொல்லி கத்த முடியும் என்று குழம்பிக் கொண்டிருக்‍கையில், வேலுச்சாமி அந்த சிறப்புமிக்‍க தனதுகண்டுபிடிப்பை பற்றிக் கூறினான்.

"நாம் பாம்பு, பாம்பு என்று உறக்‍கக் கத்துவோம். ஆனால் நாம் அதன் பெயரை மட்டுமே சொல்லிப் பார்க்‍கிறோம். அவ்வளவுதான் விஷயம். அது பொய் அல்ல. பாம்பை நாம் இங்கு பார்த்தோம் என்று கூறியிருந்தால் தான் பொய் சொன்னதாக ஆகும்."

வேலுச்சாமியின் இந்த புதிய தத்துவ விசாரத்தை ஏற்றுக்‍ கொண்டு இருவரும் அதை செயல்படுத்தினார்கள். வெறித்தனமாக பாம்பின் பெயரை சத்தமிட்டு கூறிப்பார்த்தார்கள். ஆனால் ஏனோ அந்த ஊர் மக்‍கள் வரிசையில் நிற்பதை விட்டு விட:டு பயந்து ஓடினார்கள். சிறிது நேரத்தில் அந்த இடம் கலவரமாக மாறிப்போனது. பயத்திலும், கலவரத்திலும் அந்த ஊர் மக்‍கள் உண்மையிலேயே எங்கிருந்தோ 2 பாம்புகளை பிடித்து அடித்துக்‍ கொன்றார்கள். 2 அல்ல, 4 பாம்புகள் என்று சொல்லி பயமுறுத்தியிருந்தால் கூட அந்த ஊர்மக்‍கள் உண்மையிலேயே 4 பாம்புகளை தேடிப்பிடித்து அடித்துக்‍ கொன்று பின்னர்தான் நிதானமடைவார்கள். இவ்வளவு கூட்டம் தன் வீட்டின் முன் ஆகாது என்று நினைத்தாரோ என்னவோ, மணிமாறன் வீட்டிற்கு வெளிப்புறம் வைத்து படம் காட்டுவது என்கிற முடிவுக்‍கு உடனடியாக வந்தார். தன் வீட்டு மாடியில் நின்று அனைவருக்‍கும் அந்த அறிவிப்பை வெளியிட்டார்.

தான் சென்னை தொலைக்‍காட்சி நிலையத்திற்கு ட்ரங்க்‍கால் போட்டு பேசியதாகவும், இன்று இரவு தர்மேந்திரா, ஹேமமாலினி இணைந்துநடித்த ஹிந்திப்படம் ஒளிபரப்ப உள்ளதாகவம், ஆகையால் அனவைரும் வீட்டிற்கு சென்றுவிட்டு மாலை 6 மணிக்‍கு மேல் வரும்படியும், தனது நீண்ட அறிக்‍கையை வாய்மொழியாக வெளியிட்டார்.

ஊர் மக்‍கள் அனைவருக்‍கும் சந்தோஷம். கடந்த 2 மணி நேரமாக, ஊர் பிரசிடென்டின் மோசமான அந்தரங்க நடவடிக்‍கைகளைப் பற்றி விவாதித்துக்‍ கொண்டிருந்த வயதான தாத்தாக்‍கள் அனைவரும், அந்த நிமிடத்திலிருந்து அவர் ஊருக்‍கு செய்த நன்மைகளை பட்டியலிட ஆரம்பித்து விட்டார்கள். ஊர் குளத்தை ஆழப்படுத்தாத கயவாளிப்பயல்தானே இந்த பிரசிடெண்ட் என்று பேசிக்‍ கொண்டிருந்த மத்திம வயதுப் பெண்கள், அந்த நிமிடத்திலிருந்து, சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை அன்று இலவசமாக பொறி வழங்கிய வள்ளல் குணத்தை பற்றி பெருமிதமாக பேசிக்‍ கொண்டு சென்றார்கள்.

ரோடு போடுவதாக கடந்த 3 வருடங்களாக ஏமாற்றிவந்த பிரசிடெண்டின் ஏமாற்றுத்தனத்தைப் பற்றி பேசிக்‍கொண்டிருந்த இளைஞர்கள் அந்த நிமிடத்திலிருந்து, தீபாவளியன்று இலவசமாக உடை வழங்கிய, பிரசிடெண்டின் கொடைத்திறனைப் பற்றி பேச ஆரம்பித்தார்கள். சனிக்‍கிழமை பள்ளிக்‍ கூடம் வைப்பதற்கு காரணம் இந்த பிரசிடெண்ட்தான் என தவறுதலாக நினைத்து வசவு பாடி வந்த பள்ளிச் சிறுவர்கள், சுதந்திர தினத்தன்று இலவசமாக ஆரஞ்சு மிட்டாயுடன் இணைந்து ஹார்லிக்‍ஸ் மிட்டாயும் வழங்கிய அவரது நல்ல உள்ளத்தைப் பற்றி பேச ஆரம்பித்தார்கள்.

பிரசிடெண்ட்தான் எவ்வளவு நல்லவர், என்று வாயாற புகழ்தார்கள்.

மாலை ஆறு மணியளவில் கிராமமக்‍கள் அனைவரும் பிக்‍னிக்‍ செல்வது போல ஆயத்தமானார்கள். இரவு நேரத்தில் படுத்துக்‍ கொண்டு பார்ப்பதற்காக பாய், தலகாணியை கையோடு எடுத்துச் சென்றார்கள். இடையிடையே கொரிப்பதற்கு வறுத்த வேர்கடலையும், மண்டவெள்ளத்தையும் மஞ்சள் பையில் திணித்துக்‍ கொண்டார்கள். இளம் பெண்களில் சிலர் பண்டிகை உள்ளிட்ட முக்‍கிய தினங்களுக்‍கா மட்டுமே பூசுவதற்கென்று திருவிழாக்‍களில் பேரம் பேசி வாங்கி வைத்திருந்த கோகுலம் புவுடர் டப்பாவை உடைத்து மணக்‍க மணக்‍க உடலில் பூசிக்‍ கொண்டார்கள். திருமண வைபவங்களுக்‍கு என போட்டுச் செல்வதற்காக தேய்த்து வைத்தீருந்த ஆடைகளை சிலர் அணிந்து வந்தது கூட பார்வைக்‍குதென்பட்டது. நடக்‍க இயலாத வயதான பெண்கள்,மாட்டு வண்டியில் அழைத்து வரப்பட்டார்கள். சிலர் ஆடு, மாடுகள் திருடு போய்விடுமோ என்கிற பயத்தில் கையோடு அவற்றையும்ஓட்டிக்‍கொண்டு சென்றார்கள். வயதான கிழவர்கள் சற்றுஅதிகமாக புகையிலையையும், மூக்‍குப் பொடியையும் சேமித்து வைத்துக்‍ கொண்டார்கள். கணவனுடன் சண்டையிட்ட பெண்கள், மனைவியுடன் சண்டையிட்ட ஆண்கள் என அனைவரும் சமாதானக்‍ கொடியை பறக்‍கவிட்டடி ஜோடியாக கிளம்பிவிட்டார்கள்.

இவ்வளவுக்‍கும் நடுவே சீனிவாசனையும், வேலுச்சாமியையும்காணவி்லை. பிள்ளை வீட்டிற்கு வந்துவிட்டானா? இல்லையா என வாரத்திற்கு ஒரு முறைமட்டுமே ஏதோ அகஸ்மாஸ்தாக கவனித்துச்செல்லும்,தாய்-தந்தையரை பெற்றிருக்‍கும் அவர்களுக்‍கு சுதந்திரத்தின் அருமை பெருமைகள் நன்றாக புரிந்திருந்தது. அவர்கள் இருவரும் பிரசிடெண்ட் தனது அறிக்‍கையை வெளியிட்ட நிமிடத்திலிருந்து 30 நிமிடங்களுக்‍கு, தென்னை மரத்தடியில் பெருவிரல் அகலமுள்ள, சிவனேயென சுற்றிக்‍ கொண்டிருந்த வண்டு ஒன்றை முள்ளால் குத்தி டார்ச்சர் செய்து கொண்டிருந்தனர். பின் போர் அடிக்‍கவே, னெ்னந்தோப்பிற்கு அடுத்துள்ள கடலை காட்டிற்குச் சென்று, தங்களது பிறப்புரிமையான கடலையை பிடிங்கி சாப்பிடும் வேலையை ஆரம்பித்தார்கள். அந்த கிராமத்தை பொறுத்தவரை பூமிக்‍கு அ டியில் விளைவதெல்லாம் அவர்களுக்‍குத்தான் சொந்தம். அடுத்த 30 நிமிடங்களுக்‍கு பட்டாம்பூச்சி ஒன்றை துரத்திற் கொண்டிருந்தார்கள். அந்த பட்டாம் பூச்சியை பிடித்து அதன் வாலில் நூலைக்‍ கட்டி பறக்‍கவிட்டு சந்தோஷமடைந்தார்கள். அப்படி, இப்படி என 6 மணி வரை பொழுதை போக்‍கிவிட்டார்கள்.

கிராமமக்‍கள் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர். அவரவர் தங்களுக்‍கான இடத்தை துண்டைப் போட்டு... ஓட்டி வந்த ஆடுகளை கட்டிப்போட்டு...கொண்டு வந்திருந்த பாய் தலகாணிகளை விரித்துப் போட்டு என வேகவேகமாக ரிசர்வ் செய்தார்கள். சிலர் வேகவேகமாக மணலை குவித்து மேடை அமைத்தார்கள். சில இளைஞர்கள் பெரியவர்களிடம் முன்னெச்சரிக்‍கை நடவடிக்‍கையாக கோபமாக சில உத்தரவுகளை பிறப்பித்தார்கள். படம்பார்த்துக்‍கொண்டிருக்‍கும்போது வெத்தலையை போட்டு பொழிச், பொழிச் என்று துப்பினால் கெட்ட கோபம் வந்து விடும் என்று மிரட்டி வைத்தார்கள். வயதானவர்களும், பொழிச் பொழிச் என்று துப்பிக்‍கொண்டே சரியென்று தலையாட்டினார்ள். பீடி இல்லாதவர்கள் பீடியையும், தீப்பெட்டி இல்லாதவர்கள், தீப்பெட்டிகளையும், பண்டம் மாற்றும் முறைப்படி மாற்றிக்‍ கொண்டார்கள்.

பெண்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த பனியாரம், உப்புக்‍கடலை, மண்​டவெள்ளம் உள்ளிட்ட பண்டங்களை கொடுக்‍கல் வாங்கல் முறைப்படி பகிர்ந்து கொண்டார்கள். சில பெண்கள் வீட்டுக்‍ கதவை பூட்டிவிட்டு வந்தோமா? இல்லையா? என்கிற சந்தேகத்தை அண்டை வீட்டு பெண்களிடம் கேட்டு நிவர்த்தி செய்த கொண்டார்கள்.

சீனியும், வேலுவும் ஒரு கிழவியின் காதில் தொங்கவிடப்பட்டிருந்த வெண்கல டோலக்‍கை பெண்டுலம் போல ஆட்டிவிட்டு விளையாடிக்‍ கொண்டிருந்தனர். அந்த கிழவி கொசுவை விரட்டுவது போல் 5 நிமிடத்திற்கு ஒருமுறை அவர்களை விரட்டிக்‍கொண்டிருந்தாள். அந்த ஊரில் உள்ள ஒரே டீக்‍கடைக்‍காரரும்தனது டீக்‍கடையை ஒரு பைசைக்‍கிளில் மாற்றிக்‍ கொண்டு, தென்னந்தோப்பின் ஒரு மூளையில் கடையை விரித்தார். மறக்‍காமல் கொண்டு வந்திருந்த 'கடன் அன்பை முறிக்‍கும்' போர்டை சைக்‍கிளின் முன்பக்‍கம் தொங்கவிட்டிருந்ததால் நூற்றுக்‍கு 2 சதவீத வியாபாரமே கடையில் நடைபெற்றது.

சரியாக 6:12க்‍கு பொன்னம்பலம்போல காணப்பட்ட ஒரு மனிதரும், பழங்கால நடிகர் ரங்காராவைப் போல காணப்பட்ட மற்றொரு மனிதரும், திருவிழாவின் போது முழுவதும் தங்கத்தாலான சாமியை தூக்‍கி வருவது போல, பவ்யமாக தூங்கி வந்தனர். வீட்டின் முன் மேடை போல் அமைக்‍கப்பட்டிருந்த திண்டு ஒன்றில் மேல் அந்த தொலைக்‍காட்சியை நிறுத்தினார்கள். சீனுவும், வேலுவும் முறையே 9 முறை அந்தத் தொலைக்‍காட்சிப் பெட்டியை சுற்றி வந்தார்கள். பின்னே யாரும் ஒளிந்திருக்‍கவில்லை என்கிற தங்களது சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொண்டு, ஊர் மக்‍களுக்‍கும் அந்த நற்செய்தியை பரப்பினார்கள்.

படம் ஆரம்பிக்க ஆயத்தமானது. விசில் சத்தம் விண்ணைப் பிளந்தது. உலகம் முழுவதும் மொழி என்று ஒன்று உண்டென்றால் அது தமிழ் மொழிதான், தமிழ்மொழியைத் தவிர உலகில் வேறு மொழியே கிடையாது என சீரியசாக நம்பிய அந்த ஊர் மக்கள், முதன் முதலாக ஹிந்தி என்கிற ஒரு மொழி உண்டென்றும், அப்படிப்பட்ட பேசுபவர்கள் இந்த உலகில் உண்டென்றும், அதுவும் அந்த பரிதாபத்திற்குரிய மக்கள் இந்தியாவில்தான் வாழ்கிறார்கள் என்றும் அன்றுதான் நம்பத்தலைப்பட்டார்கள். பாவம் அந்த மக்கள் இந்த கிராமத்தில் பிறந்திருக்கலாம். இந்த ஊரில்தான் இவ்வளவு இடம் பாக்கி இருக்கிறதே, அவர்கள் இங்கு வந்து எளிமையான தமிழ் மொழியைக் கற்றுக் கொண்டு சந்தோஷமாக வாழலாமே. எதற்காக இவ்வளவு கடினமான ஒரு மொழியை பேசிக் கொண்டு கஷ்டப்பட வேண்டும். பாவம், அவர்கள் தமிழ்நாட்டில் பிறப்பதற்கெல்லாம் புண்ணியம் செய்திருக்க வேண்டும். என்ன பாவம் செய்தார்களோ, ஹே.....ஹே......... என்று குதிரை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். அடுத்த ஜென்மத்திலாவது அவர்கள் தமிழ்நாட்டில், தமிழ்மொழி பேசி வாழ்வதற்கு கடவுள் அருள் புரியட்டும் என சீரியசாக 2 வது மட்டுமே படித்த 2 பெருசுகள் பேசிக் கொண்டனர்.

ஒருவயதான பெண்மனி தன் சந்தேகத்தை இவ்வாறு வெளிப்படுத்தினார். ஒருவேளை அவர்கள் அனைவரும் குதிரை வியாபாரம் செய்பவர்களாக இருக்கலாம். அதுதான் அவர்கள் மொழியே குதிரையை விரட்டுவதற்கு ஏதுவாக அமைந்துவிட்டது என்ற தனது வரலாற்று அறிவையெல்லாம் வௌப்படுத்தினார்.

மொழி புரியாத வயதான பெண்மணிகள் அனைவரும் சிறிது நேரத்தில் தங்களுக்கு இருந்த ஒரே பொழுது போக்கான பாக்கை எடுத்து உலக்கில் வைத்து இடிக்கும் செயலை ஆரம்பித்து விட்டார்கள். இளம் பெண்கள், தண்ணீர் பிடிக்கும் போது தன் பின்னே வரும் ஆண்களைப்பற்றி பெருமையாக பேசிக் கொள்ள ஆரம்பித்தார்கள். மத்திய வயதுடைய பெண்கள், தங்களுடைய சேலைகளின் பார்டர் குறித்து விசாரணை மேற்கொண்டிருந்தார்கள். அந்த ஊர் இளைஞர்களுக்கு எப்பொழுதுமே ஒரே வேலைதான். அவர்கள் கூட்டமாக உட்கார்ந்துகொண்டு தனித்தனியாக பெண்களை சைட் அடித்துக் கொண்டிருந்தார்கள். சில ஆண்கள் ஆடுபுலி ஆட்டம் விளையாட ஆரம்பித்தார்கள். குழந்தைகள் அனைவரும் உறங்கிவிட்டனர். டீக்கடைக்காரர் தன்னிடம் இருந்த ஒரே பீடியை கடந்த 2 மணி நேரமாக ஊதிக்கொண்டிருந்தார். அது எப்படி என்கிற ரசகியத்தை அவர் தன்னோடு எடுத்துக்கொண்டு சென்றுவிடுவார் போல. மிகுந்த ஏமாற்றத்துக்கு உள்ளான வேலுச்சாமியும், சீனிவாசனும், 4 திசைகளிலும் கை-கால்களை பரப்பிக் கொண்டு நட்சத்திர மீனைப் போல படுத்துத் தூங்கினார்கள்.

அந்தத் தொலைக்காட்சி கவனிப்பாரற்று அனாதையாக ஓடிக் கொண்டிருந்தது.






Back to top Go down
 
Tamil Story - தொலைக்‍காட்சி
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» Tamil Story - ஒத்தப்பனமரக்காடு
» Tamil story - (a+b)2 = a2+b2+2ab
» Tamil Story - வசை
» Tamil Story - ஜாதிக்கவுண்டன்பட்டியில் லக்னோகாரன்
» Tamil Story - ஒரு குரல்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
RaaGaM GloBaL ChaT FoRuM :: ENTERTAINMENT :: SHORT STORIES-
Jump to: