RaaGaM GloBaL ChaT FoRuM
RaaGaM GloBaL ChaT FoRuM
RaaGaM GloBaL ChaT FoRuM
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

RaaGaM GloBaL ChaT FoRuM

Never Blame any Day In Your Life. Good Days Give You Happiness. Bad Days Give You Experience. Both Are Essential In Life. All Are God's Blessings.
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inChaT
Latest topics
» The Girl Next Door
கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 7 Icon_minitimeSat Oct 26, 2013 3:00 pm by Anjali

» The Role Play
கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 7 Icon_minitimeFri Oct 25, 2013 2:37 pm by Lekha

» Yealae Yealae Dosthu Da Song Lyrics From Endrendrum Punnagai Movie
கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 7 Icon_minitimeThu Oct 24, 2013 3:20 pm by Selection

» Vaan Engum Nee Minna Song Lyrics From Endrendrum Punnagai Movie
கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 7 Icon_minitimeThu Oct 24, 2013 3:17 pm by Selection

» Othaiyila Ulagam Song Lyrics From Endrendrum Punnagai Movie
கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 7 Icon_minitimeThu Oct 24, 2013 3:11 pm by Selection

» Kadal Naan Thaan Song Lyrics From Endrendrum Punnagai Movie
கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 7 Icon_minitimeThu Oct 24, 2013 3:07 pm by Selection

» Ennai Saaithaale Song Lyrics From Endrendrum Punnagai Movie
கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 7 Icon_minitimeThu Oct 24, 2013 3:01 pm by Selection

» Oru Nodi Piriyavum Song Lyrics From Rummy Movie
கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 7 Icon_minitimeThu Oct 24, 2013 2:52 pm by Selection

» Kooda Mella Kooda Vachi Song Lyrics From Rummy Movie
கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 7 Icon_minitimeThu Oct 24, 2013 2:25 pm by Selection

April 2024
MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930     
CalendarCalendar

 

 கல்கியின் சிவகாமியின் சபதம்

Go down 
Go to page : Previous  1, 2, 3, 4, 5, 6, 7
AuthorMessage
AruN
Admin
Admin
AruN


Posts : 1961
Join date : 2012-01-26

கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 7 Empty
PostSubject: Re: கல்கியின் சிவகாமியின் சபதம்   கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 7 Icon_minitimeMon May 28, 2012 5:57 pm

மூன்றாம் பாகம் : பிக்ஷுவின் காதல்

48. நாற்சந்தி நடனம்



கடவுள் ஒருவர் இருப்பது உண்மையானால், அவர் கருணாமூர்த்தி என்பதும் உண்மையானால், உலகத்தில் ஏன் இத்தனை துன்பங்களை வைத்திருக்கிறார்? மனித வர்க்கம் ஏன் இத்தனை கஷ்டங்களுக்கு ஆளாக வேண்டியிருக்கிறது? இந்தக் கேள்விகள் ஆதிகாலந் தொட்டு கேட்கப்பட்டு வருகின்றன.

உள்ளதில் உண்மை ஒளிகொண்ட மகான்கள் மேற்படி கேள்விகளுக்கு விடையும் சொல்லி வந்திருக்கிறார்கள்.

மனிதர்கள் துன்பம் என்று நினைப்பது உண்மையில் துன்பம் அல்ல. சூரியனை மேகம் மூடுவது போல் நமது அறிவை மூடியிருக்கும் மாயை காரணமாகச் சில விஷயங்களைத் துன்பம் என்று நாம் கருதுகிறோம். உண்மையில் துன்பமும் ஒருவித இன்பமேயாகும்.

"அன்பு வடிவாகி நிற்பள் துன்பமெலாம் அவள் இழைப்பள்
ஆக்கநீக்கம் யாவும் அவள் செய்கை - அவள்
ஆனந்தத்தின் எல்லையற்ற பொய்கை!"

என்று பராசக்தியைக் குறித்து இந்தக் காலத்து மகாகவியான ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார் பாடியிருக்கிறார்.

ஆனால், அன்பு வடிவான ஜகன்மாதா ஆனந்தத்தின் எல்லையற்ற பொய்கையான அன்னை பராசக்தி ஏன் தன் மக்களுக்குத் துன்பம் இழைக்கிறாள்; ஏன் கஷ்டங்களை அளிக்கிறாள்?

துன்பம் என்றும், கஷ்டம் என்றும் நாம் எண்ணிக் கொள்கிறோமே தவிர, உண்மையில் அவை துன்பங்களுமல்ல; கஷ்டங்களுமல்ல. அறிவுத் தெளிவோடு பார்த்தால், நாம் துன்பம் என்று நினைத்ததும் இன்பந்தான்; கஷ்டம் என்று கருதியதும் சுகந்தான்.

இந்தத் தத்துவத்தை நம்புவது அவ்வளவு சுலபமான காரியமல்ல. "துன்பத்திலே இன்பமாவது, கஷ்டத்திலே சுகமாவது?" என்ற அவநம்பிக்கை உண்டாகத்தான் செய்யும். ஆயினும் நமது வாழ்க்கை அனுபவத்திலேயே சில விஷயங்களை ஆலோசித்துப் பார்த்தால் மேற்படி தத்துவத்தில் உண்மை உண்டு என்று அறியலாம்.

சோக ரஸமுள்ள கதைகள், காவியங்களைப் படிக்கிறோம். சோக மயமான நாடகங்களைப் பார்க்கிறோம்; சோகத்தை ஊட்டும் கீதங்களைப் பாடுகிறோம், கேட்கிறோம். இப்படியெல்லாம் துன்பத்தை நாமாகத்தானே தேடி அனுபவிக்கிறோம்? எதற்காக? அந்தத் துன்பங்களிலேயெல்லாம் உள்ளுக்குள்ளே இன்பம் பொதிந்திருப்பதனாலேதான். நமது வாழ்க்கையில் எத்தனையோ கஷ்டங்களை அனுபவிக்கிறோம். அனுபவிக்கும் போது கஷ்டமாக இருக்கிறது. 'இது சகிக்க முடியாத கஷ்டம்' என்று தோன்றுகிறது. 'இந்த வாழ்க்கையே வேண்டாம்' என்று தீர்மானிக்கிறோம். எல்லாக் கஷ்டங்களையும் எப்படியோ சகித்துக் கொள்கிறோம். அப்படி நாம் அனுபவித்த சகிக்க முடியாத கஷ்டங்களைச் சில வருஷ காலம் கழித்து நினைத்துப் பார்க்கும் போது, ஒருவகை அபூர்வ இன்பம் ஏற்படுகிறது. பழைய கஷ்டங்களை நினைத்துப் பார்ப்பதிலும் அவற்றைக் குறித்துப் பேசுவதிலும் சந்தோஷமே அடைகிறோம்.

சீதாதேவி வனவாசத்தின் போது அனுபவித்த துன்பங்களுக்கு எல்லையேயில்லை. அவ்வளவு துன்பங்களைப் பெண்ணாய்ப் பிறந்த யாரும் அனுபவித்திருக்க முடியாது. ஆயினும் அயோத்தி அரண்மனையில் ஸ்ரீ ராமபிரானுடைய பட்டமகிஷியாகச் சீதை வாழ்ந்த காலத்திலும் அதிலும் கர்ப்பம் தரித்திருந்த சமயத்தில், "உனக்கு எதிலாவது ஆசை உண்டா?" என்று ராமன் கேட்ட போது, சீதை என்ன சொன்னாள்? "மறுபடியும் காட்டுக்குப் போய் அங்கே நான் கஷ்டப்பட்ட இடங்களையெல்லாம் பார்க்க வேண்டுமென்று ஆசையாயிருக்கிறது!" என்றாள்.

"துன்பம் என்பது உண்மையில் துன்பம் அல்ல. அவ்விதம் நினைக்கச் செய்வது மாயையின் காரியம். துன்பத்திற்குள்ளேயும் இன்பந்தான் இருக்கிறது!" என்று சொல்லும் வேதாந்த உண்மையை மேற்படி சீதையின் கோரிக்கை நன்கு நிரூபித்திருக்கிறதல்லவா?

சிவகாமியை நாற்சந்தியில் நெருக்கடியான தருணத்தில் நிறுத்தி விட்டு மேற்கண்டவாறு நாம் வேதாந்தம் பேசிக் கொண்டிருப்பது பற்றி வாசகர்களின் மன்னிப்பைக் கோருகிறோம். மேலே சிவகாமியின் காரியத்தை நாம் அறிந்து கொள்வதற்கு மேற்கண்ட பூர்வ பீடிகை அவசியமாயிருக்கிறது.

தமிழகத்து ஸ்திரீ புருஷர்களை சாட்டையடித் துன்பத்திலிருந்து பாதுகாப்பதற்காகத் தளபதி விரூபாக்ஷன் அவளை நாற்சந்தியில் நடனமாடச் சொன்னான். அவ்விதம் செய்வது தெய்வீகமான, பரதநாட்டியக் கலையையே அவமதிப்பதாகும் என்று எண்ணி முதலில் சிவகாமி, "முடியாது!" என்றாள்.

ஆனால், விரூபாக்ஷனின் கட்டளையின் பேரில், 'சுளீர்' என்ற சாட்டையடிச் சப்தம் கேட்டதும் சிவகாமியின் மனஉறுதி பறந்து போய் விட்டது. மறுகணம் வாதாபி நகரின் நாற்சந்தியில் சிவகாமி தேவி நடனம் ஆடத் தொடங்கினாள், அற்புதமாக ஆடினாள். துன்பத்திலே இன்பம் உண்டு என்னும் வாழ்க்கைத் தத்துவம் நன்கு விளங்கும்படி ஆனந்தமயமாக ஆடினாள். சகிக்க முடியாத கஷ்டத்திலிருந்து எல்லையற்ற ஆனந்தம் பிறக்கும் என்னும் உண்மை நிதரிசனம் ஆகும்படி ஆடினாள். தன்னை மறந்து, வெளி உலகத்தை மறந்து, காலதேச வர்த்தமானங்களை மறந்து ஆடினாள். அந்தக் காட்சியானது அழகுத் தெய்வம் ஆனந்த வெறிகொண்டு ஆடுவது போலிருந்தது.

வாதாபியின் வீதியில் சிவகாமி நடனம் ஆடிய போது வானமும் பூமியும் அசைவற்று நிற்பது போல் தோன்றியது. வீதியிலே போய்க் கொண்டிருந்த வாதாபி நகர மாந்தர்கள் அப்படி அப்படியே நின்று அந்த விந்தையைப் பார்த்தார்கள். பந்தமுற்ற தமிழகத்து ஸ்திரீ புருஷர்கள் அசைவற்று நின்றார்கள். கையில் சாட்டை பிடித்த கிங்கரர்களும் சும்மா நின்றார்கள். அவர்களுடைய தலைவன் விரூபாக்ஷனும் அசையாமல் நின்றான். அனைவரும் பார்த்த கண்கள் பார்த்த வண்ணம், சிற்ப வடிவங்களைப் போல் நின்றார்கள். காலம் போவதே தெரியாமல் மெய்மறந்து உலகத்தை மறந்து நின்றார்கள்.

சூரியன் மலைவாயிலில் விழுந்தது. கோட்டைக் கதவுகள் சாத்துவதற்குரிய அஸ்தமன பேரிகை முழக்கம் கேட்டது. சிவகாமியின் நடன பரவசத்துக்கு அதனால் பங்கம் ஏற்பட்டது. ஆட்டம் ஆடுவதை நிறுத்திச் சிவகாமி நின்றாள். அத்தனை நேரமும் ஏதோ ஓர் அதிசய ஆனந்த உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தவள் திடீரென்று பூவுலகத்துக்கு வந்தவளாய்ச் சுற்று முற்றும் பார்த்தாள். தான் நின்றிருந்த இடத்தையும் இத்தனை நேரம் செய்த காரியத்தையும் நினைவுக்குக் கொண்டு வந்தாள்.

அவள் உள்ளத்தில் சகிக்க முடியாத வெட்கத்துக்கும் துன்பத்துக்கும் மத்தியில் இன்பமும் பெருமையும் உதித்தன. கட்டுப்பட்டு நின்ற பல்லவ நாட்டு ஸ்திரீ புருஷர்களைச் சிவகாமி நோக்கினாள். அவர்களுடைய கண்களிலே ததும்பிய நன்றியறிதலைக் கவனித்தாள்.

யாருடனும் ஒரு வார்த்தையும் பேசாமல் பல்லக்கில் போய் ஏறிக் கொண்டாள். பல்லக்கு மாளிகையை அடைந்தது
Back to top Go down
AruN
Admin
Admin
AruN


Posts : 1961
Join date : 2012-01-26

கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 7 Empty
PostSubject: Re: கல்கியின் சிவகாமியின் சபதம்   கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 7 Icon_minitimeMon May 28, 2012 5:59 pm

மூன்றாம் பாகம் : பிக்ஷுவின் காதல்

49. பிக்ஷுவின் வருகை



சுக்கில பட்சத்துப் பிரதமையில் சிவகாமி வாதாபி நகரின் நாற்சந்தியில் நடனம் ஆட ஆரம்பித்தாள். சுக்கில பட்சம் முடிந்து கிருஷ்ணபட்சம் வந்தது. கிருஷ்ண பட்சம் முடிவடைந்து மீண்டும் சுக்கில பட்சம் வந்தது. சிவகாமியின் வீதி நடனம் இன்னும் நடந்து கொண்டே இருந்தது.

தளபதி விரூபாக்ஷன் நடன அரங்கத்தை அடிக்கடி மாற்றிக் கொண்டிருந்தான். வாதாபி நகரின் முக்கிய நாற்சந்திகளை ஒவ்வொன்றாக அவன் தேர்ந்தெடுத்து அங்கங்கே கொண்டு போய்த் தமிழகத்து ஸ்திரீ புருஷர்களை நிறுத்தினான். சிவகாமியும் அங்கங்கே போய் நடனமாடினாள். அந்தக் காட்சியைப் பார்ப்பதற்குத் தினந்தோறும் மக்கள் பெருந்திரளாகக் கூடினார்கள். ஸ்திரீகளும் புருஷர்களும் சிறுவர் சிறுமியர்களும் திரண்டு வந்தார்கள்.

அரசாங்க அதிகாரிகள் ரதம் ஏறி வந்தார்கள். அந்தப்புரத்து ராணிகளும் சேடிகளும் பல்லக்கில் ஏறி வந்தார்கள். புலிகேசிச் சக்கரவர்த்தி காஞ்சியிலிருந்து சிறைப் பிடித்துக் கொண்டு வந்த நாட்டியப் பெண், வாதாபி நகரின் வீதிகளில் நடனமாடுகிறாள் என்னும் செய்தி எங்கெங்கோ பரவலாயிற்று.

அதன் பயனாக அக்கம் பக்கத்து ஊர்களிலேயிருந்தும் ஜனங்கள் மேற்படி காட்சியைப் பார்க்க வந்தார்கள். தூர தூரங்களிலிருந்தெல்லாம் ஜனங்கள் வர ஆரம்பித்தார்கள். தேசமெங்கும் நானா திசைகளிலும் இதைப் பற்றியே பேச்சாயிருந்தது.

சிவகாமியின் விஷயத்தில் வாதாபி ஜனங்களின் மனோபாவம் முதலில் ஒருவிதமாயிருந்தது. போகப் போக அவர்களுடைய மனோபாவம் வேறு விதமாக மாறிக் கொண்டிருந்தது.

முதலில் அந்த அற்புத நடனத்தைப் பார்த்துவிட்டு வாதாபி மக்கள் பிரமித்துப் போனார்கள். "இப்படியும் ஒரு அற்புதக் கலை உண்டா?" என்று வியந்தார்கள். ஊரை விட்டு, உற்றாரை விட்டு, சொந்த நாடு, நகரத்தை விட்டுத் தூர தேசம் வந்திருக்கும் அந்தக் கலைச் செல்வியிடம் அவர்களுக்கு அன்பும் ஆதரவும் பச்சாத்தாபமும் ஏற்பட்டன.

அவர்களில் பலர் சிவகாமியுடன் வார்த்தையாட விரும்பினார்கள். தங்கள் வியப்பையும் மதிப்பையும் அன்பையும் அபிமானத்தையும் வெளியிட விரும்பினார்கள். அவள் வசித்த மாளிகைக்குப் போய் அவளுடன் சிநேகம் செய்து கொள்ள விரும்பினார்கள். தத்தம் வீட்டுக்கு அவளை அழைத்து உபசரிக்கவும் ஆசைப்பட்டார்கள்.

ஆனால், வாதாபி ஜனங்களின் சிநேகமனப்பான்மை சிவகாமியின் உள்ளத்தில் எவ்வித எதிரொலியையும் உண்டாக்கவில்லை. நடனம் ஆடும் போது ஏற்பட்ட கிளர்ச்சிக்குப் பின்னர் இயற்கையாகத் தோன்றும் சோர்வும் ஏற்கெனவே குடிகொண்டிருந்த மனக்கசப்பும் சேர்ந்து சிவகாமியை அவர்களுடன் முகங்கொடுத்துப் பேச முடியாமற் செய்து வந்தன.

நாளாக ஆக, "அந்தத் தமிழகத்து நடனப் பெண் ரொம்ப கர்வக்காரி!" என்ற செய்தி நகரமெங்கும் பரவிற்று. ஆரம்பத்தில் ஏற்பட்டிருந்த அபிமானம், அனுதாபம் எல்லாம் வெறுப்பும் பரிகாசமுமாக மாறலாயின. சிவகாமி வரும்போதும் போகும்போதும், ஜனங்கள் அவளைப் பற்றிப் பரிகாசமாகப் பேசுவதும் கேலி செய்து சிரிப்பதும் அதிகமாகி வந்தன.

ஆரம்பத்தில் சிவகாமியின் நடனத்தை "அற்புதம்" என்றும் "தெய்வீகக் கலை" என்றும் சொல்லி வந்த அதே ஜனங்கள் கொஞ்ச நாளைக்கெல்லாம் அதைப் "பைத்தியக்காரியின் கூத்து" என்று சொல்லத் தொடங்கினார்கள்!

சிவகாமி சிவிகையில் போகும் போது சிறுவரும் சிறுமிகளும் ஊளையிட்டுக் கொண்டு பின்னால் ஓடினார்கள். சில சமயம் மண்ணையும் அவள் மீது வீசி எறிந்தார்கள். இதையெல்லாம் சிவகாமி சிறிதும் பொருட்படுத்தவில்லை. அவளுடைய நெஞ்சில் வைரம் பாய்ந்திருந்தது. அசைக்க முடியாத ஓர் உறுதி அவள் மனத்தில் ஏற்பட்டிருந்தது. புகழையும் இகழையும் பாராட்டையும் நிந்தனையையும் ஒன்றாகக் கருதும் மனோநிலையைச் சிவகாமி அடைந்திருந்தாள். கடவுளின் அழைப்பை எதிர்பார்த்துக் கொண்டு இந்தப் பூவுலகத்தில் தாமரை இலைத் தண்ணீர் போல் வாழும் முற்றும் உணர்ந்த ஞானியை அவள் ஒத்திருந்தாள்.

சிவகாமி வாதாபி வீதிகளில் நடனம் ஆட ஆரம்பித்து ஏறக்குறைய ஒன்றரை மாத காலம் ஆயிற்று. ஒருநாள் வழக்கம் போல் சிவகாமி நடனம் ஆடிக் கொண்டிருந்தாள். சூரியாஸ்தமன பேரிகை முழக்கம் கேட்டது. சிவகாமி ஆட்டத்தை நிறுத்தினாள். சற்று மூச்சு வாங்குவதற்காக நின்றுவிட்டுப் பல்லக்கை நோக்கிச் செல்லத் திரும்பினாள்.

அவள் திரும்பிய திக்கில் தோன்றிய ஒரு தோற்றம் அவளைச் சிறிது நேரம் மனம் குழம்பித் திகைத்து நிற்கும்படிச் செய்து விட்டது. அந்தத் தோற்றம் நாகநந்தியடிகளின் உருவந்தான்.

வியப்பினால் விரிந்த கண்களில் கோபாக்னியின் பொறி பறக்க, இமையா நாட்டத்துடன் நாகநந்தி தன்னை வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பதைச் சிவகாமி பார்த்தாள். நாகநந்தியின் முகபாவம் கணநேரத்தில் மாறியது. கண்களில் கோபாக்னி நிறைந்து பரிதாபம் தோன்றியது. அவளுடைய கண்களின் பார்வையும் முகத்தின் பாவமும் "மன்னித்து விடு" என்று கெஞ்சுவது போன்ற உணர்ச்சியை ஊட்டின.

இதனால் மேலும் திகைப்படைந்த சிவகாமி, மெதுவாகச் சுயப்பிரக்ஞை அடைந்து குழப்பத்தைச் சமாளித்துக் கொண்டு தலை குனிந்த வண்ணம் நடந்து சென்று பல்லக்கில் ஏறிக் கொண்டாள்.

பல்லக்கு வழக்கம் போல் மாளிகையை நோக்கிச் சென்றது. ஆனால், சிவகாமியின் உள்ளம், ஜனக் கூட்டத்தின் நடுவே நின்ற நாகநந்தியடிகளிடம் இருந்தது.

"இந்த புத்த பிக்ஷு யார்? வேடம் பூண்ட வாதாபிச் சக்கரவர்த்திதானா? உருவம் அப்படியே இருக்கிறது, ஆனால் கண்களின் தோற்றத்திலும் முகபாவத்திலும் எவ்வளவு வித்தியாசம்? உணர்ச்சி என்பதே இல்லாத கல்நெஞ்சைப் பிரதிபலிக்கும் புலிகேசியின் முகத்துக்கும் கனிவும் இரக்கமும் கலைப் பரவசமும் ததும்பிய பிக்ஷுவின் முகத்துக்கும், எவ்வளவு வித்தியாசம்...?"

பிக்ஷுவின் தோற்றம் சிவகாமிக்குப் பல்லவ நாட்டையும் அரண்ய வீட்டையும் நினைவூட்டியது. அந்தக் காலத்து வாழ்வெல்லாம் ஞாபகம் வந்தது. உண்மையில் ஒரு வருஷத்துக்கு மேல் ஆகவில்லை. ஆனால், எத்தனை யுகம் ஆகிவிட்ட மாதிரி தோன்றுகிறது!

மாளிகையை அடைந்த பிறகும் சிவகாமியின் உள்ளம் வழக்கமான அமைதியை அடையவில்லை. ஏதோ ஓர் ஆவல், அர்த்தமில்லாத பரபரப்பு, அவள் மனத்தில் குடிகொண்டிருந்தது. அவளுடைய உள்ளம் அப்படி யாரை எதிர்பார்த்தது? அவளுடைய கண்கள் யாரை எதிர்பார்த்து அவ்விதம் அடிக்கடி வாசற்பக்கம் நோக்கின? நாகநந்தி பிக்ஷுவையா?

இரவு ஒரு ஜாமம் முடியும் தறுவாயில் நாகநந்தி அந்த மாளிகைக்குள் நுழைந்த போது, சிவகாமியின் கண்களில் தோன்றிய ஒளியும் அவளுடைய முகபாவமும் அவள் புத்த பிக்ஷுவைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள் என்பதை உணர்த்தின.

நாகநந்தியும் சிவகாமியும் ஒருவர் முகத்தை ஒருவர் ஏறிட்டுப் பார்த்தார்கள். அவர்களுடைய கண்களின் தீக்ஷண்யம், ஒருவருடைய இருதய அந்தரங்கத்தை இன்னொருவர் ஊடுருவிப் பார்க்க முயன்றதாகத் தெரியப்படுத்தியது.

சற்று நேரம் அந்த மாளிகையில் மௌனம் குடிகொண்டிருந்தது. மௌனத்தைக் கலைத்துக் கொண்டு பிக்ஷுவின் தழு தழுத்த குரல், "சிவகாமி! என்னை மன்னித்துவிடு!" என்று கூறியது
Back to top Go down
AruN
Admin
Admin
AruN


Posts : 1961
Join date : 2012-01-26

கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 7 Empty
PostSubject: Re: கல்கியின் சிவகாமியின் சபதம்   கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 7 Icon_minitimeMon May 28, 2012 6:01 pm

மூன்றாம் பாகம் : பிக்ஷுவின் காதல்

50. சிவகாமியின் சபதம்



உட்கார்ந்திருந்த சிவகாமி, சட்டென்று எழுந்து நின்றாள். அவளுடைய உதடுகள் துடித்தன. புருவங்கள் மேலேறின. கண்களிலிருந்து மின்னல் கிளம்பிப் புத்த பிக்ஷுவைத் தாக்கின.

"கள்ள பிக்ஷுவே! எதற்காக என்னிடம் மன்னிப்புக் கேட்கிறீர்? எனக்கு என்ன அபசாரம் செய்தீர்?" என்ற சொற்கள் சீறிக்கொண்டு பாயும் அம்புகளைப் போலச் சிவகாமியின் வாயிலிருந்து புறப்பட்டன.

பிக்ஷு திகைத்துப் போனார். தவறாக எதையோ சொல்லி விட்டோ ம் என்ற உணர்ச்சியினால் ஏற்பட்ட தடுமாற்றத்துடன், "ஆம், சிவகாமி! நான் உனக்குப் பெருந் தீங்குதான் செய்து விட்டேன். எல்லாம் விவரமாகச் சொல்ல வேண்டும். அவசரமாக இரண்டொரு வார்த்தையில் சொல்லக்கூடிய விஷயம் அல்ல. தயவு செய்து சற்றுச் சாவதானமாக உட்கார்ந்து கேள்!" என்றார்.

"ஐயா! விவரமாக எல்லாம் சொல்லுவதற்கு முன்னால் ஒரு விவரம் சொல்லும். நீர் யார்? கருணாமூர்த்தியான கௌதம புத்தரின் சங்கத்தைச் சேர்ந்து சர்வ பரித்யாகம் செய்த துறவியா? அல்லது வஞ்சக நோக்கத்துடன் காவித் துணி வேஷம் தரித்த சளுக்க குலத்துச் சக்கரவர்த்தியா? சிற்ப சித்திரக் கலைகளிலும் பரதநாட்டியக் கலையிலும் உண்மை அபிமானங் கொண்ட பரதேசியா? அல்லது ஓர் ஏழைச் சிற்பி மகளைக் கெடுப்பதற்காகப் பிக்ஷு வேஷம் பூண்ட இராவண சந்நியாசியா? நீர் யார்? நாகநந்தியா? புலிகேசியா?"

இவ்விதம் கேட்டுச் சிவகாமி நிறுத்தியபோது, வானமுகட்டில் ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலை வரையில் அதிர்ந்து நடுங்கும்படியாக மின்னல் மின்னி இடி இடித்து ஓய்ந்தது போலிருந்தது.

இவ்வளவு இடி மின்னல்களும் நாகநந்தியின் முகபாவத்தில் எவ்வித மாறுதலையும் உண்டு பண்ணவில்லை. அவர் அதிசயமான அமைதியுடன், "அம்மா சிவகாமி! உன்னுடைய சந்தேகங்களுக்குக் காரணம் இல்லாமற் போகவில்லை. ஆனால், உண்மையிலேயே நான் உலகப் பற்றறுத்த புத்த பிக்ஷுதான். உன்னுடைய பரத நாட்டியக்கலைக்கு என் உள்ளத்தைப் பறி கொடுத்தவன்தான். விலங்கு இனத்தைச் சேர்ந்த மக்களின் முன்னால் தெரு வீதிகளில் உன்னை நடனமாடச் செய்த நிர்மூடப் புலிகேசி நான் அல்ல. பூர்வஜென்மத்தில் செய்த பாவத்தினால் அவனோடு உடன் பிறந்த துரதிருஷ்டசாலி நான். முன்னொரு சமயம், இருபத்தைந்து வருஷங்களுக்கு முன்னால் என் தம்பி புலிகேசியைக் கொலைகாரனிடமிருந்து காப்பாற்றுவதற்காக அவனுடைய உடையை நான் அணிந்து நடித்தேன். மறுபடியும் இருபத்தைந்து வருஷங்களுக்குப் பின் உன்னுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு அவ்விதம் செய்தேன். ஆம், சிவகாமி காஞ்சிக் கோட்டைக்கு வெளியே காட்டின் நடுவே எனக்கு முன்னால் நீ கைகூப்பி வணங்கி, 'என் தந்தையைக் காப்பாற்றுங்கள்!' என்று வேண்டிக் கொண்டாய். அதை நிறைவேற்றுவதற்காகத் துறவியின் காஷாயத்தைக் களைந்து விட்டுச் சக்கரவர்த்தியின் ஆடைகளை அணிந்து கொண்டேன்...."

சிவகாமி பரபரப்புடன் பிக்ஷுவின் அருகில் ஓடிவந்தாள். மண்டியிட்டுக் கை கூப்பிய வண்ணம், "சுவாமி! இந்த அபலைப் பெண்ணின் ஆத்திர மொழிகளை மன்னித்து விடுங்கள். என் தந்தையைத் தாங்கள் காப்பாற்றினீர்களா? அவர் உயிரோடிருக்கிறாரா? எங்கேயிருக்கிறார்? எப்படியிருக்கிறார்?" என்று அலறினாள்.

"அம்மா! உன்னுடைய தந்தையின் உயிரைக் காப்பாற்றினேன். உனக்கு நான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டேன். கொஞ்சம் அமைதியாக உட்கார்ந்து கேட்டால் விவரங்களும் சொல்கிறேன்" என்றார் பிக்ஷு.

சிவகாமி உட்கார்ந்தாள். புலிகேசியைப் போல் வேஷம் தரித்துச் சென்று, கையும் காலும் வெட்டப்படுவதற்கிருந்த ஆயனரைக் காப்பாற்றியதையும், ஆனால், அவர் தவறி மலை மீதிலிருந்து கீழே விழுந்ததையும், அதனால் கால் முறிந்ததையும், உணர்விழந்த நிலையில் அரண்ய வீட்டுக்குக் கொண்டுபோய் அங்கு அவருக்கு உணர்வு வந்த பிறகு விடைபெற்று வந்ததையும், புத்த பிக்ஷு சொல்லி வந்தபோது சிவகாமிக்கு அவரிடம் எல்லையற்ற நன்றி உணர்ச்சி உண்டாயிற்று. தான் அவரைக் குறித்துச் சந்தேகித்ததெல்லாம் எவ்வளவு தவறு என்று அடிக்கடி நினைத்துப் பச்சாத்தாபப்பட்டாள். நீர் ததும்பிய கண்களினால் பிக்ஷுவைப் பார்த்துச் சொன்னாள்: "சுவாமி! என் அருமைத் தந்தையைக் கொடிய தண்டனையிலிருந்து மீட்டு அவருடைய உயிரையும் காப்பாற்றிய தங்களுக்கு என் ஆயுள் உள்ள வரையில் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். அப்படியிருக்கும் போது தாங்கள் இங்கு வந்ததும் என்னிடம் மன்னிப்புக் கேட்டீர்களே, அது ஏன்? தங்களை அநியாயமாகச் சந்தேகித்ததற்காக நான் அல்லவா தங்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்! சளுக்க சக்கரவர்த்தியும் தாங்களும் ஒருவரேதான் என்று தவறாக எண்ணியதனால், தங்களைப் பற்றி அநியாயமாகச் சந்தேகப்பட்டேன். என்னை இந்த வாதாபிக்கு அழைத்து வந்தவரும் நாற்சந்தியில் நடனமாடச் செய்தவரும் தாங்கள்தான் என்று எண்ணிக் கோபம் கொண்டிருந்தேன். சுவாமி! என்னை மன்னித்துவிடுங்கள்!" என்று சிவகாமி கூறியபோது, அவளுடைய கண்களில் நீர் தாரை தாரையாகப் பெருகியது.

"சிவகாமி! நான் உன்னை மன்னிக்க வேண்டிய அவசியமில்லை. உண்மையிலே நீ தான் என்னை மன்னிக்க வேண்டும். உனக்கு நான் பெரிய துரோகம் செய்திருக்கிறேன். இன்று இந்தத் தூரதேசத்தில் நீ தன்னந்தனியாகச் சிறைப்பட்டிருப்பதற்குக் காரணம் நான்தான்! என்னை மன்னித்துவிடு!"

இவ்விதம் புத்த பிக்ஷு உணர்ச்சியினால் கம்மிய குரலில் கூறிய போது, சிவகாமி தன் கண்களில் பெருகிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டு நாகநந்தியின் முகத்தை வியப்புடன் ஏறிட்டுப் பார்த்தாள்.

"ஆம், சிவகாமி! நான் சொல்வது சத்தியம். வாதாபிச் சைனியம் காஞ்சியின் மீது படையெடுத்து வருவதற்கே காரணமாயிருந்தவன் நான்தான். என் சகோதரன் புலிகேசிக்கு முதலில் அந்த உத்தேசம் இருக்கவில்லை. வாதாபிச் சைனியம் முழுவதும் வேங்கியை நோக்கிப் போவதாயிருந்தது. வாதாபிச் சைனியத்தை இரண்டாகப் பிரித்துப் புலிகேசியைக் காஞ்சிக்கு விரைந்து வரும்படி கூறியவன் நான்தான். வேங்கி ராஜ்யத்தின் மீது படையெடுக்கத் தம்பி விஷ்ணுவர்த்தனனை அனுப்பினால் போதும் என்றும் எழுதினேன்... அதன் பலன் என்ன விபரீதமாயிற்று, தெரியுமா? விஷ்ணுவர்த்தனனுடைய பத்தினி இன்று விதவையாகியிருக்கிறாள். அவளையும், அவளுடைய சின்னஞ் சிறு புதல்வனையும் இன்றைய தினந்தான் இந்நகரில் பத்திரமாய்க் கொண்டு வந்து சேர்த்தேன்..."

"சுவாமி! இத்தனை நாளும் இந்த நகரில் தாங்கள் இருக்கவில்லையா?" என்று சிவகாமி கேட்டாள்.

"இல்லை, சிவகாமி! இருந்திருந்தால் உன்னுடைய தெய்வீக நடனக்கலை இப்படி சந்தி சிரிப்பதற்கு விட்டிருப்பேனா? கலை உணர்ச்சியில்லாத நிர்மூடப் புலிகேசி இப்படிச் செய்துவிட்டான்! அவன் இவ்விதம் செய்வான் என்று தெரிந்திருந்தால் வடபெண்ணைக் கரையில் உன்னை அவனிடம் ஒப்படைத்திருக்க மாட்டேன்.....

பிக்ஷு வடபெண்ணைக் கரையைப் பற்றிக் கூறியதும் அன்றொரு நாள் இரவு, சிவகாமி கண்ட கனவுத் தோற்றம் அவள் நினைவுக்கு வந்தது. "வடபெண்ணைக் கரையில் என்னை விட்டு விட்டுப் போனீர்களா? அது எப்படி? உங்களைக் காஞ்சிக்குப் பக்கத்தில் அல்லவா நான் பார்த்து வரம் கேட்டேன்?" என்றாள்.

"சக்கரவர்த்தி வேஷம் பூண்டு உன் தந்தையைக் காப்பாற்றிய பின் உடனே என் வேஷத்தைக் கலைத்துவிடவில்லை, சிவகாமி! அதே வேஷத்தில் மகேந்திர பல்லவனுடன் போரிட்டேன். மணி மங்கலத்தில் அவனை முறியடித்துவிட்டு உன்னைத் தொடர்ந்து வந்தேன். பொன்முகலி நதிக் கரையில் நீ என்னைப் பார்த்து, சிறைப்பட்ட பல்லவ நாட்டுப் பெண்களையெல்லாம் விடுதலை செய்ய வேண்டும் என்று வரங்கேட்டாய். வாதாபிக்கு நீ மனத் திருப்தியுடன் வருவதாய் இருந்தால் அவர்களை விடுதலை செய்வதாகச் சொன்னேன். நீயும் சம்மதித்தாய். அப்போது உன்னையும் நான் விடுதலை செய்து உன் தந்தையிடம் சேர்ப்பித்திருக்கலாம். அப்படி நான் செய்யவில்லை. உன்னை வஞ்சித்து வாதாபிக்குக் கொண்டு வந்தேன்!... ஆனால், நான் இல்லாத சமயத்தில் இந்த மூடன் புலிகேசி இப்படி உன்னை அலங்கோலப்படுத்துவான் என்று மட்டும் நினைக்கவேயில்லை. உன்னிடம் நான் மன்னிப்புக் கேட்டுக் கொண்டது ஏன் என்று தெரிகிறதா, சிவகாமி!" என்றார் பிக்ஷு.

"தெரிகிறது, சுவாமி! இதற்குமுன் எனக்குக் குழப்பம் அளித்துக் கொண்டிருந்த இன்னும் பல விஷயங்களும் விளங்குகின்றன. ஆனால், ஒரே ஒரு சந்தேகம் மட்டும் இன்னும் தீரவில்லை. எதற்காக இவ்வளவெல்லாம் நீங்கள் செய்தீர்கள்? எதற்காக இவ்வளவு சூழ்ச்சிகளும் பிரயத்தனங்களும் செய்து, இந்த அபலைப் பெண்ணை இங்கே கொண்டு வந்து சேர்த்தீர்கள்? உலகத்தைத் துறந்து பிக்ஷு விரதம் பூண்ட தங்களுக்கு இந்த ஏழைப் பெண்ணால் என்ன உபயோகம்?... கால் ஒடிந்து ஆதரவற்றுக்கிடக்கும் என் தந்தையிடமிருந்து என்னைப் பிரித்துக் கொண்டு வந்ததில் தாங்கள் என்ன லாபத்தைக் கண்டீர்கள்? என்ன பலனை உத்தேசித்து என்னை இங்கே சிறைப்படுத்தி வைத்திருக்கிறீர்கள்?...."

"சிவகாமி! சொல்கிறேன், கேள்! என் சொற்படி காலமல்லாத காலத்தில் காஞ்சி மேல் படையெடுத்த காரணத்தினால் வாதாபியின் வீர சைனியத்தில் பாதிக்கு மேல் அழிந்துவிட்டது. வேங்கியை வென்று சென்ற வருஷம் மகுடம் சூடிய விஷ்ணுவர்த்தனன் அந்த வெற்றியை நிலைநாட்டிக் கொள்ள முடியாமல் மாண்டான். இந்த விபரீதங்களுக்கெல்லாம் காரணமானவள் நீதான்! உன்னை முன்னிட்டுதான் இதையெல்லாம் நான் செய்தேன். ஏன் என்று சொல்லுகிறேன், கேள்!"

இந்தப் பூர்வ பீடிகையுடன் நாகநந்தி பிக்ஷு தமது கதையைக் கூறத் தொடங்கினார். அஜந்தா குகைகளில் தாம் கழித்த இளம் பிராய வாழ்க்கையைப் பற்றிக் கூறினார். அஜந்தா குகைச் சுவரில் தாம் பார்த்த பரதநாட்டியப் பெண் சித்திரத்தைக் குறித்தும், அதைப்பற்றித் தாம் கண்ட மனோராஜ்யக் கனவுகளைக் குறித்தும் சொன்னார். தென்னாட்டின் நிலைமை எப்படியிருக்கிறதென்று அறிந்து கொள்ளத் தாம் யாத்திரை வந்தது பற்றியும், அப்போது ஆயனர் வீட்டில் அஜந்தா சித்திர கன்னிகை உயிர் பெற்று வந்து நடனமாடிய காட்சியைக் கண்டு பிரமித்தது பற்றியும் உணர்ச்சி ததும்ப விவரித்தார்.

"சிவகாமி! அன்று முதல் நான் ஒரு புது மனிதன் ஆனேன். சளுக்க சாம்ராஜ்யத்தின் மகோன்னதத்தைப் பற்றி அதுவரை நான் கட்டிக் கொண்டிருந்த ஆகாசக் கோட்டைகள் தகர்ந்து விழுந்தன. இந்தப் பரந்த பரதகண்டம் முழுவதையும் புத்த சங்கத்தின் ஆதிக்கத்தின் கீழ்க் கொண்டு வர வேண்டும் என்றும், அப்பேர்ப்பட்ட மகா புத்த சங்கத்துக்கு நான் தலைமைப் பிக்ஷு ஆகவேண்டும் என்றும் நான் கொண்டிருந்த மனோரதங்களும் மறைந்தன. 'சாம்ராஜ்யங்களும் புத்த சங்கங்களும் எப்படியாவது போகட்டும். உன்னை நடனமாடச் சொல்லிப் பார்த்துக் கொண்டே என் வாழ்நாளைக் கழித்து விடுவது' என்று சங்கல்பம் செய்து கொண்டேன். அதற்குப் பிறகு உன்னை எப்படி இந்த வாதாபி நகருக்குக் கொண்டு சேர்ப்பது என்பது ஒன்றே என் மனக்கவலை ஆயிற்று. அதற்காக என்னவெல்லாமோ சூழ்ச்சிகள் செய்தேன். எத்தனையோ உபாயங்களைக் கையாண்டேன்...."

இப்படிப் பிக்ஷு சொல்லி வந்தபோது, சிவகாமியின் உள்ளத்தில் ஏற்கெனவே குடிகொண்டிருந்த பெருமிதமான கர்வமும் பரிதாப உணர்ச்சியும் சேர்ந்தாற்போல் பொங்கிக் கொண்டு வந்தன. 'ஆகா! இந்த ஏழைச் சிற்பியின் மகள் காரணமாக இரண்டு பெரிய சாம்ராஜ்யங்கள் சண்டைபோட நேர்ந்ததல்லவா?' என்ற பெருமித கர்வத்தை அடுத்து, 'ஐயோ! காஞ்சியிலிருந்து வாதாபி வரும்போது நான் பார்த்த அத்தனை கொடுமைகளும் என் காரணமாக ஏற்பட்டனவா?' என்ற பரிதாப உணர்ச்சியும் மேலிட்டு வந்தது.

"சிவகாமி! உன்னுடைய கலையின் மேல் நான் கொண்ட மோகத்தினால் ஒரு பெரிய யுத்தத்தையே உண்டு பண்ணினேன். பயங்காளியும், கோழையுமான அந்த அற்பன் மாமல்லனிடமிருந்து உன்னைக் காப்பாற்ற இவ்வளவு பிரம்மப் பிரயத்தனங்களும் செய்தேன். ஆனால் அவ்வளவும், இப்போது நிஷ்பலனாயின. நான் இல்லாத சமயத்தில் உன்னைத் தெரு வீதிகளின் நாற்சந்தியில் ஆடச்செய்து, உன்னையும் உன் கலையையும் நிர்மூடன் புலிகேசி கேவலப்படுத்திவிட்டான். சிவகாமி! என்னை மன்னித்துவிடு, நீ பட்ட அவமானத்திற்கும் நீ அடைந்த துன்பத்திற்கும் பரிகாரம் செய்து விடுகிறேன். உன்னை உன் தந்தை வீட்டில் கொண்டு போய் விட்டுவிட ஏற்பாடு செய்கிறேன். சக்கரவர்த்தியிடம் போராடி இதற்கு அனுமதியும் பெற்று வந்துவிட்டேன்."

இதைக் கேட்டதும் சிவகாமி நியாயமாகத் துள்ளிக் குதித்துக் குதூகலமடைந்திருக்க வேண்டுமல்லவா? விதி வசத்தினாலோ அல்லது விசித்திரக் கோணல்கள் நிறைந்த பெண் மனோபாவத்தினாலோ, சிவகாமி அவ்விதம் மகிழ்ச்சியடையவில்லை. மௌனமாகச் சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள்.

"சிவகாமி! ஏன் பேசாமலிருக்கிறாய்? எப்போது புறப்படலாம், சொல்! உன்னைப் பல்லக்கில் ஏற்றித் தக்க பாதுகாப்புடன் அனுப்பிவைக்கிறேன். உனக்குப் பணிவிடைப் புரியப் பணிப்பெண்களையும் உன்னைப் பாதுகாப்பதற்கு வீரர்களையும் அனுப்பி வைக்கிறேன். பொன்முகலி ஆறு வரையில் உன்னைக் கொண்டு போய் விட்டுவிட்டு அவர்கள் திரும்புவார்கள்..." என்று புத்த பிக்ஷு கூறி வந்தபோது, அதுகாறும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த சிவகாமி சட்டென்று எழுந்து நின்று, ஆவேசம் ததும்பிய குரலில் பின்வரும் பயங்கர மொழிகளைக் கூறினாள்.

"அடிகளே! கேளுங்கள், இந்த வாதாபி நகரத்தை விட்டு நான் எப்போது கிளம்புவேன் தெரியுமா? பயங்கொள்ளி என்று நீங்கள் அவதூறு சொல்லிய வீர மாமல்லர் ஒரு நாள் இந்நகர் மீது படையெடுத்து வருவார். நரிக்கூட்டத்தின் மீது பாயும் சிங்கத்தைப் போலச் சளுக்க சைனியத்தைச் சின்னா பின்னம் செய்வார். நாற்சந்தி மூலைகளில் என்னை நடனம் ஆடச்செய்த பாதகப் புலிகேசியை யமன் உலகத்துக்கு அனுப்புவார். தமிழகத்து ஸ்திரீ புருஷர்களைக் கையைக் கட்டி ஊர்வலம் விட்ட வீதிகளில் இரத்த ஆறு ஓடும். அவர்களை நிறுத்திச் சாட்டையால் அடித்த நாற்சந்திகளிலே வாதாபி மக்களின் பிரேதங்கள் நாதியற்றுக்கிடக்கும். இந்தச் சளுக்கர் தலைநகரின் மாட மாளிகை, கூட கோபுரங்கள் எரிந்து சாம்பலாகும், இந்த நகரம் சுடுகாடாகும். அந்தக் காட்சியை என் கண்ணால் பார்த்துவிட்டுப் பிறகுத்தான் இந்த ஊரைவிட்டுக் கிளம்புவேன். சளுக்கப் பதர்களை வென்று வெற்றி மாலை சூடிய மாமல்லர் என் கரத்தைப் பிடித்து அழைத்துக்கொண்டு போவதற்கு வருவார். அப்போதுதான் புறப்படுவேன், நீர் அனுப்பிப் போக மாட்டேன். பல்லக்கில் ஏற்றி அனுப்பினாலும் போகமாட்டேன். யானைமீது வைத்து அனுப்பினாலும் போக மாட்டேன்!"

இந்தப் பயங்கரமான சபதத்தைக் கேட்ட நாகநந்தியின் முகத்திலே புன்னகை தோன்றியது. தம்முடைய சூழ்ச்சி மீண்டும் பலித்துவிட்டது என்று எண்ணி அந்தப் பொல்லாத பிக்ஷு உள்ளுக்குள் உவகை அடைந்தார் போலும்!
Back to top Go down
AruN
Admin
Admin
AruN


Posts : 1961
Join date : 2012-01-26

கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 7 Empty
PostSubject: Re: கல்கியின் சிவகாமியின் சபதம்   கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 7 Icon_minitimeMon May 28, 2012 6:02 pm

மூன்றாம் பாகம் : பிக்ஷுவின் காதல்

51. ஜயஸ்தம்பம்



வாதாபி நகருக்கு இரண்டு காத தூரம் கிழக்கே ஒரு குன்று இருந்தது. சுற்றிலும் காடு அடர்ந்த அந்தக் குன்றின் ஒருபக்கத்துச் சரிவில் அடுத்தடுத்துக் குடைந்த குகைகள் இரண்டு இருந்தன. இரண்டு குகைகளும் குடையும் வேலை பூர்த்தியாகாமல் அரைகுறையாக விடப்பட்டிருந்தன. பௌத்தர்களோ சமணர்களோ அந்தக் குகைகளைக் குடைய ஆரம்பித்திருக்க வேண்டும். அப்புறம் எந்தக் காரணத்தினாலோ வேலையை நடுவில் நிறுத்தி விட்டுப் போயிருக்க வேண்டும். குகைகளில் ஒன்றுக்குள்ளேயிருந்து சல சல வென்ற சப்தத்துடன் ஒரு சிற்றருவி வெளியே வந்து கொண்டிருந்தது. குகையின் வெளியில் அந்த அருவி அங்குமிங்கும் தவழ்ந்து விளையாடி முத்து நீர்த்துளிகளை வாரி இறைத்துவிட்டுக் கீழ்நோக்கிச் சென்று அடர்ந்த விருட்சங்களின் நிழலில் மறைந்தது.

இவ்வளவு அழகான இயற்கைக் காட்சியின் ரம்யத்தைக் கெடுத்து அருவருப்பையுண்டு பண்ணக்கூடிய பொருள்கள் சில அருவியின் இருபுறத்துப் பாறைகளிலும் விருட்சங்களின் அடியிலும் காணப்பட்டன. அவை மனிதர்களின் மண்டை ஓடுகள், மாட்டுக் கொம்புகள் முதலிய காபாலிகர் கூட்டத்தின் சின்னங்களாகும். பாறைகள் சிலவற்றில் இரத்தக்கறை படிந்திருந்ததிலிருந்து, அந்தப் பாறைகள் சமீபத்தில் பலிபீடங்களாக உபயோகப்பட்டிருக்கின்றன என்பது தெரிய வந்தது.

மாலை நேரத்து மஞ்சள் வெயிலினால் பச்சை மரங்களும் பசும்பொன் நிறம் பெற்றுத் திகழ்ந்த நேரத்தில், மேற்கூறிய குகைகளுக்குச் சற்றுத் தூரத்தில் இருந்த ஒரு மொட்டைப் பாறையிலே நாலுபேர் உட்கார்ந்திருந்தார்கள். தொலை தூரம் பிரயாணம் செய்திருந்த காரணத்தினால் அவர்கள் பெரிதும் களைப்படைந்திருந்தார்கள். ஆடைகள் அழுக்கடைந்திருந்தன. தலையில் ரோமம் சடை விழுந்திருந்தது. முகவாய்க் கட்டையில் ரோமம் அடர்ந்திருந்தது. அவர்களுடைய இளம்பிராயத்துக்குப் பொருந்தாத சுருக்கங்கள் முகத்தில் காணப்பட்டன. கண்கள் குழிவிழுந்து போயிருந்தன. ஆயினும், அந்தக் கண்களிலே ஒரு அசாதாரண ஒளி, இணையில்லா மனோதைரியத்தையும் எடுத்த காரியத்தை நிறைவேற்றும் உறுதியையும் காட்டும் ஜீவசக்தி, பிரகாசித்தது.

குன்றின் உச்சியில் ஒரு மனிதன் நின்று நாலாபுறமும் உற்று நோக்கிக் கொண்டிருந்தான். கீழே மொட்டைப் பாறையில் உட்கார்ந்திருந்தவர்கள் அடிக்கடி அவனை அண்ணாந்து நோக்கிக் கொண்டிருந்தார்கள்.

திடீரென்று மேலே நின்ற மனிதன் குதூகலம் நிறைந்த குரலில், "அதோ!" என்றான். அந்தக் குரலிலிருந்தே அவன் நமது பழைய நண்பன் குண்டோ தரன் என்பதை அறிந்து கொள்கிறோம்.

"அதோ!" என்ற சத்தத்தைக் கேட்டதும் மொட்டைப் பாறையில் உட்கார்ந்திருந்த நால்வரின் முகங்களும் மலர்கின்றன. அவன் சுட்டிக்காட்டிய திக்கை அவர்கள் ஆவலுடன் உற்றுப் பார்க்கிறார்கள். மரங்கள் அடர்ந்த காட்டுக்குள்ளேயிருந்து ஒருவன் வருகிறான். அவன் வேறு யாருமில்லை; பல்லவ நாட்டு ஒற்றர் தலைவன் சத்ருக்னன்தான், மற்றவர்களைப் போல் அன்றிச் சத்ருக்னன் நன்றாக க்ஷவரம் செய்து கொண்டு சுத்தமான முகத்துடன் விளங்குகிறான். அதிலிருந்தே அவன் நகரத்துக்குப் போய் வருகிறான் என்று அறிந்து கொள்ளலாம்.

தோளிலே துணிப்பை தொங்க வந்த சத்ருக்னனை ஐந்து பேரும் சூழ்ந்து கொண்டார்கள். "சத்ருக்னா! காயா? பழமா சீக்கிரம் சொல்!" என்றார்கள்.

"பழந்தான்" என்று சொல்லிக் கொண்டே, சத்ருக்னன் தோளில் தொங்கிய பையை எடுத்து அவிழ்த்தான். அதிலிருந்த பழங்கள் கீழே விழுந்து உருண்டு ஓடின. அவற்றைப் பொறுக்குவதற்கு எல்லாரும் பட்ட அவசரத்திலிருந்து அவர்கள் எவ்வளவு தூரம் பசித்திருந்தார்கள் என்று தெரிய வந்தது. பசித்ததோ, இல்லையோ தரையில் விழுந்த பழங்களின் மேல் கவனம் செலுத்தாமல், சத்ருக்னன் என்ன சொல்லப் போகிறான் என்பதிலேயே கவனம் செலுத்திய ஒருவரும் அவர்களில் இருந்தார். அவர்தான் மாமல்லர் என்று சொல்ல வேண்டியதில்லை.

"சத்ருக்னா! பழம் என்கிறாயே? அப்படி என்றால் என்ன? சிவகாமியைப் பார்த்தாயா?" என்று கேட்டார்.

"ஆம் பிரபு, பார்த்தேன்!" என்று கூறி மறுபடியும் சத்ருக்னன் மௌனம் சாதித்தான்.

"ஏன் இப்படிப் பேசாமல் நிற்கிறாய்? மேலே சொல், சத்ருக்னா! எங்கே பார்த்தாய்? எந்த நிலையில் பார்த்தாய்?" என்று மாமல்லர் கேட்டார்.

"பிரபு! சிவகாமி அம்மையைப் பார்த்தேன். சௌக்கியமாக இருக்கிறார், கவலைக்கு ஒரு காரணமும் இல்லை. எங்கே பார்த்தேன், எப்படிப் பார்த்தேன் என்பதை விவரமாகச் சொல்ல வேண்டும் எல்லாரும் உட்காருங்கள், சொல்கிறேன்!" என்றான் சத்ருக்னன்.

அவ்வண்ணமே அனைவரும் பாறை மீது உட்கார்ந்தார்கள். சத்ருக்னன் சொல்லத் தொடங்கினான்: "நேற்று மாலை வளையல் வியாபாரியின் வேஷத்தில் வாதாபி நகருக்குள் பிரவேசித்தேன். கோட்டை வாசலுக்குள் பிரவேசிப்பதில் எவ்விதக் கஷ்டமும் இருக்கவில்லை. ஜனங்கள் தாராளமாய் நகருக்குள் வந்து கொண்டும், போய்க் கொண்டுமிருக்கிறார்கள். எந்த எதிரியின் படையெடுப்பையாவது எதிர்பார்த்தால் அல்லவா கோட்டையில் கட்டுக்காவல் வைக்கப் போகிறார்கள்? வாதாபியின் வீரப்படைகள் எட்டுத் திசையும் சென்று திக்விஜயம் செய்து கொண்டிருக்கும்போது...."

அச்சமயம் சேனாதிபதி பரஞ்சோதி குறுக்கிட்டு, "என்ன உளறுகிறாய், சத்ருக்னா! திக்விஜயமாவது மண்ணாங்கட்டியாவது? தென்னாட்டுக்குச் சென்ற வாதாபிப் படைகள் தோற்றுத் திரும்பி ஓடி வந்திருக்கின்றன! வேங்கிக்குப் போன சளுக்க சைனியத்தின் பாடும் ஆபத்துத்தான் என்று தெரிகிறது. அப்படியிருக்க வாதாபிப் படைகளின் திக்விஜயமாவது...?" என்றார்.

சத்ருக்னன் பணிவுடன் கூறினான்: "சேனாபதி! வாதாபிப் படைகளின் திக்விஜயம் என்று நான் கூறியது என்னுடைய சொந்த மொழியல்ல. வாதாபி நகரத்தின் பிரதான நாலு வீதிச் சந்திப்பிலே ஒரு நெடிதுயர்ந்த ஜயஸ்தம்பம் நாட்டியிருப்பதைப் பார்த்தேன். அந்த ஜயஸ்தம்பத்திலே பிராகிருத மொழியில் எழுதியிருக்கும் மொழிகளையும் படித்தேன். கிட்டத்தட்ட அதில் எழுதியிருப்பதை ஞாபகம் உள்ள வரை அப்படியே சொல்லிப் பார்க்கிறேன்: "மகா ராஜாதிராஜ ராஜமார்த்தாண்ட ரணதுங்க சூர சளுக்க குலதிலக சப்தலோக தேவேந்திர புலிகேசிச் சக்கரவர்த்தி தென் திசையை நோக்கி விஜயம் செய்யப் புறப்பட்டுச் சென்று மகேந்திர பல்லவனை வடபெண்ணைக் கரையில் முறியடிக்க, மகேந்திரன் போரில் புறமுதுகிட்டோ டிக் காஞ்சிக் கோட்டைக்குள் பதுங்கிக் கொள்ள, புலிகேசிச் சக்கரவர்த்தி மேலும் தெற்கு நோக்கித் திக்விஜயம் கிளம்பிக் காவேரி நதிக்கு யானைப்பாலம் அமைத்துக் கடந்து, அங்கே சக்கரவர்த்தியிடம் அடைக்கலம் புகுவதற்குக் காத்திருந்த சேர சோழ களப்பாள பாண்டிய மன்னர்களின் சிரங்களில் தம் திருப்பாத கமலங்களை வைத்து அருள் புரிந்து, திரும்புங்காலையில், காஞ்சிக் கோட்டையைப் பலங்கொண்டு தாக்க, மகேந்திர பல்லவன் சரணாகதியடைந்து காப்பாற்ற வேண்டும் என்று காலில் விழுந்து கெஞ்ச, அவ்விதமே மகேந்திரனுக்கு அருள் புரிந்து, அவனுடைய உபசாரங்களையும் காணிக்கைப் பொருள்களையும் ஏற்றுக் கொண்டு, தென்னாட்டின் திக்விஜயத்தைப் பூர்த்தி செய்து, ஜயபேரிகை முழக்கி, வெற்றிச் சங்கு ஊதி, வாதாபி நகரத்துக்குத் திரும்பி வந்தது சாலிவாகன சகாப்தம் நாளது ஆண்டு, திங்கள், தேதி; கடல் சூழ்ந்த நில உலகம் உள்ளவரையில் இந்த வாதாபி நகரமும் இந்த திக்விஜய ஜயஸ்தம்பமும் சளுக்க சக்கரவர்த்தி குலமும் என்றென்றைக்கும் நின்று நீடித்துப் பொருகித் தழைத்து விளங்குவதாக!"

இவ்விதம் சத்ருக்னன் கூறி வந்ததைக் கேட்டுக் கொண்டிருந்தவர்கள், "என்ன பொய்! என்ன கர்வம்! அந்த ஸ்தம்பத்தை இடித்துத் தள்ளாமல் விடுவதில்லை" என்றெல்லாம் கூறினார்கள்.

சிறிது அவர்கள் இடம் கொடுத்ததும், சத்ருக்னன் மேலும் கூறினான்: "பிரபு அந்த ஜயஸ்தம்பத்தில் இவ்விதம் நான் படித்ததும் என்னை நான் மறந்து விட்டேன். ஸ்தம்பத்தை நோக்கி ஒரு உதை விடலாம் என்று எண்ணிக் காலையும் தூக்கி விட்டேன். கடவுள் அருளால் நல்ல சமயத்தில் எதற்காக வாதாபி நகருக்கு வந்தோம் என்பது ஞாபகம் வந்தது. ஏதோ கால் தடுக்கி விழுந்தவனைப்போல் தொப்பென்று கீழே விழுந்து சமாளித்துக் கொண்டேன். வீதியில் ஜனக்கூட்டம் 'ஜேஜே' என்று இருந்தது. யாராவது பார்த்திருந்தால் விபரீதமாய்ப் போயிருக்கும்!" என்று கூறி நிறுத்தினான்.

"சத்ருக்னா! வாதாபிக்கு வந்த காரியம் உனக்கு நினைவில் இருந்தது பற்றிச் சந்தோஷம். ஆனால் அதைப்பற்றி இன்னமும் நீ சொல்லவில்லை!" என்று மாமல்லர் கோபம் தொனிக்கக் கூறினார்.

"பிரபு! மன்னிக்க வேண்டும். சளுக்கர்களின் பொய் சொல்லும் திறமைக்குச் சிறந்த ஞாபகச்சின்னமான அந்த ஜயஸ்தம்பத்தை விட்டு மேலே கிளம்பிச் சென்றேன். வாதாபி நகரின் மிதமிஞ்சிய ஐசுவரிய போகத்துக்கும் வாதாபி மக்களின் படாடோ ப வாழ்க்கைக்கும் பல அறிகுறிகளைப் பார்த்துக் கொண்டு போனேன். இந்தப் பெரிய நகரத்தில், கிழக்கு மேற்கிலும் தெற்கு வடக்கிலும் குறைந்தது காத தூரமுள்ள இந்தப் பிரம்மாண்டமான பட்டணத்தில், சிவகாமி அம்மையை எப்படித் தேடுவது, யாரை விசாரிப்பது என்று சிந்தனை செய்து கொண்டே போனேன். கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல், அடுத்தாற் போல் வந்த நாற்சந்தி வீதி முனையில் அம்மையைச் சந்தித்தேன்..."

"என்ன? நாற்சந்தி முனையிலா?" என்று பல குரல்கள் ஏக காலத்தில் எழுந்தன.

"ஆம்; நாற்சந்தி முனையிலேதான் பார்த்தேன். அம்மை அங்கே செய்து கொண்டிருந்த காரியத்தைக் கேட்டால் நீங்கள் பெரும் ஆச்சரியப்படுவீர்கள். எனக்கும் பார்த்தவுடனே ஆச்சரியமாயிருந்தது; வேதனையாகக் கூட இருந்தது. ஆனால், விசாரித்து விஷயம் தெரிந்து கொண்டதும் அளவில்லாத பெருமை அடைந்தேன். பிரபு! தமிழகத்துப் பெண்குலத்தின் பெருமையைச் சிவகாமி அம்மை நிலைநாட்டி விட்டார். நூறு காத தூரத்துக்கு அப்பால் எதிரிகளின் கோட்டையில் அநாதையாகவும் தன்னந்தனியாகவும் இருக்கும் நிலைமையில் அம்மையார் தமிழகத்துப் பெண்குலத்தின் தயாள குணத்தை நிலை நாட்டியிருக்கிறார்..."

"சத்ருக்னா! ஏன் இப்படி வளைத்து வளைத்துப் பேசிக் கொண்டிருக்கிறாய்? சிவகாமி என்ன காரியம் செய்து கொண்டிருப்பதைப் பார்த்தாய்?" என்று மாமல்லர் கடுமையான குரலில் கேட்டார்.

"பிரபு சொல்லி விடுகிறேன்; வாதாபி நகரின் நாற்சந்தியில் சிவகாமி அம்மை நடனம் ஆடிக்கொண்டிருந்தார்....."

"ஆகா!" "இது என்ன?" "அவமானம்! அவமானம்!" "இதைத்தானா தமிழகத்துக்குப் பெருமை என்று சொன்னாய், சத்ருக்னா!" என்று தலைக்குத் தலை கூவினார்கள்.

"மன்னிக்க வேண்டும்; கொஞ்சம் பொறுத்துக் கொண்டு மீதியையும் கேளுங்கள். சிவகாமி அம்மை ஒரு பெருங் கும்பலுக்கு மத்தியில் நின்று ஆடுவதைப் பார்த்ததும் எனக்கும் சொல்ல முடியாத அவமானம் உண்டாயிற்று. கோபமும் ஆத்திரமும் பொங்கிக் கொண்டு வந்தன. கூட்டத்தில் நின்ற வாதாபி மக்கள் கொச்சையான பாஷையில் பேசிக் கொண்ட அருவருப்பான வார்த்தைகளைக் கேட்டதும் என் காதுகள் கொப்பளித்தன. ஓடிப் பாய்ந்து அம்மையின் முன் சென்று, 'நிறுத்துங்கள் இந்த அவமானத்தை!' என்று கூவ வேண்டும் என்பதாக ஆத்திரம் உண்டாயிற்று. நல்லவேளையாக அந்தச் சமயத்தில், நடனமாடிய அம்மைக்குப் பின்னால் நின்றவர்கள் மீது என் பார்வை விழுந்தது, ஆகா! அதை எப்படிச் சொல்வேன்? தமிழகத்தைச் சேர்ந்த ஸ்திரீ புருஷர்கள் பலரை அங்கே கையைப் பின்னால் சேர்த்துக் கட்டி நிறுத்தியிருந்தார்கள். அவர்களுக்கிடையே கையில் சாட்டை பிடித்த யமகிங்கரர் போன்ற மனிதர்கள் சிலர் நின்று கொண்டிருந்தார்கள். அந்தக் காட்சியைக் கண்டதும் பிரமித்து நின்றுவிட்டேன். பிரமை நீங்கிய பிறகு கூட்டத்திலிருந்தவர்களின் பேச்சுக்களை ஒற்றுக் கேட்டும், சந்தேகம் தோன்றாதபடி விசாரித்தும், மேற்படி அதிசயக் காட்சியின் காரணத்தை நன்கறிந்து கொண்டேன்..."

பிறகு சத்ருக்னன், சிவகாமி அம்மை நாற்சந்தியில் நடனமாட நேர்ந்தது ஏன் என்னும் காரணத்தைத் தான் தெரிந்து கொண்டபடி அவர்களுக்குக் கூறினான்: "தமிழகத்து ஆடவர் பெண்டிரைக் கொடுமையான சாட்டையடித் தண்டனையிலிருந்து காப்பாற்றுவதற்காகவே சிவகாமி நடனமாடுகிறாள்" என்று தெரிந்ததும் மாமல்லர் முதலியவர்களுக்குத் தேகத்தில் புளகாங்கிதம் உண்டாயிற்று. பிறகு மேலே நடந்ததைப் பற்றி ஆவலுடன் கேட்டார்கள்.

"இனிய கானத்தைக் கேட்ட நாகசர்ப்பத்தைப் போல் நான் சிவகாமி அம்மையின் நடனத்தைப் பார்த்துக் கொண்டு பிரமித்து நின்றேன். அம்மை நடனத்தை முடித்துச் சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு திரும்பினார். திரும்பியதும் சில கண நேரம் அவருடைய கண்களில் சொல்ல முடியாத வியப்பும் திகைப்பும் காணப்பட்டன. அவர் பார்த்த திசையை நானும் நோக்கினேன்; அங்கே யார் நின்றது என்று நினைக்கிறீர்கள்?"

"யார்? யார்?", "புலிகேசியா?" என்று கேள்விகள் எழுந்தன.

"இல்லை நம் சிநேகிதர் நாகநந்திதான்!" என்றான் சத்ருக்னன்.
Back to top Go down
AruN
Admin
Admin
AruN


Posts : 1961
Join date : 2012-01-26

கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 7 Empty
PostSubject: Re: கல்கியின் சிவகாமியின் சபதம்   கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 7 Icon_minitimeMon May 28, 2012 6:04 pm

மூன்றாம் பாகம் : பிக்ஷுவின் காதல்

52. வளையற்காரன்



நாகநந்தி என்ற பெயரைக் கேட்டவுடனே அங்கிருந்தவர் அனைவருக்கும் தூக்கி வாரிப்போட்டது.

மாமல்லர், "ஆஹா! புத்த பிக்ஷுவா? அப்படியானால் குண்டோ தரன் கூறிய செய்தி பொய்யா?" என்று சொல்லிய வண்ணம் குண்டோ தரனை நோக்கினார்.

"இல்லை, பிரபு! குண்டோ தரன் கூறிய செய்தி உண்மைதான். வாதாபிக்கு வரும் வழியில் பிக்ஷு வேங்கி நகரத்துக்குத்தான் போனார். துரதிர்ஷ்டவசமாக நேற்றுத் திரும்பி வந்துவிட்டார். அவருடைய வரவினால் நம்முடைய காரியம் ஒன்றுக்குப் பத்து மடங்கு கடினமாகி விட்டது. இன்னும் இரண்டு நாளைக்கு முன்னால் மட்டும் நாம் வந்திருந்தால்?...." என்றான் சத்ருக்னன்.

"பிக்ஷு நேற்றுத்தான் திரும்பி வந்தாரா? உனக்கு எப்படித் தெரியும், சத்ருக்னா!" என்று சேனாபதி பரஞ்சோதி வினவினார்.

"நகரமெல்லாம் அதைப்பற்றித்தான் பேச்சு, தளபதி! ஜனங்கள் பேசிக் கொண்டதிலிருந்துதான் தெரிந்து கொண்டேன். புலிகேசியின் சகோதரன் விஷ்ணுவர்த்தனன் சென்ற வருஷம் வேங்கி மன்னனாக முடிசூட்டிக் கொண்டானல்லவா? எந்த வேளையில் மகுடாபிஷேகம் செய்து கொண்டானோ, தெரியவில்லை. சில நாளைக்கு முன்பு அவன் மாண்டு போனான். அவனுடைய மனைவியையும் ஆறு மாதத்துக் கைக்குழந்தையையும் அழைத்துக் கொண்டு நாகநந்தி நேற்றுத் திரும்பி வந்தாராம்" என்று சத்ருக்னன் கூறினான்.

"சளுக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம் நெருங்கி விட்டது என்று பல்லவேந்திரர் கூறியது வீண்போகவில்லை. விஷ்ணுவர்த்தனன் எப்படி இறந்தானாம்?" என்று பரஞ்சோதி கேட்டார்.

"விஷ்ணுவர்த்தனன் வேங்கிப் படைகளை முழுவதும் நாசம் செய்ய முடியவில்லை. நம்முடைய சக்கரவர்த்தி சொல்லி அனுப்பியிருந்தபடி வேங்கிப் படைகள் பின்வாங்கிச் சென்று கிருஷ்ணை கோதாவரி நதிக் கரைக் காடுகளில் ஒளிந்து கொண்டிருந்தன. விஷ்ணுவர்த்தனன் முடி சூட்டிக்கொண்ட பிறகு நாடெங்கும் கலகங்கள் மூண்டன. ஒளிந்திருந்த படை வீரர்கள் அங்கங்கே திடீர் திடீரென்று கிளம்பித் தாக்கினார்கள். கலகத்தைத்தானே அடக்கப் போவதாக விருது கூறிக் கொண்டு விஷ்ணுவர்த்தனன் கிளம்பினான். ஒரு சண்டையில் படுகாயமடைந்து விழுந்தான். நாடெங்கும் கலகங்கள் அதிகமாயின. இந்த சமயத்தில்தான் நாகநந்தியும் அங்கே போய்ச் சேர்ந்தார். விஷ்ணுவின் மனைவியையும் குழந்தையையும் கொண்டு வந்து சேர்த்தார். விஷ்ணுவர்த்தனன் மனைவி துர்விநீதனுடைய மகள் என்பது தங்களுக்குத் தெரியுமல்லவா, பிரபு?"

"அதைப் பற்றியெல்லாம் இப்போது என்ன கவலை, சத்ருக்னா? நாம் வந்த காரியத்தைப் பற்றிச் சொல்லாமல் ஊர்க்கதையெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறாயே? மேலே நடந்ததைச் சொல்லு!" என்றார் மாமல்லர்.

"நாகநந்தி பிக்ஷுவைப் பார்த்து வியப்பும் திகைப்பும் அடைந்த சிவகாமி அம்மை, சீக்கிரத்தில் சமாளித்துக் கொண்டு பல்லக்கில் போய் ஏறினார். பல்லக்கைச் சற்றுத் தூரம் நான் தொடர்ந்து சென்றேன். ஆரவாரமின்றி அமைதி குடிகொண்டிருந்த ஒரு வீதிக்குள் பல்லக்குச் சென்று அழகான மாளிகை ஒன்றின் வாசலில் நின்றது. சிவகாமி அம்மை பல்லக்கிலிருந்து இறங்கி அந்த மாளிகைக்குள்ளே போனார். வீதி முனையிலேயே நான் கொஞ்ச நேரம் நின்று என்ன செய்யலாம் என்று யோசித்தேன். பிறகு மாளிகை வாசலை நெருங்கினேன். காவலாளிகள் இருவர் அங்கு இருந்தார்கள். அவர்களைப் பார்த்து, 'காஞ்சி நகரத்து நாட்டியப் பெண் இருப்பது இந்த வீட்டிலே தானே?' என்று கேட்டேன். 'ஆமாம்! எதற்காகக் கேட்கிறாய்?' என்றார்கள். 'நான் வளைச் செட்டி. அழகான வளைகள் கொண்டு வந்திருக்கிறேன், அம்மையிடம் காட்ட வேண்டும்' என்றேன். 'இரவு நேரத்தில் இந்த வீட்டுக்குள் யாரும் புகுவதற்கு அனுமதியில்லை, நாளைப் பகலில் வா!' என்றார்கள். சற்று நேரம் அவர்களுடன் வம்பு பேசிப் பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன். சிவகாமி அம்மையும், ஒரு தோழியும் சமையற்காரியும் மட்டும் அந்த வீட்டுக்குள் இருப்பதாகவும், வேறு யாரும் இல்லை, வருவதுமில்லையென்பதாகவும் தெரிந்து கொண்டேன். ஒரே ஒரு தடவை புலிகேசிச் சக்கரவர்த்தி அங்கு வந்து இராஜ சபையில் நடனம் ஆடும்படி கேட்டாராம். அம்மை அதை மறுத்து விட்டபடியால் இம்மாதிரி வாதாபி வீதிகளில் தினம் நாட்டியமாடும்படி தண்டனை விதித்தாராம். இதை அறிந்ததும் எனக்குக் கோபம் கோபமாய் வந்தது. மனத்திற்குள்ளே அந்தக் கொடுமனம் படைத்த ராட்சதப் பதரைத் திட்டிக்கொண்டு கிளம்பினேன். வீதி முனைக்குச் சென்றதும் ஒரு பக்கத்திலிருந்து தீவர்த்திப் பிடித்த காவலர்கள் புடைசூழ ஒரு பல்லக்கு வருவதைக் கண்டேன். ஒரு வீட்டுத் திண்ணையில் தூணின் பின்னால் ஒளிந்து கொண்டு பல்லக்கில் வருவது யார் என்று கவனித்தேன். நான் எதிர் பார்த்தது போலவே நாகநந்தி பிக்ஷுதான் பல்லக்கில் இருந்தார்...."

அப்போது நறநறவென்று, மாமல்லர் பல்லைக் கடிக்கும் சத்தம் கேட்டது. சேனாபதி பரஞ்சோதி குறுக்கிட்டு, "சத்ருக்னா! ஏன் கதையை வளர்த்திக் கொண்டே போகிறாய்? அம்மையைச் சந்தித்துப் பேசினாயா? ஏதாவது செய்தி உண்டா? அதைச் சொல்லு!" என்றார்.

பரஞ்சோதியைச் சிறிது கோபமாக மாமல்லர் பார்த்துவிட்டு, "சத்ருக்னா! எதையும் விடவேண்டாம், நாகநந்தி எங்கே போனார்? சிவகாமியின் வீட்டுக்குள்ளேயா?" என்று வினவினார்.

"ஆம், பிரபு! அம்மையின் மாளிகைக்குள்தான் போனார். ஒரு நாழிகை நேரம் வீட்டுக்குள்ளே இருந்துவிட்டு வெளியேறினார். அந்த ஒரு நாழிகை நேரமும் நானும் அந்த வீதியிலேயே சுற்றி வந்து கொண்டிருந்தேன். ஒரு தடவை வீட்டு வாசலுக்கு அருகில் சென்று காவலரில் ஒருவனிடம், 'சமீபத்தில் சத்திரம் சாவடி எங்கேயாவது இருக்கிறதா?' என்று விசாரித்தேன். அப்போது உள்ளே சிவகாமி அம்மை புத்த பிக்ஷுவின் தலையில் நெருப்புத் தணலைக் கொட்டிக் கொண்டிருந்தார். அவ்வளவு கோபமாக அவர் பேசியது என் காதில் விழுந்தது. அதில் எனக்குப் பரம திருப்தி ஏற்பட்டது..."

"இங்கே எல்லோருக்கும் அப்படித் தான்!" என்றான் குண்டோதரன்.

"அதே வீதியில் இருந்த ஒரு சத்திரத்தில் படுத்து இரவு நிம்மதியாகத் தூங்கினேன். இன்று பொழுது விடிந்து சற்று நேரம் ஆனதும் அம்மையின் மாளிகைக்குப் போனேன். என்னைப் பார்த்ததும் சிவகாமி அம்மைக்கு ஒரே வியப்பாய்ப் போய் விட்டது. பக்கத்திலிருந்த தோழியை ஏதோ காரியமாக உள்ளே போகச் சொல்லிவிட்டு, 'சத்ருக்னா! இது என்ன? காஞ்சிக்கு நீ போகவில்லையா? என்னைப் பின்தொடர்ந்தே வந்துவிட்டாயா?' என்று கேட்டார். 'இல்லை, அம்மணி! காஞ்சிக்குப் போய் மாமல்லரிடம் தாங்கள் கூறிய செய்தியைச் சொன்னேன். அவரும் வந்திருக்கிறார், சேனாபதியும் வந்திருக்கிறார்!' என்றேன்.

இதைக் கேட்டதும் அம்மை உற்சாகமும் பரபரப்பும் அடைந்து, 'சைனியம் எங்கே இறங்கியிருக்கிறது?' என்று கேட்டார். சைனியத்தோடு வரவில்லையென்றும், மாமல்லரோடு சேனாபதியும் கண்ணபிரானும் வந்திருக்கிறார்கள் என்றும், கோட்டைக்கு வெளியே இந்த மலையடிவாரத்தில் இறங்கியிருக்கிறார்கள் என்றும் தெரிவித்தேன். நாளை அமாவாசை இரவில் எல்லோரும் வருகிறோம் என்றும், தோழிப் பெண்ணை எங்கேயாவது அனுப்பிவிட்டு நம்முடன் புறப்பட ஆயத்தமாயிருக்க வேண்டும் என்றும் சொல்லி விட்டு வந்தேன்!" என்று சத்ருக்னன் முடித்தான்.

"சத்ருக்னா! சிவகாமி முடிவாக என்ன சொன்னாள்? ஏதேனும் செய்தி உண்டா?" என்று மாமல்லர் கேட்டார்.

"ஒன்றுமில்லை, பிரபு! அம்மை அதிகமாகப் பேசாமல் அமாவாசை இரவு நம்மை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகச் சொல்லி எனக்கு விடை கொடுத்தார் அவ்வளவுதான்!" இதைக் கேட்ட மாமல்லர் சிந்தனையில் ஆழ்ந்தார்.
Back to top Go down
AruN
Admin
Admin
AruN


Posts : 1961
Join date : 2012-01-26

கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 7 Empty
PostSubject: Re: கல்கியின் சிவகாமியின் சபதம்   கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 7 Icon_minitimeMon May 28, 2012 6:06 pm

மூன்றாம் பாகம் : பிக்ஷுவின் காதல்

53. சந்தேகம்



அமாவாசை அன்று இரவு சிவகாமி தன்னுடைய மாளிகையில் தன்னந்தனியாக உட்கார்ந்திருந்தாள்.

அவளுக்குத் துணையாயிருந்த தோழி நோய்வாய்ப்பட்டிருந்த தன்னுடைய அன்னையைப் பார்த்துவிட்டு வரவேண்டுமென்று சொல்லிக் கொண்டிருந்தமையால், அதை வியாஜமாகக் கொண்டு அன்றிரவு அவளை வீட்டுக்கு அனுப்பி விட்டாள்.

இப்போது நந்தா விளக்கு ஒன்றே சிவகாமிக்குத் துணையாக எரிந்து கொண்டிருந்தது. அவளுடைய உள்ளமோ பல்வேறு சிந்தனைகளில் ஆழ்ந்திருந்தது.

மாமல்லர் வரப்போகிறார் என்று எண்ணியபோதெல்லாம் அவளுடைய இருதயம், மேலெழும்பி வந்து தொண்டையை அடைத்துக் கொண்டது. ஆத்திரமும் ஆங்காரமும் ஒரு பக்கத்தில் பொங்கின. துக்கமும் ஆர்வமும் இன்னொரு புறத்தில் பெருகின.

மாமல்லரிடம் வைத்த காதலினாலல்லவா இந்தத் துன்பங்களுக்கெல்லாம் ஆளானோம் என்ற எண்ணம் அடிக்கடி தோன்றிக் கொண்டிருந்தது. தனது நிலைமைக்குகந்த சிற்பியின் மகன் ஒருவனைக் காதலித்துக் கலியாணம் செய்து கொண்டிருந்தால், தான் இந்த அவகேட்டுக்கெல்லாம் ஆளாகியிருக்க வேண்டியதில்லையல்லவா? காடு சூழ்ந்த தனி வீட்டில் வசித்த தன்னை மாமல்லர் ஏன் தேடி வந்து இப்படிப் பித்துப் பிடிக்கச் செய்ய வேண்டும்? அப்படிச் செய்தவர் மண்டபப்பட்டுக் கிராமத்தில் ஏன் தன்னைத் தன்னந்தனியாக விட்டு விட்டுப் போக வேண்டும்? மாமல்லர் மேலுள்ள ஆசை காரணமாகத் தானே காஞ்சிக்கு அவள் வர நேர்ந்தது! மறுபடியும் அவருடைய காதல் காரணமாகத் தானே கோட்டையிலிருந்து சுரங்க வழியாக வெளிவர நேர்ந்தது! ஆகா! தன்னுடைய துன்பங்களுக்கெல்லாம் காரணம் அவர் தான்! இப்படியாக மாமல்லரிடம் ஒருபுறம் ஆத்திரத்தை வளர்த்துக் கொண்டு வந்தாள் என்றாலும், நேரம் ஆக ஆக, 'ஐயோ! அவர் வரவில்லையே?' என்ற ஏக்கமும் ஒருபுறம் அதிகமாகி வந்தது.

அர்த்த ராத்திரியில் சிவகாமி ஆழ்ந்த சிந்தனையிலிருந்த போது திடீரென்று அவள் எதிரில் தாடியும் மீசையுமான முகத் தோற்றமுடைய இருவரைக் கண்டதும் திகிலடைந்தவளாய் நிமிர்ந்து உட்கார்ந்தாள். ஆனாலும் அப்படி வந்தவர்களுடைய முகத்தோற்றம் பயங்கரத்தை விளைவிப்பதாக இல்லை. எப்போதோ பார்த்த முகங்களாகவும் தோன்றின.

"யார் நீங்கள்? இந்த நள்ளிரவு வேளையில் எதற்காக இங்கே வந்தீர்கள்?" என்று அதிகாரத் தொனியில் கேட்டாள்.

"சிவகாமி! என்னைத் தெரியவில்லையா?" என்று மாமல்லரின் குரல் கேட்டதும், சிவகாமியின் முகத்தில் வியப்புடன் கூடிய புன்னகை மலர்ந்தது.

எத்தனையோ காலத்துக்குப் பிறகு சிவகாமியின் முகத்தில் தோன்றிய அந்தப் புன்னகை அவளுடைய முகத்திற்கு எல்லையற்ற வனப்பை அளித்தது.

ஆனால், அந்த முகமலர்ச்சியானது மாமல்லரின் உள்ளத்தில் மகிழ்ச்சியை உண்டாக்கவில்லை. 'ஆ! இவள் இவ்விடம் உற்சாகமாகத்தான் இருக்கிறாள்!' என்ற எண்ணம் அவர் அகத்தில் உண்டாகி முகம் சுருங்கும்படிச் செய்தது.

"பிரபு! தாங்கள்தானா?" என்று உணர்ச்சியினால் கம்மிய குரலில் கேட்டுக் கொண்டு சிவகாமி எழுந்தாள்.

"ஆமாம், நான்தான்! வாதாபிச் சக்கரவர்த்தியின் மாளிகையில் வைபோகமாக வாழும்போது பழைய மனிதர்களைப் பற்றி எப்படி ஞாபகம் இருக்கும்?" என்று மாமல்லர் கடுமையான குரலில் கூறினார்.

அந்த கொடிய மொழிகளைக் கேட்ட சிவகாமி திக்பிரமையடைந்தவள் போல் மாமல்லரைப் பார்த்தது பார்த்தபடி நின்றாள். இவர் உண்மையில் மாமல்லர்தானா அல்லது வேஷதாரியா என்று அவளுக்கு ஐயம் தோன்றி விட்டது.

இப்படி ஒருவரையொருவர் வெறித்துப் பார்த்துக் கொண்டு சும்மா நின்றதைக் கவனித்த தளபதி பரஞ்சோதி, அந்தச் சந்தர்ப்பத்தில் தாம் அங்கிருப்பது அனுசிதம் என்பதை உணர்ந்தார். உடனே மாமல்லரின் காதருகில் வந்து, "பிரபு! காலதாமதம் செய்யக்கூடாது! அதிக நேரம் நமக்கில்லை" என்று சொல்லி விட்டு, அப்பால் முன்கட்டுக்குச் சென்றார்.

பரஞ்சோதி மறைந்த பிறகு மாமல்லர், "ஓகோ! இன்னும் ஞாபகம் வரவில்லை போலிருக்கிறது. போனால் போகட்டும், உன் தந்தை ஆயனரையாவது ஞாபகமிருக்கிறதா, சிவகாமி? ஆடல் பாடல் விநோதங்களில் அவரையும் மறந்து விட்டாயா?" என்றார்.

சிவகாமியின் புருவங்கள் நெறிந்தன, கோபத்தினால் சிவந்த கண்கள் அகல விரிந்தன. இதழ்கள் துடித்தன. உள்ளத்தில் பொங்கி வந்த கோபத்தையெல்லாம் பெரு முயற்சி செய்து அடக்கிக் கொண்டு, "இளவரசே! என் தந்தை சௌக்கியமாயிருக்கிறாரா? எங்கே இருக்கிறார்? எப்படி இருக்கிறார்?" என்று கேட்டாள்.

"ஆம்; ஆயனர் சௌக்கியமாயிருக்கிறார். கால்களில் ஒன்று முறிந்து, ஏக புதல்வியை இழந்தவர் எவ்வளவு சௌக்கியமாயிருக்கலாமோ, அவ்வளவு சௌக்கியமாயிருக்கிறார். 'சிவகாமி எங்கே? என் அருமை மகள் எங்கே?' என்று வந்தவர் போனவரையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறார். சிவகாமி புறப்படு, போகலாம்!"

சிவகாமியின் கண்களில் நீர் ததும்பியது. ஆயினும் அவள் மாமல்லருடன் புறப்படுவதற்கு யத்தனம் செய்வதாகக் காணவில்லை.

"சிவகாமி! ஏன் இப்படி நிற்கிறாய்! உன் தந்தையை உயிரோடு காண விரும்பினால் உடனே புறப்படு!" என்றார் மாமல்லர்.

இன்னமும் சிவகாமி அசையாமல் சும்மா நின்றாள்.

"இது என்ன, சிவகாமி! காஞ்சிக்கு வர உனக்கு இஷ்டமில்லையா? ஆகா! அப்போதே சந்தேகித்தேன், அது உண்மையாயிற்று!" என்று மறுபடியும் மாமல்லர் குத்தலாகச் சொன்னார்.

சிவகாமியின் மௌனம் அப்போது கலைந்தது, "பிரபு! என்ன சந்தேகித்தீர்கள்?" என்று கேட்டாள்.

"அதைப் பற்றி இப்போது என்ன? பிறகு சொல்கிறேன்."

"என்ன சந்தேகித்தீர்கள்! சொல்லுங்கள் பிரபு!"

"இப்போதே சொல்ல வேண்டுமா?"

"அவசியம் சொல்ல வேண்டும்."

"வாதாபிச் சக்கரவர்த்தியின் மாளிகையில் சுகபோகத்துடன் வாழ்ந்தவர்களுக்கு என்னோடு புறப்பட்டு வர இஷ்டமாயிராது என்று சந்தேகித்தேன்."

இதைக் கேட்டதும் சிவகாமி சிரித்தாள்! நள்ளிரவு நேரத்தில் அந்தச் சிரிப்பின் ஒலி மாமல்லரின் காதுக்கு நாராசமாயிருந்தது. சிரிப்பை நிறுத்தியதும் சிவகாமி உறுதியான குரலில் கூறினாள்.

"ஆம் பல்லவ குமாரா! உங்கள் சந்தேகம் உண்மைதான். எனக்கு இந்த மாளிகையின் சுகபோகத்தைவிட்டு வர இஷ்டமில்லை. வாதாபி நகரை விட்டு வரவும் மனம் இல்லை. நீங்கள் போகலாம்!"

இவ்விதம் சிவகாமி கூறியதும், மாமல்லர் கண்களில் தீப்பொறி பறக்க, "ஆகா பெரியவர்கள் கூறியிருப்பது எவ்வளவு உண்மை!" என்றார்.

"பெரியவர்கள் என்ன கூறியிருக்கிறார்கள்?"

"ஸ்திரீகள் சபல சித்தமுடையவர்கள் என்று சொல்லியிருக்கிறார்கள்."

"அந்த உண்மையை இப்போது கண்டு கொண்டீர்கள் அல்லவா? போய் வாருங்கள், பிரபு."

"ஆகா! உன்னைத் தேடி நூறு காத தூரம் வந்தேனே? என்னைப் போன்ற புத்திசாலி யார்?" என்று தமக்குத்தாமே சொல்லிக் கொண்டார் மாமல்லர். பிறகு, "சிவகாமி நீ எனக்காக வரவேண்டாம். உன் தந்தைக்காகக் கிளம்பிவா! உன் தோழி கமலிக்காகப் புறப்பட்டு வா! உன்னைக் கட்டாயம் அழைத்து வருவதாக அவர்களிடம் சபதம் செய்துவிட்டு வந்தேன்!" என்றார் மாமல்லர்.

"நானும் ஒரு சபதம் செய்திருக்கிறேன், பிரபு!"

"நீயும் சபதம் செய்திருக்கிறாயா? என்ன சபதம்?"

"தங்களிடம் எதற்காகச் சொல்ல வேண்டும்?"

"சொல்லு சிவகாமி! சீக்கிரம் சொல்!"

"சொன்னால் நீங்கள் நம்பப் போவதில்லை. சபல புத்தியுள்ள அபலைப் பெண்ணின் சபதந்தானே?"

"பாதகமில்லை, சொல்! நேரமாகிறது!"

"இந்த வாதாபி நகரம் தீப்பற்றி எரிந்து, இந்நகரின் வீடுகள் எல்லாம் சாம்பலாவதையும், வீதிகளிலெல்லாம் இரத்த வெள்ளம் ஓடுவதையும், நாற்சந்திகள் பிணக்காடாய்க் கிடப்பதையும் கண்ணாலே பார்த்த பிறகுதான் இந்நகரை விட்டுக் கிளம்புவேன் என்று சபதம் செய்திருக்கிறேன்!"

"என்ன கோரமான சபதம்! இப்படி ஒரு சபதத்தை எதற்காகச் செய்தாய் சிவகாமி?"

"பிரபு! இந்த நகருக்கு வரும் வழியில் நான் பார்த்த கோரக் காட்சிகளையெல்லாம் நீங்கள் பார்த்திருந்தால் எதற்காகச் சபதம் செய்தேன் என்று கேட்க மாட்டீர்கள். இந்த வாதாபி நகரின் நாற்சந்திகளிலே தமிழ்நாட்டு ஸ்திரீ புருஷர்கள் கட்டப்பட்ட கரங்களுடனே கொண்டு வந்து நிறுத்தப்பட்டதையும், சாட்டையினால் அவர்கள் அடிக்கப்பட்டதையும், அவர்களுக்கு முன்னால் பல்லவ தேசத்தின் நடன கலாராணி நாட்டியமாடியதையும் தாங்கள் பார்த்திருந்தால், சபதம் ஏன் எதற்காக என்றெல்லாம் கேட்க மாட்டீர்கள்."

"சிவகாமி! அதையெல்லாம் நான் நேரில் பார்க்காவிட்டாலும், எனக்குத் தெரிந்தவைதான். இருந்தாலும் நீ இவ்வளவு கடுமையான சபதம் எடுத்துக் கொள்ளலாமா?"

"பிரபு! பல வருஷங்களுக்கு முன்னால், பல யுகங்களுக்கு முன்னால், என்னை இளவரசர் ஒருவர் காதலிப்பதாகச் சொன்னார். என்னைத் தமது பட்டமகிஷியாக்கிக் கொள்வதாக வாக்குறுதி கூறினார். என்னை ஒரு நாளும் மறப்பதில்லை என்று வேலின் மேல் ஆணையாக வாக்களித்தார். தாமரைக் குளக்கரையில் பூரண சந்திரனின் நிலவில், 'இந்த ஜன்மத்திலும் எந்த ஜன்மத்திலும் நீயே என் வாழ்க்கைத் துணைவி' என்று சத்தியம் செய்தார். அவர் சுத்தவீரர் என்றும், சொன்ன சொல் தவறாதவர் என்றும் நம்பியிருந்தேன். அந்த நம்பிக்கை காரணமாகவே அத்தகைய சபதம் செய்தேன்!" என்று சிவகாமி கம்பீரமான குரலில் கூறி மாமல்லரை ஏறிட்டுப் பார்த்தாள். அந்தப் பார்வை கூரிய வேலைப்போல் மாமல்லருடைய நெஞ்சிலே பாய்ந்து அவரை நிலைகுலையச் செய்தது.
Back to top Go down
AruN
Admin
Admin
AruN


Posts : 1961
Join date : 2012-01-26

கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 7 Empty
PostSubject: Re: கல்கியின் சிவகாமியின் சபதம்   கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 7 Icon_minitimeMon May 28, 2012 6:12 pm

கல்கியின் சிவகாமியின் சபதம்

மூன்றாம் பாகம் : பிக்ஷுவின் காதல்

54. விபரீதம்


மாமல்லர் தமது நிலை குலைந்த நெஞ்சைத் திடப்படுத்திக் கொண்டு, கனிவு ததும்பிய கண்களால் சிவகாமியை நோக்கினார்.

"சிவகாமி! உன்னுடைய நம்பிக்கை வீணாய்ப் போகவில்லையே! உனக்கு நான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றத்தானே வந்திருக்கிறேன்? நூறு காத தூரம் காடும் மலையும் நதியும் கடந்து வந்திருக்கிறேன். பசி பட்டினி பாராமல் இராத் தூக்கமில்லாமல் வந்திருக்கிறேன். நான் ஏறி வந்த குதிரை ஏறக்குறையச் செத்து விழும்படி அவ்வளவு வேகமாய் வந்தேன். சற்று முன்பு நான் கூறிய கடுமொழிகளையெல்லாம் மறந்துவிடு. யார் மேலேயோ வந்த கோபத்தை உன் மீது காட்டினேன். இத்தனை நாளைக்குப் பிறகு நம்முடைய சந்திப்பு இப்படிக் கோபமும் தாபமுமாயிருக்குமென்று நான் நினைக்கவில்லை. எவ்வளவோ ஆசையோடு எத்தனையோ மனக்கோட்டை கட்டிக் கொண்டு வந்தேன்! - போகட்டும், சிவகாமி! புறப்படு, போகலாம்!"

"பிரபு! மன்னியுங்கள்! இப்போது நான் வரமாட்டேன், என் சபதம் நிறைவேறிய பிறகுதான் வருவேன்."

"சிவகாமி! இது என்ன வார்த்தை? என்னுடன் வருவதற்கு உனக்கு விருப்பம் இல்லையா, என்ன? தாமதிக்க நேரமில்லை."

"இளவரசே! என் சபதத்தை நிறைவேற்றி வையுங்கள். பாதகன் புலிகேசியைக் கொன்று, வாதாபி நகரத்தைச் சுட்டெரித்து விட்டு, உங்கள் அடிமையின் கையைப் பிடித்து அழைத்துச் செல்லுங்கள். அப்போது நிழல் போல் உங்களைத் தொடர்ந்து வருவேன்."

"சிவகாமி! உன் சபதத்தை அவசியம் நிறைவேற்றி வைக்கிறேன். ஆனால் அதை நிறைவேற்றுவது எளிதல்ல. பெரும்படை திரட்டிக் கொண்டு, தக்க ஆயுத பலத்தோடு வரவேண்டும். இதற்கெல்லாம் அவகாசம் வேண்டும். பல வருஷங்கள் ஆகலாம்..."

"பல்லவ குமாரர்தானா இப்படிப் பேசுகிறீர்கள்? வீரமாமல்லரா இப்படிப் பேசுகிறீர்கள்? புலிகேசியைக் கொன்று வாதாபியை வெற்றி கொள்வது அவ்வளவு கடினமான காரியமா? இந்தப் பேதை தெரியாமல் சபதம் செய்து விட்டேனே?... பல்லவ குமாரா! தாங்கள் காஞ்சிக்குப் போய் இராஜ்ய காரியங்களைக் கவனியுங்கள். இந்த ஏழைச் சிற்பியின் மகளைப்பற்றிக் கவலை வேண்டாம்! நான் என்ன பாண்டிய ராஜகுமாரியா, சோழன் திருமகளா தாங்கள் கவலைப்படுவதற்கு? நான் எக்கேடு கெட்டால் தங்களுக்கென்ன? என் சபதம் எப்படிப் போனால் என்ன?" என்று சிவகாமி கசப்புடன் பேசினாள்.

"சிவகாமி! நீதான் பேசுகிறாயா? நீ பழைய சிவகாமிதானா?" என்றார் மாமல்லர்.

"இல்லை, பிரபு! நான் பழைய சிவகாமி இல்லை. புதிய சிவகாமியாகி விட்டேன். என் வாழ்க்கை கசந்துவிட்டது, என் மனம் பேதலித்து விட்டது. இந்தப் புதிய சிவகாமியை மறந்து விடுங்கள். ஒரு சமயம் தங்களிடம், 'அடியாளை மறக்க வேண்டாம் என்று வரம் கேட்டேன். இப்போது, 'மறந்துவிடுங்கள்' என்று வரம் கேட்கிறேன்!" என்றாள் சிவகாமி.

"சிவகாமி! கேள்! நீ புதிய சிவகாமியானாலும் நான் பழைய மாமல்லன்தான். உன்னைப் பிரிந்திருந்த காலத்திலெல்லாம் ஒரு கணமேனும் உன்னை நான் மறக்கவில்லை. இரவிலும், பகலிலும், கனவிலும் நனவிலும், அரண்மனையிலும் போர்க்களத்திலும், என்ன செய்தாலும் யாரோடு பேசினாலும், என் உள்ளத்தைவிட்டு நீ ஒரு கணமும் அகலவில்லை. உன் பேரில் நான் கொண்ட பரிசுத்தமான காதலின் மேல் ஆணை வைத்துச் சொல்லுகிறேன். நீ செய்த சபதத்தை நிறைவேற்றி வைக்கிறேன். இப்போது என்னோடு புறப்படு!" என்று மாமல்லர் உணர்ச்சி மிகுதியினால் நாத் தழு தழுக்கக் கூறினார்.

கல்லையும் கனிய வைக்கக்கூடிய மேற்படி மொழிகள் சிவகாமியின் மனத்தைக் கனியச் செய்யவில்லை. பட்ட கஷ்டங்களினாலும் பார்த்த பயங்கரங்களினாலும் கல்லினும் கடினமாகியிருந்தது அவள் உள்ளம்.

"காதலாம் காதல்! காதலும் கல்யாணமும் இங்கே யாருக்கு வேண்டும்?" என்றாள் சிவகாமி.

"நிஜமாகத்தான் சொல்கிறாயா? காதலும் கலியாணமும் உனக்கு வேண்டாமா?" என்று மாமல்லர் ஆத்திரத்தோடு கேட்டார்.

"நிஜமாகத்தான் சொல்கிறேன். காதலும் கலியாணமும் எனக்கு வேண்டாம். பழிதான் வேண்டும். வஞ்சம் தீர்க்க வேண்டும். புலிகேசி சாகவேண்டும். வாதாபி எரிய வேண்டும். வாதாபி மக்கள் அலறிப் புடைத்துக் கொண்டு அங்குமிங்கும் ஓட வேண்டும். வேறொன்றும் எனக்கு வேண்டாம்!"

மாமல்லர் மீண்டும் நயமான வார்த்தைகள் கூறினார். "சிவகாமி! உன் விருப்பத்தைத் தெரிந்து கொண்டேன். உன்னைக் காட்டிலும் நூறு மடங்கு என் உள்ளம் கொதித்துக் கொண்டிருக்கிறது. உன்னைச் சிறைப்பிடித்து வந்து அவமானப்படுத்திய பாதகனைப் பழிவாங்க என் மனம் துடித்துக் கொண்டிருக்கிறது. கட்டாயம் உன் சபதத்தை நிறைவேற்றி வைக்கிறேன். நீ மட்டும் இப்போது என்னுடன் புறப்பட்டு வந்துவிடு!"

"வரமாட்டேன், இளவரசே! ஆயனச் சிற்பியாரிடம், அவருடைய மகள் இறந்து போய்விட்டாள் என்று சொல்லி விடுங்கள்!"

"சிவகாமி! இது என்ன பிடிவாதம்? கடைசி வார்த்தையாகச் சொல்லுகிறேன், கேள்! உன்னுடைய சபதத்தை நான் கட்டாயம் நிறைவேற்றி வைக்கிறேன். ஆனால், இந்தச் சமயம் என்னுடன் நீ வராவிட்டால் என் மனம் கசந்து போய்விடும். என் அன்பை அடியோடு இழந்து விடுவாய்!"

"அன்பு வேண்டாம் சுவாமி! சபதத்தை நிறைவேற்றுங்கள்."

"பெண்ணே! பல்லவ குலத்தினர் ஒரு நாளும் சொன்ன சொல் தவறுவதில்லை."

"இளவரசே! ஆயனச் சிற்பியின் மகளும் சொன்ன சொல்லை மாற்றுவதில்லை!"

"ஆகா! இதென்ன அகம்பாவம்?" என்றார் மாமல்லர்.

"ஆம், இளவரசே! எனக்கு அகம்பாவந்தான். ஏன் இருக்கக் கூடாது? பாண்டியன் மகளுக்கும், சேர ராஜகுமாரிக்குந்தான் அகம்பாவம் இருக்கலாமா? நான் சிற்பியின் மகள்தான், ஆனாலும் செந்தமிழ் நாட்டு வீரப்பெண் குலத்திலே பிறந்தவள். காதலன் கழுத்திலே மாலை சூட்டிப் போர்க்களத்துக்கு அனுப்பிய மாதர் வம்சத்தில் பிறந்தவள். கண்ணகித் தெய்வம் வாழ்ந்த நாட்டில் நானும் பிறந்தேன். எனக்கு ஏன் அகம்பாவம் இருக்கக்கூடாது, பிரபு?"

சிவகாமியின் மனத்தைத் திருப்ப மேலே என்ன சொல்லலாம் என்று அவர் சிந்திப்பதற்குள், சேனாபதி பரஞ்சோதி பரபரப்புடன் உள்ளே வந்தார், மாமல்லரின் காதில் ஏதோ சொன்னார்.

மாமல்லரின் முகத்தில் ஒரு கணம் திகிலின் அறிகுறி தோன்றியது. மறுகணம் சமாளித்துக் கொண்டார்.

"சேனாபதி! இந்த மூடப் பெண்ணின் பிடிவாதத்துக்கு முன்னால் நம்முடைய திட்டமெல்லாம் சின்னா பின்னமாகிவிடும் போலிருக்கிறது!" என்றார்.

சிவகாமியின் பக்கம் கோபமாகத் திரும்பி, "பெண்ணே! நீ வருவாயா? மாட்டாயா? உன்னுடன் வாதமிட்டுக் கொண்டிருக்க நேரமில்லை!" என்றார் மாமல்லர்.

அப்போது சேனாபதி பரஞ்சோதி குறுக்கிட்டு, "அம்மணி, எங்களுடைய நிலைமையைத் தெரிந்து கொள்ளுங்கள். எதிரிகளின் கோட்டைக்குள்ளே தனியாக நாலு பேர் வந்திருக்கிறோம். கோட்டைச் சுவர் மீது நூலேணியுடன் கண்ணனும் அவன் தந்தையும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். கோட்டைக்கு வெளியில் இந்த நிமிஷத்தில், நரபலி கொடுக்கும் காபாலிகர்கள் எங்களைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். இங்கேயோ அந்தக் கள்ள பிக்ஷு நாங்கள் வந்திருப்பதை அறிந்துகொண்டு, இதோ வீதி முனையில் வந்து கொண்டிருக்கிறார். தேவி! இந்த நிலைமையில் தாங்கள் இப்படி வீண் விவாதம் வளர்த்தக் கூடாது..." என்றார்.

'பெண் புத்தி பேதமையுடைத்து' என்று முன்னோர் சொல்லியிருக்கிறார்கள் அல்லவா? அது உண்மை என்பதை நிரூபிக்கும்படி சிவகாமி அப்போது பேசினாள்.

"ஐயா! பல்லவ குமாரரும் அவருடைய அருமைத் தோழரும் கேவலம் மண்டை ஓட்டில் பிச்சை வாங்கும் காபாலிகருக்கும், காவித்துணி தரித்த புத்த பிக்ஷுவுக்கும் பயந்து ஓடுவார்கள் என்பது இதுவரையில் எனக்குத் தெரியாமலிருந்தது. அதற்காக என்னை மன்னியுங்கள். நீங்கள் தப்பிப் பிழைப்பதை நான் குறுக்கே நின்று மறிக்கவில்லையே! தாராளமாகப் போகலாம்" என்றாள்.

பல்லவ குமாரருக்குக் காலாக்னியையொத்த கோபம் வந்தது. "அடி பாதகி! சண்டாளி! இதன் பயனை நீ அனுபவிப்பாய்!" என்று சீறினார்.

பின்னர் பரஞ்சோதியைப் பார்த்து "சேனாபதி! இந்த வஞ்சகப் பாதகியின் நோக்கம் இப்போது தெரிந்தது. கள்ள பிக்ஷுவிடம் நம்மைக் காட்டிக் கொடுத்துவிட வேண்டும் என்பது இவள் எண்ணம், வாரும் போகலாம்!" என்றார்.

அப்போது பரஞ்சோதி, "பிரபு! மன்னிக்க வேண்டும், நான் எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தேன். ஆயனர் புதல்வி அப்படி வஞ்சகம் செய்யக் கூடியவர் அல்ல. தான் செய்த சபதத்தை முன்னிட்டுத்தான் 'வர மாட்டேன்' என்கிறார்...." என்பதற்குள்ளே, மாமல்லர் குறுக்கிட்டார்.

"தளபதி பெண்களின் வஞ்சகம் உமக்குத் தெரியாது. சபதமாம், சபதம்! வெறும் பொய்! வாதாபிச் சக்கரவர்த்தியின் மாளிகையை விட்டு வருவதற்கு இவளுக்கு விருப்பமில்லை, வாரும் போகலாம்!" என்று மாமல்லர் சேனாபதியின் கையைப்பற்றி இழுக்கத் தொடங்கினார்.

தளபதி பரஞ்சோதி நகராமல் நின்றார். "பிரபு! இது நியாயமல்ல. சிவகாமி அம்மையை இங்கு விட்டுப் போவது பெரும் பிசகு!... அவராக வருவதற்கு மறுத்தால், நாம் பலவந்தமாகத் தூக்கிக் கொண்டு போக வேண்டியதுதான்!..." என்றார்.

இந்த வார்த்தைகள் காதில் விழுந்ததும் சிவகாமியின் தேகமெல்லாம் சிலிர்த்தது. ஒரு சமயம் மாமல்லர் தன்னை விஷநாகம் தீண்டாமல் கட்டிக் காத்ததாகக் கனவு கண்டதைப் பற்றிச் சொன்னது அவளுக்கு நினைவு வந்தது. 'அந்தக் கனவு இப்போது மெய்யாகாதா? சேனாதிபதியின் யோசனைப்படி மாமல்லர் தன்னை நெருங்கி வந்து கட்டிப் பிடித்துத் தூக்கிக் கொண்டு போக மாட்டாரா?' என்று எண்ணினாள். ஆகா! அம்மாதிரி மாமல்லர் செய்திருந்தால், பின்னால் எவ்வளவு விபரீதங்கள் நேராமல் போயிருக்கும்!

விதிவசத்தினால் மாமல்லர் அவ்வாறு செய்ய மனங்கொள்ளவில்லை. "வேண்டாம், சேனாபதி! வேண்டாம், இஷ்டமில்லாத பெண்ணை நாம் பலவந்தப்படுத்தி அழைத்துப் போக வேண்டியதில்லை. இவளுக்கு நான் கொடுத்த வாக்குறுதியை ஒரு சமயம் நிறைவேற்றுவேன். பிறகு இஷ்டமானால் வரட்டும், அதுவரையில் அந்தக் கள்ள பிக்ஷுவையே கட்டிக்கொண்டு அழட்டும்!..." என்று மாமல்லர் சொல்லிக் கொண்டிருக்கும் போது சத்ருக்னனும் குண்டோ தரனும் உள்ளே ஓடோ டியும் வந்தார்கள்.

"பிரபு! பிக்ஷு வீதி முனையில் வருகிறார். அவருடன் வந்த வீரர்களில் பாதிப் பேர் வீட்டின் கொல்லைப் பக்கமாகப் போகிறார்கள்!" என்று சத்ருக்னன் மொழி குளறிக் கூறினான்.

பரஞ்சோதி மறுபடியும் சிவகாமியின் பக்கம் நோக்கிப் பரபரப்புடன், "அம்மா!..." என்றார்.

"வேண்டாம், தளபதி! வேண்டாம். இந்தக் கிராதகி நம்மைக் கள்ள பிக்ஷுவிடம் காட்டிக் கொடுக்கத்தான் பார்க்கிறாள்! வாரும் போகலாம்!" என்று மாமல்லர் இரைந்து கூறிப் பரஞ்சோதியின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு அம்மாளிகையின் பின்புறமாக விரைந்தார்.

அடுத்த கணம் அவர்கள் நால்வரும் சிவகாமியின் பார்வையிலிருந்து மறைந்தார்கள்.
Back to top Go down
AruN
Admin
Admin
AruN


Posts : 1961
Join date : 2012-01-26

கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 7 Empty
PostSubject: Re: கல்கியின் சிவகாமியின் சபதம்   கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 7 Icon_minitimeMon May 28, 2012 6:13 pm

கல்கியின் சிவகாமியின் சபதம்

மூன்றாம் பாகம் : பிக்ஷுவின் காதல்

55. கத்தி பாய்ந்தது!


மாமல்லர் முதலியோர் சென்ற பக்கத்தைச் சிவகாமி ஒரு கணம் வெறித்து நோக்கினாள். மறுகணம் படீரென்று பூமியில் குப்புற விழுந்தாள். அவளுடைய தேகத்தை யாரோ கட்புலனாகாத ஒரு மாய அரக்கன் முறுக்கிப் பிழிவது போலிருந்தது. உடம்பிலுள்ள எலும்புகள் எல்லாம் நறநறவென்று ஒடிவது போலத் தோன்றியது. அவளுடைய நெஞ்சின் மேல் ஒரு பெரிய மலையை வைத்து அமுக்குவது போலிருந்தது. அவளுடைய குரல்வளையை ஒரு விஷநாகம் சுற்றி இறுக்குவது போலத் தோன்றியது. ஒரு கணம் சுற்றிலும் ஒரே இருள் மயமாக இருந்தது. மறுகணம் தலைக்குள்ளே ஆயிரமாயிரம் மின்னல்கள் பாய்ந்தன. வீடும் விளக்கும் அவளைச் சுற்றிக் கரகரவென்று சுழன்றன. கீழே கீழே கீழே இன்னும் கீழே அதலபாதாளத்தை நோக்கிச் சிவகாமி விழுந்து கொண்டிருந்தாள். ஆகா! இப்படி விழுவதற்கு முடிவே கிடையாதா? என்றென்றைக்கும் கீழே கீழே போய்க் கொண்டிருக்க வேண்டியதுதானா?

"சிவகாமி! சிவகாமி!" என்று எங்கேயோயிருந்து யாரோ அழைத்தார்கள். அது மாமல்லரின் குரல் அல்ல, நிச்சயம். முகத்தின் அருகே நாகப்பாம்பு சீறுவது போல் சத்தம் கேட்டது. உஷ்ணமான மூச்சு முகத்தின் மீது விழுந்தது. சிவகாமி கண்களைத் திறந்தாள்.

ஐயோ! படமெடுத்தாடும் சர்ப்பத்தின் முகம்! தீப்பிழம்பாக ஜொலித்த பாம்பின் கண்கள்! இல்லை; இல்லை! நாகநந்தி பிக்ஷுவின் முகம். அவர் மூச்சுவிடும் விஷக் காற்றுத்தான் தன்னுடைய முகத்தின் மேல் படுகிறது.

சிவகாமி ஒரு பெரும் பிரயத்தனம் செய்து பளிச்சென்று எழுந்து உட்கார்ந்தாள். பிக்ஷுவை விட்டு விலகிச் சற்றுத் தூரத்துக்கு நகர்ந்து சென்றாள். அவர் தேகமெல்லாம் படபடத்து நடுங்கியது.

நாகநந்தி அவளைக் கருணையுடன் பார்த்து, "பெண்ணே! உனக்கு என்ன நேர்ந்தது? என்ன ஆபத்து விளைந்தது! ஏன் அவ்வாறு தரையிலே உணர்வற்றுக் கிடந்தாய்? பாவம்! தன்னந் தனியாக இந்தப் பெரிய வீட்டில் வசிப்பது சிரமமான காரியம்தான். உன்னுடைய தாதிப் பெண்ணைக் காணோமே? எங்கே போய் விட்டாள்!..." என்று கேட்டவண்ணம் சுற்று முற்றும் பார்த்தார்.

அப்போது அவர் பார்த்த திக்கில் மாமல்லர் போகும் அவசரத்திலே விட்டு விட்டுப்போன தலைப்பாகையும் அங்கவஸ்திரமும் கிடப்பதைச் சிவகாமி பார்த்துப் பெருந்திகிலடைந்தாள். நாகநந்தி அவற்றைக் கவனியாமல் திரும்பிச் சிவகாமியின் அருகில் வந்து, "பெண்ணே! நான் சொல்வதைக் கேள். உன்னுடைய நன்மைக்காகவே சொல்லுகிறேன்!" என்று சொல்லிய வண்ணம் சிவகாமியின் ஒரு கரத்தைத் தன் இரும்பையொத்த கரத்தினால் பற்றினார்.

அப்போது சிவகாமியின் உடம்பு மறுபடியும் நடுங்கிற்று. கொடிய கண்களையுடைய நாக சர்ப்பம் படமெடுத்துத் தன்னைக் கடிக்க வருவது போன்ற பிரமை ஒரு கணம் ஏற்பட்டது. சட்டென்று சமாளித்துக் கையை வெடுக்கென்று எடுத்துக் கொண்டாள்.

"ஆ! சிவகாமி! ஏன் இப்படி என்னைக் கண்டு நடுங்குகிறாய்? உனக்கு நான் என்ன தீங்கு செய்தேன்! உன்னிடம் உண்மையான அபிமானம் கொண்டதல்லாமல் உனக்கு நான் ஒரு தீங்கும் செய்யவில்லையே! உன் தந்தையின் உயிரைக் காப்பாற்றியதன்றி வேறொரு அபசாரமும் உனக்குச் செய்யவில்லையே? ஏன் என்னை வெறுக்கிறாய்?" என்று பிக்ஷு கனிவு ததும்பும் குரலில் கேட்டார்.

"சுவாமி! தங்களைக் கண்டு நான் பயப்படவும் இல்லை. தங்களிடம் எனக்கு வெறுப்பும் இல்லை. தாங்கள் எனக்கு என்ன தீங்கு செய்தீர்கள், தங்களை நான் வெறுப்பதற்கு? எவ்வளவோ நன்மைதான் செய்திருக்கிறீர்கள்!" என்றாள் சிவகாமி.

"சந்தோஷம், சிவகாமி! இந்த மட்டும் நீ சொன்னதே போதும். உன் தேகம் அடிக்கடி நடுங்குகிறதே, அது ஏன்? உடம்பு ஏதேனும் அசௌக்கியமா?" என்று வினவினார்.

"ஆம், அடிகளே! உடம்பு சுகமில்லை!" என்றாள் சிவகாமி.

"அடடா! அப்படியா? நாளைக் காலையில் நல்ல வைத்தியனை அனுப்புகிறேன், ஆனால், இப்படி உடம்பு அசௌக்கியமாயிருக்கும் போது உன்னை விட்டு விட்டு உன் தாதிப்பெண் எங்கே போனாள்? எங்கேயாவது மூலையில் படுத்துத் தூங்குகிறாளா, என்ன?" என்று அங்குமிங்கும் சுற்றிப் பார்த்தார் பிக்ஷு.

சற்றுத் தூரத்தில் தூணுக்குப் பின்னால் கிடந்த தலைப்பாகையும் அங்கவஸ்திரமும் இப்போது அவருடைய கண்களைக் கவர்ந்தன. "ஆ! இது என்ன இங்கே யாரோ வந்திருக்கிறார்கள் போலிருக்கிறதே?" என்று அருகில் சென்று உற்றுப் பார்த்தார்.

திரும்பிச் சிவகாமியை நோக்கி, "சபாஷ்! சிவகாமி! அதற்குள்ளே இங்கே உனக்குக் காதலர்கள் ஏற்பட்டு விட்டார்களா? உள்ளூர் மனிதர்கள்தானா! அல்லது வெளியூர்க்காரர்களா?" என்று பரிகாசச் சிரிப்புடன் கேட்டார்.

சிவகாமி மௌனமாய் நின்றதைப் பார்த்துவிட்டு, "நல்லது; நீ மறுமொழி சொல்ல மாட்டாய், நானே போய்க் கண்டு பிடிக்கிறேன்!" என்று சொல்லிவிட்டு வாசலை நோக்கிச் சென்றார்.

அப்போது சிவகாமிக்கு, "இவள் புத்த பிக்ஷுவிடம் நம்மைக் காட்டிக் கொடுக்கப் பார்க்கிறாள்!" என்று மாமல்லர் சொன்னது நினைவு வந்தது. பளிச்சென்று பிக்ஷு அவர்களைக் கண்டுபிடிப்பதால் நடக்கக் கூடிய விபரீதங்கள் எல்லாம் நினைவுக்கு வந்தன. சிவகாமி துடிதுடித்து அங்குமிங்கும் பார்த்தாள். இளவரசரின் அங்கவஸ்திரத்துக்கு அடியில் ஏதோ பளபளவென்று ஒரு பொருள் தெரிந்தது. சிவகாமியின் கண்களில் விசித்திரமான ஒளி தோன்றியது. பாய்ந்து சென்று அந்தப் பொருளை எடுத்தாள். அவள் எதிர் பார்த்தது போல் அது ஒரு கத்திதான்.

சிவகாமி அடுத்த கணம் அந்தக் கத்தியைப் புத்த பிக்ஷுவின் முதுகை நோக்கி எறிந்தாள். பிக்ஷு 'வீல்' என்று சத்தமிட்டுக் கொண்டு விழுந்தார். முதுகில் கத்தி பாய்ந்த இடத்திலிருந்து இரத்தம் கசிந்தது.

சிவகாமியைப் பிக்ஷு திரும்பிப் பார்த்து, இரக்கம் ததும்பிய குரலில், "பெண்ணே! என்ன காரியம் செய்தாய்? உன்னை உன் காதலன் மாமல்லனிடம் சேர்ப்பித்து விடலாமென்று எண்ணியல்லவா அவசரமாகக் கிளம்பினேன்?" என்றார்.
Back to top Go down
AruN
Admin
Admin
AruN


Posts : 1961
Join date : 2012-01-26

கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 7 Empty
PostSubject: Re: கல்கியின் சிவகாமியின் சபதம்   கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 7 Icon_minitimeMon May 28, 2012 6:15 pm

கல்கியின் சிவகாமியின் சபதம்

மூன்றாம் பாகம் : பிக்ஷுவின் காதல்

56. மகேந்திரர் கோரிக்கை


மாமல்லர், பரஞ்சோதி முதலியவர்கள் காஞ்சிக்குத் திரும்பி வந்த போது, மகேந்திர பல்லவரின் தேகநிலை முன்னை விட மோசமாகியிருந்தது. அவர்கள் சிவகாமியை அழைத்து வரவில்லையென்று தெரிந்த பிற்பாடு, அவருடைய உடம்பு மேலும் நலிவடைந்தது.

திருவெண்காட்டு நமசிவாய வைத்தியர் எவ்வளவோ திறமையாக வைத்தியம் செய்தும், தேக நிலைமையில் அபிவிருத்தி ஏற்படவில்லை.

மகேந்திர பல்லவர் ஒருநாள் தம் புதல்வர் மாமல்லரையும் மந்திரி மண்டலத்தாரையும், படைத் தலைவர்களையும், கோட்டத் தலைவர்களையும் அழைத்து வரச் செய்தார். படுக்கையில் படுத்தபடியே சுற்றிலும் சூழ்ந்து நின்றவர்களைச் சக்கரவர்த்தி பார்த்தார். எல்லாருடைய கண்களிலும் கண்ணீர் கசிந்திருப்பதையும், எல்லாருடைய முகத்திலும் பக்தி விசுவாசம் ததும்பிக் கொண்டிருப்பதையும் கவனித்தார்.

மகேந்திர பல்லவரின் பழைய சிம்ம கர்ஜனைக் குரலைக் கேட்டிருந்தவர்கள், இப்போது அவருடைய மெலிந்த ஈனஸ்வரமான குரலைக் கேட்டுத் திடுக்கிட்டார்கள். தங்களுடைய உணர்ச்சியை வெளிக்காட்டாமல் தடுத்துக் கொள்ள முயன்றார்கள்.

மகேந்திர பல்லவர் சொன்னார்: "நான் இந்தப் புகழ்பெற்ற பல்லவ சிம்மாசனத்தில் ஏறி, இன்றைக்கு இருபத்தைந்து வருஷம் ஆகிறது. இவ்வளவு காலமும் நீங்கள் காட்டிய பக்தியும் விசுவாசமும் இணையற்றவை. காஞ்சியின் புகழ் பாரத நாடெங்கும் ஓங்கி நின்ற காலத்தில், நீங்கள் என்னிடம் பக்தி விசுவாசத்துடன் நடந்து கொண்டீர்கள். என்னுடைய விருப்பமே கட்டளையாகவும் என்னுடைய வார்த்தையே சட்டமாகவும் பாவித்து வந்தீர்கள். அது பெரிய காரியமல்ல. நான் தவறுக்கு மேல் தவறாகச் செய்து வந்த காலத்திலும் காஞ்சியின் புகழ் மங்கி வந்த நாளிலும் படையெடுத்து வந்த பகைவர்களை முன்னேற விட்டுப் பின்வாங்கி வந்த காலத்திலும், காஞ்சிக் கோட்டைக்குள் நாம் மறைந்திருக்க வேண்டி வந்த காலத்திலும் என்னிடம் இடைவிடாத விசுவாசம் காட்டி வந்தீர்கள். மாறாத பக்தி செலுத்தி வந்தீர்கள். சளுக்க மன்னன் புலிகேசியை உங்களுடைய விருப்பத்திற்கு மாறாக நான் விருந்துக்கு அழைத்ததையும் அதனால் விளைந்த விபரீதங்களையும் நீங்கள் பொறுத்துக் கொண்டிருந்தீர்கள். எனக்கு அந்திய காலம் நெருங்கியிருக்கும் இந்தச் சமயத்தில் உங்களுக்கெல்லாம் என் மனத்தில் பொங்கிக் கொண்டிருக்கும் எல்லையற்ற நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் செய்த தவறுகளுக்காகவும் என்னால் உங்களுக்கெல்லாம் நேர்ந்த கஷ்டங்களுக்காகவும் மன்னிக்கும்படியாக ரொம்பவும் கேட்டுக் கொள்கிறேன்..."

இவ்விதம் மகேந்திர பல்லவர் பேசிய போது, சபையிலே சிலர் விம்மி அழுதார்கள். முதன் மந்திரி ஓர் அடி முன்னால் வந்து "பிரபு! இப்படியெல்லாம் பேசக் கூடாது என்று பிரார்த்திக்கிறேன். எங்களிடம் தாங்கள் மன்னிப்புக் கேட்பது எங்களைத் தண்டிப்பதேயாகும். தங்கள் மேல் இல்லாத குற்றங்களையெல்லாம் சுமத்திக் கொண்டு, எங்களை வேதனைக்கு ஆளாக்குகிறீர்கள். நடந்ததெல்லாம் விதிவசத்தினால் நடந்தது. சென்று போன காரியங்களைப் பற்றிச் சிந்திப்பதில் பயனில்லை!" என்றார்.

மகேந்திர சக்கரவர்த்தி மேலும் கூறினார்: "சாரங்கதேவ பட்டரின் மொழிகள் என்னை மேலும் உங்களிடம் நன்றிக்கடன் பட்டவனாகச் செய்கின்றன. இன்று உங்களையெல்லாம் நான் அழைத்ததன் காரணத்தைச் சொல்கிறேன். என் வாழ்நாளின் இறுதி நெருங்கி விட்டது. இன்னும் சில நாளைக்கெல்லாம் இந்த மெலிந்து நைந்த தேகத்திலிருந்து என் ஆவி பிரிந்து போய் விடும். என் அருமைக் குமாரன் நரசிம்மன் வேத விதிப்படி இறந்து போன தந்தைக்குச் செய்ய வேண்டிய உத்தரக் கிரியைகளைச் செய்வான்..." என்று சக்கரவர்த்தி சொன்னபோது, மாமல்லர் தாங்க முடியாத துக்கமும் ஆத்திரமும் பொங்க, "அப்பா! அப்பா!" என்று அலறினார்.

மகேந்திர பல்லவர் அருகில் நின்ற மகனை அன்புடன் தழுவிக் கொண்டு, உச்சி முகந்து, "குழந்தாய்! நான் சொல்ல வேண்டியதைச் சொல்லித்தான் ஆக வேண்டும். உனக்குக் கேட்பதற்குக் கஷ்டமாயிருந்தால் சற்று வெளியே போய் இருந்து விட்டு அப்புறம் வா!" என்றார். ஆனால் அவ்விதம் மாமல்லர் வெளியேறவில்லை. மறுபடியும் மந்திரி பிரதானிகளைப் பார்த்துச் சக்கரவர்த்தி கூறினார்:

"என் அருமை மகன் எனக்குரிய உத்திரக் கிரியைகளைச் செய்வான். நீங்களும் காலம் சென்ற சக்கரவர்த்திக்குரிய மரியாதைகளைச் செய்வீர்கள். ஆனால், இதனாலெல்லாம் என் ஆத்மா சாந்தி அடையவே அடையாது. இப்போது நான் உங்களிடம் கேட்டுக் கொள்ளப் போகும் கோரிக்கையை நிறைவேற்றி வைத்தால் என் ஆத்மா சாந்தி அடையும். இல்லாவிட்டால் சொர்க்கத்திலே இருந்தாலும் என் ஆவி நிம்மதி அடையாது."

"பிரபு! சொல்லுங்கள். தங்களுடைய ஆக்ஞை எதுவானாலும், அதை நிறைவேற்றி வைப்பதாக இங்குள்ளவர் அனைவரும் சபதம் செய்ய ஆயத்தமாயிருக்கிறோம்!" என்று முதல் அமைச்சர் கூறினார்.

"என்னுடைய அஜாக்கிரதையினாலும் சளுக்க மன்னனின் வஞ்சகத்தினாலும் பல்லவ வம்சத்துக்குப் பெரிய அவமானம் நேர்ந்து விட்டதை நீங்கள் அறிவீர்கள். அறுநூறு வருஷத்து வீரப் புகழுக்கு என் காலத்தில் பங்கம் நேர்ந்துவிட்டது. அந்த அவமானத்தை என்னாலே துடைக்க முடியவில்லை. இழந்து விட்ட பல்லவ வம்சத்துப் புகழை நிலைநாட்டாமலே நான் உங்களிடம் விடைபெற்றுக் கொள்கிறேன். நான் செய்ய முடியாமற்போன காரியத்தை நீங்கள் நிறைவேற்றி வைக்க வேண்டும். பல்லவ சைனியம் படையெடுத்துச் சென்று, சளுக்கரை வென்று, புலிகேசியைக் கொன்று, வாதாபி நகரை அழித்து, தீ வைத்து எரிக்க வேண்டும். வாதாபி நகரம் இருந்த இடத்தில் பல்லவ ஜயஸ்தம்பம் கம்பீரமாக வானளாவி நிற்க வேண்டும். அப்போதுதான் பல்லவ வம்சத்துக்கும் தமிழகத்தின் வீரத்துக்கும் நேர்ந்துள்ள களங்கம் நிவர்த்தியாகும். இதுவே என் கோரிக்கை, என்ன சொல்கிறீர்கள்? நிறைவேற்றுவீர்களா?"

"நிறைவேற்றுகிறோம்", நிறைவேற்றுகிறோம்" என்று ஏக காலத்தில் பல குரல்கள் ஒலித்தன.

"மகேந்திர பல்லவேந்திரர் வாழ்க! வீர மாமல்லர் வாழ்க!" என்ற ஜயகோஷங்களும் முழங்கின.

மகேந்திர பல்லவர் இன்னொரு தடவை எல்லாரையும் பார்த்து, "மறுமுறையும் உங்களுக்கு என் இருதயத்தில் பொங்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

அப்போது முதல் அமைச்சர், "பிரபு ஒரு விஷயம், தங்கள் கோரிக்கையை வெளியிட்ட போது, இங்குள்ள நாங்கள் அனைவரும் அதை நிறைவேற்றி வைப்பதாக ஒப்புக் கொண்டு கோஷித்தோம். ஆனால், முக்கியமாகத் தங்கள் கோரிக்கையை நிறைவேற்றி வைக்க வேண்டிய இருவரும் சும்மா இருந்தார்கள். குமார சக்கரவர்த்தியையும் சேனாபதி பரஞ்சோதியையுந்தான் சொல்கிறேன். அவர்கள் மௌனமாயிருந்தது எங்களுக்கு அர்த்தமாகவில்லை" என்றார்.

"மாமல்லனும் பரஞ்சோதியும் ஏற்கெனவே எனக்கு அவ்வாறு வாக்களித்துச் சபதம் கூறியிருக்கிறார்கள். அதனாலேதான் இப்போது சும்மா இருந்தார்கள். அவர்கள் செய்த சபதத்தை நிறைவேற்றி வைக்க நீங்கள் அவர்களுக்கு ஒத்தாசை செய்ய வேண்டும். சபையோர்களே! நான் மாமல்லனோடு ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டியிருக்கிறது. அதனுடைய முடிவை உங்களுக்கும் நான் தெரிவித்தாக வேண்டும். சற்று எங்களுக்கு அவகாசம் கொடுப்பீர்களா?" என்று கேட்டார்.

Back to top Go down
AruN
Admin
Admin
AruN


Posts : 1961
Join date : 2012-01-26

கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 7 Empty
PostSubject: Re: கல்கியின் சிவகாமியின் சபதம்   கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 7 Icon_minitimeMon May 28, 2012 6:18 pm

கல்கியின் சிவகாமியின் சபதம்

மூன்றாம் பாகம் : பிக்ஷுவின் காதல்

57. இராஜகுல தர்மம்


அமைச்சர்களும் சற்று விலகிச் சென்றார்கள். மறுபடியும் சக்கரவர்த்தி அழைத்தவுடனே திரும்பி வருவதற்கு ஆயத்தமாகக் காத்திருந்தார்கள். சக்கரவர்த்திக்குச் சமீபமாக மாமல்லரும் அவர்களுக்குச் சற்றுத் தூரத்தில் பரஞ்சோதியும் வணக்கத்துடன் நின்றார்கள்.

மகேந்திர பல்லவர் படுத்திருந்த மண்டபத்துக்கு ஒரு பக்கத்தில் அந்தப்புரத்தின் வாசல் இருந்தது. மகேந்திர பல்லவர் அங்கே திரும்பி நோக்கியதும் தாதி ஒருத்தி ஓடி வந்தாள். அவளிடம், "மகாராணியை அழைத்து வா!" என்று பல்லவ வேந்தர் ஆக்ஞாபித்தார்.

"பின்னர் மாமல்லரைப் பார்த்து, "குழந்தாய்! நான் கண் மூடுவதற்குள் இரண்டு காரியங்களை நிறைவேற்ற வேண்டுமென்று தீர்மானித்திருந்தேன். அதில் ஒன்று நிறைவேறி விட்டது. சிவகாமியின் சபதத்தைப் பூர்த்தி செய்து அவளை வாதாபியிலிருந்து நீ அழைத்து வரும் விஷயத்தில் நமது மந்திரிப் பிரதானிகளால் ஏதேனும் தடை நேராதிருக்கும் பொருட்டு அவர்களிடம் உன் முன்னிலையில் வாக்குறுதி பெற்றுக் கொண்டேன். வாக்குறுதியிலிருந்து அவர்கள் பிறழ மாட்டார்கள். வாதாபிப் படையெடுப்புக்கு உனக்குப் பூரண பக்கபலம் அளிப்பார்கள்" என்றார். மாமல்லர் மறுமொழி எதுவும் சொல்லவில்லை.

"மகனே! நான் செய்ய விரும்பும் இரண்டாவது காரியம் உன்னைப் பொறுத்திருக்கின்றது. நீதான் அதை நிறைவேற்றித் தர வேண்டும். மரணத்தை எதிர்பார்க்கும் சக்கரவர்த்தியின் கோரிக்கையை மந்திரி பிரதானிகள் உடனே ஒப்புக் கொண்டார்கள். என் அருமைப் புதல்வனாகிய நீயும் என் அந்திமகால வேண்டுகோளை நிறைவேற்றித் தருவாயல்லவா?" என்றார் மகேந்திரர்."

"அப்பா! என்ன வேண்டுமானாலும் எனக்குக் கட்டளையிடுங்கள். நிறைவேற்றுகிறேன். கோரிக்கை, வேண்டுகோள் என்று மட்டும் சொல்லாதீர்கள்!" என்றார் மாமல்லர்.

"குமாரா! இந்தப் பெரிய சாம்ராஜ்யத்தை நிர்வகிக்கும் பொறுப்பு கூடிய சீக்கிரம் உன் தலையில் சாரப் போகிறது. ஆயிரம் ஆண்டுகளாகப் புகழ்பெற்ற காஞ்சிமா நகரின் சிம்மாசனத்தில் நீ வீற்றிருக்கும் காலம் நெருங்கி வந்திருக்கிறது.."

"அப்பா! இவ்விதமெல்லாம் தாங்கள் பேசுவதானால், நான் இங்கிருந்து போய் விட விரும்புகிறேன். எனக்குச் சிம்மாசனமும் வேண்டாம், சாம்ராஜ்யமும் வேண்டாம். தாங்கள்தான் எனக்கு வேண்டும். நெடுங்காலம் தாங்கள் திடகாத்திரமாக வாழ வேண்டும்..."

"மாமல்லா! நம்முடைய கண்களை நாமே மூடிக் கொண்டு எதிரேயுள்ளதைப் பார்க்காமல் இருப்பதில் பயனில்லை. இனி நெடுங்காலம் நான் ஜீவித்திருக்கப் போவதில்லை. அப்படி ஜீவித்திருந்தாலும் திடகாத்திரமாக இருக்கப் போவதில்லை. சாம்ராஜ்ய பாரத்தை இனிமேல் என்னால் ஒரு நிமிஷமும் தாங்க முடியாது. அந்தப் பொறுப்பை நீதான் வகித்தாக வேண்டும்.."

"பொறுப்பு வகிக்க மாட்டேன் என்று நான் சொல்லவில்லையே? காஞ்சி சிம்மாசனத்தில் தாங்கள் இருந்து கொண்டு எனக்குக் கட்டளையிடுங்கள், நான் நிறைவேற்றாவிடில் கேளுங்கள்."

"நல்லது மகனே! இந்தப் பல்லவ சாம்ராஜ்யத்தின் பொறுப்பை நிர்வகிப்பதற்குத் தகுதி பெற வேண்டுமானால் அதற்கு முக்கியமான ஒரு நிபந்தனை இருக்கிறது. அதை நீ பூர்த்தி செய்தாக வேண்டும்!"

"நிபந்தனையைச் சொல்லுங்கள், அப்பா!" என்றார் மாமல்லர் அவருடைய உள்ளத்தில் ஏதோ ஒருவித வேதனை உண்டாயிற்று.

"குழந்தாய்! வளைத்து வளைத்துப் பேசுவதில் என்ன பயன்? நீ எனக்கு ஒரே மகன், வாழையடி வாழையாக வந்த பல்லவ வம்சம் உன்னோடு முடிவடைந்து விடக்கூடாது. காஞ்சி சிம்மாசனத்தில் ஏறத் தகுதி பெறுவதற்கு நீ கலியாணம் செய்து கொள்ள வேண்டும். மாமல்லா! பாண்டிய இராஜகுமாரியை மணந்து கொள். நான் கண்ணை மூடுவதற்குள்ளே நீ இல்லறம் மேற்கொண்டு நான் பார்த்து விட வேண்டும். இல்லாவிட்டால் என் மனம் நிம்மதி அடையாது, என் நெஞ்சு வேகாது!" என்றார் சக்கரவர்த்தி.

மேற்படி மொழிகள் மாமல்லரின் இருதய வேதனையை பன்மடங்கு அதிகமாக்கின. அவருடைய நெஞ்சில் ஈட்டியால் குத்தியிருந்தால் கூட அத்தனை துன்பம் உண்டாகியிராது.

சற்று மௌனமாய் நின்று விட்டு, "அப்பா! ஏன் இப்படி என்னைச் சோதனை செய்கிறீர்கள்? என் மனோநிலை உங்களுக்குத் தெரியாதா? சிவகாமியின் மேல் நான் அழியாத காதல் கொண்டிருப்பதை அறியீர்களா? ஒரு பெண்ணிடம் மனம் சென்ற பிறகு, இன்னொரு பெண்ணை எப்படி மணப்பேன்? அப்படிச் செய்வது மூன்று பேருடைய வாழ்க்கையையும் பாழாக்குவதாகாதா? இத்தகைய காரியத்தைச் செய்யும்படி எனக்குக் கட்டளையிடுகிறீர்களா?" என்று மாமல்லர் கேட்டார்.

அவருடைய வார்த்தை ஒவ்வொன்றும் இருதயத்தின் அடிவாரத்திலிருந்து நெஞ்சின் இரத்தம் தோய்ந்து வெளிவந்தது.

மகேந்திர பல்லவர் குமாரனை அன்புடனும் ஆதரவுடனும் தடவிக் கொடுத்தார். பிறகு கனிவு ததும்பும் குரலில் கூறினார்: "ஆம், நரசிம்மா! அப்படிப்பட்ட காரியத்தைச் செய்யும்படி தான் சொல்கிறேன். அந்தக் காரியத்தின் தன்மையை நன்கு அறிந்து சொல்கிறேன். கேள், மாமல்லா! இந்த உலகத்தில் சாதாரண மனிதர்களுக்குத் தர்மம் வேறு. இராஜகுலத்தில் பிறந்தவர்களுக்குத் தர்மம் வேறு. சாதாரண ஜனங்கள் தங்களுடைய சொந்த சுகதுக்கங்களை உத்தேசித்துக் காரியம் செய்யலாம். ஆனால் ராஜ குலத்தில் பிறந்தவர்கள் அவ்வாறு செய்வதற்கில்லை. தங்கள் சுகதுக்கங்களை அவர்கள் மறந்துவிட வேண்டும். இராஜ்யத்தின் நன்மையைக் கருதியே இராஜ குலத்தினர் தங்கள் சொந்தக் காரியங்களையும் வகுத்துக் கொள்ள வேண்டும். மாமல்லா! யோசித்துப் பார்! சிவகாமியை நீ மணந்து கொள்வது இனிமேல் சாத்தியமா? வாதாபிக்கு நீ படை எடுத்துப் போவது இன்றோ நாளையோ நடக்ககூடிய காரியமா? வருஷக் கணக்கில் ஆயத்தம் செய்ய வேண்டியிருக்கும். அப்புறம் யுத்தம் எத்தனை காலம் நடக்குமோ, யார் சொல்ல முடியும்? அத்தனை நாளும் நீ கலியாணம் செய்து கொள்ளாமல் இருப்பாயா? அதற்கும் பல்லவ நாட்டுப் பிரஜைகள் சம்மதிப்பார்களா?"

மாமல்லர் பெருமூச்சு விட்டார். சிவகாமியின் மீது அவருக்குச் சொல்ல முடியாத கோபம் வந்தது. அந்தப் பாதகி தன்னுடன் புறப்பட்டு வர மறுத்ததனால் தானே இப்போது இந்தத் தர்மசங்கடம் தனக்கு நேரிட்டிருக்கிறது! அவருடைய உள்ளப் போக்கை அறிந்து கொண்ட மகேந்திர பல்லவர், "குமாரா! இராஜ குலத்தினர் தங்களுடைய சுகதுக்கங்களைப் பாராமல் இராஜ்யத்துக்காகவே எல்லாக் காரியங்களும் செய்தாக வேண்டும் என்று உனக்குச் சொன்னேனல்லவா? அதை நானே என் வாழ்க்கையில் அனுசரித்து வந்திருக்கிறேன். இப்போது கூட இராஜ்யத்தின் நன்மைக்காக ஒரு பயங்கரமான காரியத்தைச் செய்வதற்கு மனம் துணிந்திருந்தேன். அந்தப் பயங்கரமான காரியம் என்ன தெரியுமா?" என்று மகேந்திர பல்லவர் நிறுத்தினார்.

மாமல்லர் ஒன்றும் புரியாதவராய்த் தாயாரையும் தந்தையையும் மாறி மாறிப் பார்த்தார். "ஆம், குமாரா! இந்த வயதில் உன் தாயாருக்கு இன்னொரு சக்களத்தியை அளிப்பதென்று தீர்மானித்திருந்தேன். நீ வாதாபியிலிருந்து சிவகாமியை இப்போது அழைத்து வந்திருந்தால், அவளை நானே மணந்து கொள்வதென்று முடிவு செய்திருந்தேன்..." என்றதும் மாமல்லர் "அப்பா!" என்று அலறினார்.

"மாமல்லா! என்னை மன்னித்து விடு! இராஜ்யத்தின் நன்மைக்காகவே அந்தப் பயங்கரமான காரியத்தைச் செய்யத் துணிந்திருந்தேன். நீ சிவகாமியை மணக்காமல் தடுக்கும் பொருட்டே அவ்விதம் செய்ய எண்ணினேன். உன் அன்னையிடமும் சொல்லி அனுமதி பெற்றேன். ஆனால், அந்தப் புண்ணியவதி வாதாபியிலிருந்து வர மறுத்து என்னை அந்தப் பயங்கரச் செயலிலிருந்து காப்பாற்றினாள்!"

மாமல்லருடைய மனம் அப்போது வாதாபி மாளிகையில் தன்னந்தனியாக உட்கார்ந்திருக்கும் சிவகாமியிடம் சென்றது. 'ஆ! அவள் தம்முடன் புறப்பட்டு வர மறுத்தது எவ்வளவு நல்லதாயிற்று?'

"குமாரா! இப்போது யோசித்துப் பார்! இராஜ்யத்தின் நன்மைக்காக நான் செய்யத் துணிந்ததைக் காட்டிலும் உன்னைச் செய்யும்படி கேட்பது பெரிய காரியமா? பாண்டியகுமாரியை மணப்பதனால் பல்லவ ராஜ்யத்துக்கு எவ்வளவு பலம் ஏற்படும் என்று சிந்தனை செய். நீ செய்வதற்குரிய மகத்தான பிரம்மாண்டமான காரியங்கள் இருக்கின்றன. வாதாபிக்குப் படையெடுத்துச் சென்று சளுக்கப் பூண்டை அடியோடு அழித்து வருவதென்பது சாமான்யமான காரியமா? அதற்கு எத்தனை துணைப் பலம் வேண்டும்? தென்னாட்டிலுள்ள எல்லா மன்னர்களும் சேர்ந்து பிரயத்தனம் செய்தாலொழிய அது சாத்தியப்படுமா? தெற்கே ஒரு சத்ருவை வைத்துக் கொண்டு வடக்கே படையெடுத்துச் செல்வது முடியுமா? நரசிம்மா! எந்த வழியில் பார்த்தாலும் பாண்டிய ராஜகுமாரியை நீ மணப்பது மிகவும் அவசியமாகிறது...."

இவ்விதம் இடைவிடாமல் பேசிய காரணத்தினால் மகேந்திர பல்லவர் பெருமூச்சு வாங்கினார். அவருடைய கஷ்டத்தைப் பார்த்த புவனமகாதேவி, "பிரபு! இவ்வளவு நேரம் பேசலாமா? வைத்தியர் அதிகம் பேசக் கூடாது என்று கட்டளையிட்டிருக்கிறாரே?" என்று சொல்லி விட்டு, மாமல்லனை பார்த்து, "குழந்தாய்! உன் தந்தையை..." என்றாள். அன்னை மேலே பேசுவதற்கு மாமல்லர் இடம்கொடுக்கவில்லை.

"அப்பா! தாங்கள் அதிகமாகப் பேச வேண்டாம். பாண்டியகுமாரியை நான் மணந்து கொள்கிறேன்!" என்று பல்லைக் கடித்துக் கொண்டு சொன்னார்.

மகேந்திர சக்கரவர்த்தியின் முகம் மலர்ந்தது. புவனமகாதேவியோ தன் கண்களில் துளித்த கண்ணீரை மறைக்க வேறு பக்கம் திரும்பினாள்.

மகேந்திர பல்லவர் சமிக்ஞை காட்டியதும் தளபதி பரஞ்சோதியும் முதல் மந்திரி பிரதானிகளும் அருகில் வந்தார்கள்.

"தலைவர்களே! அதிக நேரம் உங்களை காக்க வைத்து விட்டேன். அவ்வளவுக்கவ்வளவு உங்களுக்குக் குதூகலச் செய்தியைத் தெரிவிக்கப் போகிறேன். குமாரச் சக்கரவர்த்திக்கும் பாண்டிய குமாரிக்கும் கலியாணம் நிச்சயமாகியிருக்கிறது. அதே பந்தலில் அதே முகூர்த்தத்தில் சேனாதிபதி பரஞ்சோதிக்கும் கலியாணம் நடைபெறுகிறது!" என்று மகேந்திர பல்லவர் கூறியதும், கேட்டவர்கள் அவ்வளவு பேரும் ஒரே குதூகலமாக மாமல்லர் வாழ்க! சேனாதிபதி வாழ்க!" என்று கோஷித்தார்கள்.
Back to top Go down
AruN
Admin
Admin
AruN


Posts : 1961
Join date : 2012-01-26

கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 7 Empty
PostSubject: Re: கல்கியின் சிவகாமியின் சபதம்   கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 7 Icon_minitimeTue May 29, 2012 6:30 pm

கல்கியின் சிவகாமியின் சபதம்


நான்காம் பாகம் : சிதைந்த கனவு

1. அரண்ய வீடு


ஆயனரின் அரண்ய வீட்டைச் சுற்றி மீண்டும் மரங்கள் செழித்து வளர்ந்து வானோங்கி நின்றன. நெடுந்தூரம் படர்ந்திருந்த கிளைகளில், பசுந்தழைகளும் இளந்தளிர்களும் அடர்ந்திருந்தன. சில விருட்சங்களில் மலர்கள் கொத்துக் கொத்தாய்க் குலுங்கின. இளங்காற்றில் மரக்கிளைகள் அசைந்து ஒன்றோடொன்று மோதியபோது, உதிர்ந்த மலர்கள் பூமியில் ஆங்காங்கு புஷ்பக் கம்பளம் விரித்தது போல் கிடந்தன. அந்த மலர்களின் நறுமணம் நாலாபுறமும் 'கம்' என்று நிறைந்திருந்தது. கானகத்துப் பறவைகள் அவ்வப்போது கலகலவென்று ஒலி செய்து, அங்கே குடி கொண்டிருந்த நிசப்தத்தைக் கலைத்தன.

ஆயனர் வீட்டுக்குச் சற்றுத் தூரத்தில் இருந்த தாமரைக் குளத்தில் தண்ணீர் ததும்பி அலைமோதிக் கொண்டிருந்தது. தாமரை இலைகள் தள தளவென்று விளங்கின. அந்த இலைகளின் மீது தண்ணீர்த் துளிகள் முத்துக்களைப்போல் தத்தளித்துக் கொண்டிருந்தன. இளங்காற்றில் தாமரை இலைகள் அசைந்த போது, அந்த ஒளி முத்துக்கள் அங்குமிங்கும் ஓடியது, கண்கொள்ளாக் காட்சியாயிருந்தது.

இந்த இயற்கை அழகையெல்லாம் பார்த்து அனுபவிப்பதற்கு மனிதர்கள் மட்டும் அங்கே இல்லை.

ஆயனரின் அரண்ய வீட்டைச் சுற்றி முன்னொரு காலத்தில் நூற்றுக்கணக்கான சிற்பக்கலைச் சீடர்கள் வேலை செய்து கொண்டிருந்தார்கள். தற்சமயம் அங்கே சீடன் எவனும் காணப்படவில்லை. அங்கே இப்போது குடிகொண்டிருந்த சூனியத்தின் வேதனையை இன்னும் அதிகப்படுத்தும்படியாக அரண்ய வீட்டுக்குள்ளிருந்து ஒரே ஒரு தனிக் கல்லுளியின் சத்தம் 'கல் கல்' என்று கேட்டுக் கொண்டிருந்தது.

ஆம்; வீட்டுக்குள்ளே அயனச் சிற்பியார் மீண்டும் கையில் கல்லுளி எடுத்து வேலை செய்து கொண்டிருந்தார். அருமைப் புதல்வியை ஆயனர் பறி கொடுத்து இப்போது ஒன்பது ஆண்டுகளுக்குமேல் ஆகிவிட்டன. இத்தனை காலமும் அவர் உயிர் வாழ முடிந்தது மீண்டும் சிற்பத் தொழிலில் கவனம் செலுத்திய காரணத்தினாலேதான்.

பன்னிரண்டு வருஷங்களுக்கு முன்னே, நாம் அந்தச் சிற்பக் கிரஹத்தில் பார்த்ததைக் காட்டிலும் இப்போது அதிகமான நடனச் சிலைகளைப் பார்க்கிறோம். சிலை வடிவம் ஒவ்வொன்றும் சிவகாமியை நினைவூட்டுகின்றன. மண்டபத்தின் சுவர்களிலே அந்த நாளில் நாம் பார்த்த சித்திரங்கள் எல்லாம் இப்போது நிறம் மங்கிப் போயிருக்கின்றன. இதிலிருந்து அஜந்தா வர்ண இரகசியத்தை இன்னும் ஆயனர் தெரிந்து கொள்ளவில்லையென்று நாம் ஊகித்துக் கொள்ளலாம்.

ஆயனரின் உருவத் தோற்றத்திலும் பெரிய மாறுதலைக் காண்கிறோம். அவருடைய தலை ரோமம் தும்பைப் பூவைப் போல் வெளுத்துப் போயிருக்கிறது. கண்கள் குழி விழுந்திருக்கின்றன; முகத்திலே சுருக்கங்கள் காணப்படுகின்றன. அவரை இப்போது ஆயனக் கிழவர் என்று கூறினால் யாரும் ஆட்சேபிக்க முடியாது.

ஆயனர் தமது வேலையில் முழுக்கவனத்தையும் செலுத்திக் கொண்டிருந்தபடியால், வீட்டின் வாசலில் இரட்டைக் குதிரை பூட்டிய ரதம் வந்து நின்ற சத்தம் அவர் காதில் விழவில்லை.

"தாத்தா!" என்ற மழலைக் குரலைக் கேட்டதும் திரும்பிப் பார்த்தார். மாமல்ல நரசிம்ம சக்கரவர்த்தியும் அவருடன் இரு குழந்தைகளும் வாசற்படியைத் தாண்டி வந்து கொண்டிருந்தார்கள்.

மாமல்லரின் உருவமும் ஓரளவு மாறியிருந்தது. அவருடைய முகத்தில் யௌவனத்தின் தளதளப்புக்குப் பதிலாக முதிர்ச்சி பெற்ற கம்பீர தேஜஸ் குடிகொண்டிருந்தது. படபடப்புக்குப் பதிலாகத் தெளிந்த அறிவும் முரட்டுத் துணிச்சலுக்குப் பதிலாக வயிர நெஞ்சத்தின் உறுதியும் அவருடைய கண்களிலே பிரகாசித்தன.

அவருடன் வந்த குழந்தைகளின் முகத் தோற்றத்திலிருந்து அவர்கள் அண்ணனும் தங்கையுமாக இருக்க வேண்டுமென்று ஊகிக்க முடிந்தது. அண்ணனுக்கு வயது எட்டு. தங்கைக்கு ஆறு இருக்கும். மாமல்லருடைய சாயல் இருவர் முகத்திலும் காணப்பட்டது.

"தாத்தா!" என்று கூவிக்கொண்டு இரு குழந்தைகளும் ஆயனரிடம் ஓடினார்கள். ஆயனர் அவர்களை, "என் கண்மணிகளே வாருங்கள்!" என்று சொல்லி வரவேற்றார். அவர்களைத் தம் தோளின் மேல் சாய்த்துக் கொண்டு கொஞ்சிச் சீராட்டினார். அவருடைய கண்களில் கண்ணீர் துளித்தது. அது குழந்தைகளைக் கண்டதனால் ஏற்பட்ட ஆனந்தக் கண்ணீரா, அல்லது நடந்திருக்கக் கூடியதையும் நடக்காமற் போனதையும் நினைத்துக் கொண்டதனால் ஏற்பட்ட தாபக் கண்ணீரா என்று யாரால் சொல்ல முடியும்!

குழந்தைகள் சற்று நேரம் ஆயனருடன் விளையாடிக் கொண்டிருந்த பிறகு, மாமல்ல சக்கரவர்த்தி அவர்களைப் பார்த்து, "குந்தவி! மகேந்திரா! இரண்டு பேரும் வெளியே ஓடிப்போய்ச் சிறிது நேரம் விளையாடிக் கொண்டிருங்கள். நான் தாத்தாவுடன் கொஞ்சம் பேசிவிட்டு வருகிறேன்!" என்று சொல்லிக் கொண்டே குழந்தைகளைக் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டுபோய் வெளியில் விட்டார்.

"கண்ணா! குழந்தைகளைப் பார்த்துக் கொள்!" என்று சாரதியைப் பார்த்துச் சொன்னார். அதோ குதிரைக் கடிவாளங்களைப் பிடித்துக் கொண்டு நிற்பவன் கண்ணபிரான்தான். அவன் முகத்தில் இப்போது கறுகறுவென்று மீசை வளர்ந்திருந்தது.

குழந்தைகளை வெளியில் விட்டு விட்டு வீட்டுக்குள்ளே திரும்பி வந்த மாமல்லரைப் பார்த்து ஆயனர், "பிரபு! தாங்கள் எனக்கு இட்ட கட்டளையை நிறைவேற்றிவிட்டேன். நூற்றெட்டாவது நடனச் சிலை இன்றோடு வேலை முடிகிறது" என்றார்.

சிவகாமியின் பிரிவினால் ஆயனரின் அறிவு நாளுக்கு நாள் சிதறிப்போய் வருவதைக் கண்ட நரசிம்மவர்ம சக்கரவர்த்தி, அவரை நூற்றெட்டு நடனத் தோற்றச் சிலைகளையும் பூர்த்தி செய்யும்படி கட்டளையிட்டிருந்தார். ஆயனர் வேலை செய்யத் தொடங்கிய நாளிலிருந்து அவருடைய அறிவு பாதுகாக்கப்பட்டு வந்தது.

"ஆயனரே! என்னுடைய ஆயத்தங்களும் முடிந்து விட்டன. விஜயதசமியன்று யுத்தத்துக்குப் புறப்படுகிறோம். காலையில் ஆயுதபூஜை நடத்திவிட்டு மாலையில் வாதாபி யாத்திரை தொடங்குகிறோம்!" என்றார் மாமல்லர்.

"ஐயா! நானும் கேள்விப்பட்டேன். திருக்கழுக்குன்றம் மலைச்சாரலில் வந்து சேர்ந்திருக்கும் மாபெரும் சைனியத்தைப் பற்றிக் குண்டோ தரன் கூறினான். கண்ணுக்கெட்டிய தூரம் யானைப் படையும், குதிரைப்படையும், காலாட்படையும் ஒரே சேனா சமுத்திரமாய் இருக்கிறதாமே? இன்னமும் வீரர்கள் வந்து சேர்ந்து கொண்டிருக்கிறார்களாமே? வாளும் வேலும் ஈட்டியும் மலை மலையாகக் குவிந்து கிடக்கின்றனவாமே? குண்டோ தரன் வந்து சொன்னதைக் கேட்டதும் எனக்கே திருக்கழுக்குன்றம் போய்ப் பார்க்க வேண்டுமென்று தோன்றியது."

"ஆயனரே! திருக்கழுக்குன்றத்தில் இறங்கியிருக்கும் படைகள் நமது சைனியத்தில் மூன்றில் ஒரு பங்குதான். வடக்கே பொன்முகலி நதிக்கரையில் ஒரு பெரிய சைனியம் நமது சேனாபதி பரஞ்சோதியின் தலைமையில் காத்திருக்கிறது. தெற்கேயிருந்து பாண்டியனுடைய சைனியம் விரைந்து வந்து கொண்டிருக்கிறது. வராக நதிக்கு அருகில் வந்துவிட்டதாக இன்று தான் செய்தி கிடைத்தது.

"பிரபு! என்னை மன்னிக்க வேண்டும். தாங்கள் காலங்கடத்திக் கொண்டிருப்பதாக எண்ணி நொந்து கொண்டிருந்தேன். எப்பேர்ப்பட்ட பகீரதப் பிரயத்தனம் செய்திருக்கிறீர்கள் என்று இப்போதுதான் தெரிகிறது...."

"பகீரதப் பிரயத்தனம் என்றா சொன்னீர், ஆயனரே!"

"ஆம் ஐயா!"

"ஒரு சம்பவம் ஞாபகம் இருக்கிறதா? மகேந்திர பல்லவரும், நானும், நீங்களும் கடல் மல்லைத் துறைமுகத்தில் பாறைகளைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தோம். திடீரென்று மழை பிடித்துக் கொண்டது. ஒரு பாறை இரண்டாய்ப் பிளந்தது போல் நடுவில் பள்ளமாயிருந்தது. பாறையில் பெய்த மழைத் தண்ணீர் அந்தப் பள்ளத்தின் வழியே தடதடவென்று கொட்டியது 'ஆகாச கங்கை விழுகிறது!' என்று நான் சொன்னேன். உடனே, மகேந்திர பல்லவர், 'சிற்பத்துக்கு நல்ல விஷயம்; இங்கே பகீரதன் தவத்தைச் சித்திரிக்கலாம்' என்றார். நீங்களும் அதை ஒப்புக் கொண்டு சிற்பிகளை அழைத்து வேலை தொடங்கும்படி சொன்னீர்கள். அப்போது நான் தந்தையிடம் பகீரதன் கதை சொல்லும்படி கேட்டுக் கொண்டேன்.

பகீரதன் கதையை அன்று மகேந்திர பல்லவரிடம் கேட்ட போது எனக்கு ஒரே வியப்பாயிருந்தது. பகீரதனுடைய தவத்துக்கு என்னென்ன இடையூறுகள் நேர்ந்தன? அவ்வளவையும் சமாளித்து அவன் எடுத்த காரியத்தைச் சாதித்ததைக் குறித்துப் பெரிதும் ஆச்சரியப்பட்டேன். இளம்பிள்ளைப் பிராயத்தில் அப்பாவிடம் கேட்ட அந்தக் கதை இப்போது எனக்கு வெகு உபயோகமாயிருந்தது. ஆயனரே! வாதாபியிலிருந்து நான் உங்கள் குமாரியை அழைத்து வராமல் திரும்பி வந்தபோது, மூன்று வருஷத்துக்குள்ளே படை திரட்டிக் கொண்டு வாதாபிக்குப் போகலாம் என்று எண்ணியிருந்தேன். வரும் வழியெல்லாம் அவ்வாறுதான் நானும் பரஞ்சோதியும் திட்டம் போட்டுக் கொண்டு வந்தோம். மூன்று வருஷத்தில் நடத்த எண்ணிய காரியத்துக்கு ஒன்பது வருஷம் ஆகிவிட்டது."

"பல்லவேந்திரா! ஒன்பது வருஷம் ஆயிற்று என்றா சொன்னீர்கள்? ஒன்பது யுகம் ஆனதாக எனக்குத் தோன்றுகிறது!"

"எனக்கும் அப்படித்தான், ஆயனரே! சிவகாமியைப் பார்த்துப் பல யுகம் ஆகிவிட்ட மாதிரிதான் தோன்றுகிறது. ஆனாலும், நான் என்ன செய்ய முடியும்? இரண்டு வருஷம் நாட்டில் மழையில்லாமல் பஞ்சமாய்ப் போயிற்று. ஒரு வருஷம் பெரு மழையினால் தேசங்கள் நேர்ந்தன. இலங்கை இளவரசன் மானவன்மனுக்கு ஒத்தாசை செய்ய வேண்டி வந்தது. பாண்டியனுக்கும் சேரனுக்கும் மூண்ட சண்டையில் தலையிட்டுச் சமாதானம் செய்விக்க வேண்டியிருந்தது. இத்தகைய காரணங்களினால் மனச்சோர்வு ஏற்பட்ட போதெல்லாம் அடிக்கடி துறைமுகத்துக்குச் சென்று பகீரதனுடைய தவச் சிற்பத்தைப் பார்த்தேன். மீண்டும் ஊக்கமும் தைரியமும் அடைந்தேன். கடைசியில் பகீரதன் முயற்சி பலிதமடைந்ததுபோல், என்னுடைய பிரயத்தனமும் பூர்த்தியடைந்து விட்டது. அடுத்த வாரத்தில் போருக்குப் புறப்படப் போகிறேன்."

"பிரபு! இது என்ன? 'புறப்படப் போகிறேன்' என்று சொல்கிறீர்கள்?" என்று கேட்டார் ஆயனர்.

"வேறு என்ன சொல்லவேண்டும், ஆயனரே?"

"'புறப்படப் போகிறோம்' என்று சொல்ல வேண்டும். பல்லவேந்திரா! இன்னும் எத்தனை காலம் நான் உயிரோடிருப்பேனோ, தெரியாது. சிவகாமியை ஒரு தடவை கண்ணாலே பார்த்து விட்டாவது கண்ணை மூடுகிறேன்."

மாமல்லர் தம்முடைய கண்களில் துளித்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, "ஐயா! உம்முடைய மகளுக்காக நீர் உயிர் வாழ்ந்தே ஆக வேண்டும். சாவைப் பற்றி நினைக்கவே வேண்டாம். நீங்கள், வந்தே தீரவேண்டுமென்றால் அழைத்துப் போகிறேன். விஜயதசமியன்று புறப்பட ஆயத்தமாயிருங்கள்!" என்றார்.
Back to top Go down
AruN
Admin
Admin
AruN


Posts : 1961
Join date : 2012-01-26

கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 7 Empty
PostSubject: Re: கல்கியின் சிவகாமியின் சபதம்   கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 7 Icon_minitimeTue May 29, 2012 6:32 pm

கல்கியின் சிவகாமியின் சபதம்


நான்காம் பாகம் : சிதைந்த கனவு

2. மானவன்மன்


திருக்கழுக்குன்றத்தைச் சுற்றிலும் விசாலமான பிரதேசத்தில் பல்லவ சைனியம் தண்டு இறங்கியிருந்தது. அந்தக் குன்றின் உச்சியில் வீற்றிருந்த சிவபெருமானாகட்டும், அந்தப் பெருமானைத் தினந்தோறும் வந்து வழிபட்டுப் பிரஸாதம் உண்டு சென்ற கழுகுகள் ஆகட்டும், அதற்கு முன்னால் அக்குன்றின் சாரலில் அம்மாதிரிக் காட்சியை எப்போதும் பார்த்திருக்க முடியாது. குன்றின் மேலேயிருந்து வடக்கே நோக்கினால் கண்ணுக்கு எட்டிய தூரத்துக்கு ஒரே யானைகள் யானைகள், யானைகள்! உலகத்திலே இத்தனை யானைகள் இருக்க முடியாது! இவ்வளவு யானைகளும் ஒரே இடத்தில் வந்து சேர்ந்திருப்பதினால் பூமி நிலை பெயர்ந்து விடாதா என்றெல்லாம் பார்ப்பவர்கள் மனத்தில் சந்தேகத்தைக் கிளப்பும்படியாக எல்லையில்லாத தூரம் ஒரே யானை மயமாகக் காணப்பட்டது.

கிழக்கே திரும்பிப் பார்த்தால், உலகத்திலே குதிரைகளைத் தவிர வேறு ஜீவராசிகள் இல்லையென்று சொல்லத் தோன்றும். எல்லாம் உயர்ந்த ஜாதிக் குதிரைகள். அரபு நாட்டிலிருந்தும் பாரசீகத்திலிருந்தும் கப்பலில் வந்து மாமல்லபுரம் துறைமுகத்தில் இறங்கியவை. வெள்ளை நிறத்தவை, சிவப்பு நிறத்தவை, பளபளப்பான கரிய நிறமுடையவை, சிவப்பு நிறத்தில் வெள்ளைப் புள்ளி உள்ளவை. ஹா ஹா! அந்த அழகிய மிருகங்களைப் பார்த்துக் கொண்டேயிருக்கலாமென்று தோன்றும். போர்க்களத்துக்குப் போகும் இந்தப் பதினாயிரக்கணக்கான குதிரைகளில் எவ்வளவு குதிரைகள் உயிரோடு திரும்பி வருமோ என்று நினைத்துப் பார்த்தால் கதிகலங்கும்.

தென்புறத்தில் கண்ணுக்கெட்டிய தூரம் குதிரைகள் பூட்டிய ரதங்களும், ரிஷபங்கள் பூட்டிய வண்டிகளும், பொதி சுமக்கும் மாடுகளும் ஒட்டகங்களும் கோவேறு கழுதைகளும் காணப்பட்டன. வண்டிகளிலே தானிய மூட்டைகளும் துணி மூட்டைகளும் கத்திகளும் கேடயங்களும் வாள்களும் வேல்களும் ஈட்டிகளும் சூலங்களும் வில்களும் அம்பறாத் தூணிகளும் இன்னும் விதவிதமான விசித்திர ஆயுதங்களும் பிரம்மாண்டமான வடக் கயிறுகளும் நூல் ஏணிகளும் கொக்கிகளும் அரிவாள்களும் மண்வெட்டிகளும் தீப்பந்தங்களும் தீவர்த்திகளும் அடுக்கப்பட்டிருந்தன. வண்டியில் ஏற்றப்படாமல் இன்னும் எத்தனையோ ஆயுதங்களும் மற்றக் கருவிகளும் மலைமலையாக ஆங்காங்கு கிடந்தன. ஓரிடத்தில் மலைபோலக் குவிந்திருந்த தாழங்குடைகளைப் பார்த்தால் அவற்றைக் கொண்டு பூமியின் மீது ஒரு சொட்டு மழை கூட விழாமல் வானத்தையே மூடி மறைத்து விடலாம் என்ற எண்ணம் உண்டாகும்.

மேற்கே திரும்பினால், அம்மம்மா! பூவுலகத்திலுள்ள மனிதர்கள் எல்லாம் இங்கே திரண்டு வந்திருக்கிறார்களா என்ன? அப்படிக் கணக்கிட முடியாத வீரர்கள் ஈ மொய்ப்பது போலத் தரையை மொய்த்துக் கொண்டு நின்றார்கள்! இராவணேசுவரனுடைய மூல பல சைனியம் என்று நாம் கேள்விப்பட்டிருக்கும் மகா சைனியத்திலே கூட வீரர்களின் எண்ணிக்கை இவ்வளவு இருந்திருக்குமா என்று சொல்ல முடியாது.

இவ்விதம் அந்த நாலு வகைப்பட்ட பல்லவ சைனியமும் தண்டு இறங்கியிருந்த பிரதேசம் முழுவதிலும் ஆங்காங்கு ரிஷபக் கொடிகள் வானளாவிப் பறந்து காற்றில் ஆடிக் கொண்டிருந்தன.

மேற்கூறிய சேனா சமுத்திரத்தை அணுகி, மாமல்ல நரசிம்ம சக்கரவர்த்தியானவர் ரதத்தில் வந்து கொண்டிருந்தார்.

அவரைத் தூரத்திலே பார்த்ததும், பூரண சந்திரனைக் கண்டு ஆஹ்லாதித்துப் பொங்கும் சமுத்திரத்தைப் போல அந்தச் சேனா சமுத்திரத்தில் மகத்தான ஆரவாரம் ஏற்பட்டது. சங்கங்களும் தாரைகளும் பேரிகைகளும் முரசுகளும் 'கடுமுகங்'களும் 'சமுத்திரகோஷங்'களும் சேர்ந்தாற்போல் முழங்கியபோது எழுந்த பேரொலியானது, நாற்றிசைகளிலும் பரவி, வான முகடு வரையில் சென்று, அங்கிருந்து கிளம்பி எதிரொலியோடு மோதி, கொந்தளிக்கும் கடலில் அலைகள் ஒன்றையொன்று தாக்கி உண்டாக்குவது போன்ற பேரமளியை உண்டாக்கியது. இன்னும் அந்த வீரர் பெருங்கூட்டத்தில் ஆயிரமாயிரம் வலிய குரல்களிலிருந்து, "மாமல்லர் வாழ்க!", "புலிகேசி வீழ்க!" "காஞ்சி உயர்க!", "வாதாபிக்கு நாசம்!" என்பன போன்ற கோஷங்கள் காது செவிடுபடும்படியான பெருமுழக்கமாக ஏகோபித்து எழுந்து, வானமும் பூமியும் அதிரும்படி செய்தன.

இப்படி ஆரவாரித்த மாபெரும் சைனியத்திலிருந்து தனியே பிரிந்து உயர்ந்த ஜாதிக் குதிரை மீது ஆரோகணித்திருந்த ஒரு கம்பீர புருஷன் சக்கரவர்த்தியின் ரதத்தை எதிர்கொள்வதற்காக முன்னோக்கிச் சென்றான். ரிஷபக் கொடி ஏந்திய வீரர் இருவர் அவனைத் தொடர்ந்து பின்னால் சென்றார்கள். அப்படி மாமல்லரை எதிர்கொள்வதற்காகச் சென்றவன்தான் மானவன்மன் என்னும் இலங்கை இளவரசன்.

இந்த மானவன்மனுடைய தந்தையும் மகேந்திர பல்லவரும் நண்பர்கள். மகேந்திர பல்லவரைப் போலவே மானவன்மனுடைய தந்தையும் கலைகள் வளர்ப்பதில் ஈடுபட்டு, அரசியலை அதிகமாய்க் கவனியாது விட்டிருந்தார். இதன் பலனாக அவர் இறந்ததும் மானவன்மன் சிம்மாசனம் ஏற இடங்கொடாமல் அட்டதத்தன் என்னும் சிற்றரசன் இராஜ்யத்தைக் கைப்பற்றிக் கொண்டான். மானவன்மன் காஞ்சி மாமல்லருக்கு உதவி கோரித் தூது அனுப்பினான். அப்போதுதான் தொண்டை மண்டலத்தைப் பெரும் பஞ்சம் பீடித்திருந்தது. எனினும் மாமல்லர் ஒரு சிறு படையைக் கப்பலில் ஏற்றி இலங்கைக்கு அனுப்பி வைத்தார். அந்தப் படை இலங்கையை அடையும் சமயத்தில் மானவன்மன் படுதோல்வியுற்றுக் காட்டில் ஒளிந்து கொண்டிருந்தான். மாமல்லர் அனுப்பிய சிறு படை அட்டதத்தனோடு போரிடுவதற்குப் போதாது என்று கண்ட மானவன்மன், பல்லவர் படையோடு தானும் கப்பலில் ஏறிக் காஞ்சிக்கு வந்து சேர்ந்தான்.

மகேந்திர பல்லவருடைய சிநேகிதரின் மகன் என்ற காரணத்தினால், மானவன்மன் மீது இயற்கையாகவே மாமல்லருக்கு அன்பு ஏற்பட்டது. அதோடு அயல்நாட்டிலிருந்து தம்மை நம்பி வந்து அடைக்கலம் புகுந்தவனாகையால் அன்போடு அனுதாபமும் சேர்ந்து, அழியாத சிநேகமாக முதிர்ச்சி அடைந்தது. வெகு சீக்கிரத்தில் இணை பிரியாத தோழர்கள் ஆனார்கள். மாமல்லர் பரஞ்சோதிக்குத் தமது இருதயத்தில் எந்த ஸ்தானத்தைக் கொடுக்க விரும்பினாரோ, அந்த ஸ்தானத்தை இப்போது மானவன்மன் ஆக்கிரமித்துக் கொண்டான்.

உண்மையில் மாமல்லருக்கும் பரஞ்சோதிக்கும் மனமொத்த அந்தரங்க சிநேகிதம் எப்போதும் ஏற்படவேயில்லை. ஏனெனில், பரஞ்சோதியின் உள்ளத்தில் மாமல்லர் புராதன சக்கரவர்த்தி குலத்தில் உதித்தவராகையால் தாம் அவரோடு சரி நிகர் சமானமாக முடியாது என்னும் எண்ணம் எப்போதும் இருந்து வந்தது.

அதோடு, ஒன்பது வருஷத்துக்கு முன்னால் வாதாபியிலிருந்து திரும்பி வந்ததிலிருந்து, சேனாதிபதி பரஞ்சோதி படையெடுப்புக்கு வேண்டிய ஆயத்தங்களில் முழுவதும் கவனத்தைச் செலுத்தியிருந்தார். ஊர் ஊராகச் சென்று வீரர்களைத் திரட்டுவதிலும், அவர்களுக்குப் போர்ப் பயிற்சி அளிப்பதிலும், அவர்களில் யானைப் படை, குதிரைப் படைகளுக்கு ஆட்களைப் பொறுக்கி அமைப்பதிலும், ஆயுதங்கள் சேகரிப்பதிலும் அவர் பரிபூரணமாய் ஈடுபட்டிருந்தார். மாமல்லரிடம் சிநேகித சல்லாபம் செய்வதற்கு அவருக்கு நேரமே இருப்பதில்லை. எனவே, மாமல்லருக்கு மனமொத்துப் பழகுவதற்கு வேறொருவர் தேவையாயிருந்தது. அந்தத் தேவையை இலங்கை இளவரசன் மானவன்மன் பூர்த்தி செய்வித்தான்.

மானவன்மன் இலங்கையிலிருந்து காஞ்சி வந்தவுடனே மாமல்லர் அவனுடைய உதவிக்காகப் பெரிய சைனியத்தை அனுப்பி வைப்பதாகக் கூறினார். ஆனால் அப்போது வாதாபி படையெடுப்புக்காகச் சைனியம் திரட்டப்பட்டு வந்ததை மானவன்மன் அறிந்ததும் அந்தச் சைனியத்தில் ஒரு பெரும் பகுதியைப் பிரித்துக் கொண்டு போக விரும்பவில்லையென்பதைத் தெரிவித்தான். வாதாபி யுத்தம் முடியும் வரையில் அங்கேயே தான் தங்குவதாகவும், பிறகு இலங்கைக்குப் போவதாகவும் சொன்னான்.

இதனால் மாமல்லர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அச்சமயம் இலங்கைக்குப் பெரிய சைனியம் அனுப்புவதற்குச் சேனாதிபதி பரஞ்சோதி ஆட்சேபிப்பார் என்ற பயம் மாமல்லருக்கு உள்ளுக்குள் இருந்தது. எனவே, மானவன்மன் இலங்கைப் படையெடுப்பைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று சொன்னது நரசிம்மவர்மருக்கு மிக்க திருப்தியையளித்தது. மானவன்மனுடைய பெருந்தன்மையைப் பற்றியும், சுயநலமில்லாத உயர்ந்த குணத்தைப் பற்றியும் எல்லாரிடமும் சொல்லிச் சொல்லிப் பாராட்டினார்.

பின்னர், வாதாபிப் படையெடுப்புக்குரிய ஆயத்தங்களில் மானவன்மனும் பரிபூரணமாய் ஈடுபட்டான். முக்கியமாக யானைப் படைப் போரில் மானவன்மனுக்கு விசேஷ சாமர்த்தியம் இருந்தது. எனவே, யானைப் படைகளைப் போருக்குப் பயிற்சி செய்வதில் அவன் கவனத்தைச் செலுத்தினான்.

புலிகேசி முன்னம் படையெடுத்து வந்த போது, அவனுடைய பெரிய யானைப் படைதான் அவனுக்கு ஆரம்பத்தில் வெற்றி அளித்ததென்றும், யானைப் படை போதிய அளவில் இல்லாதபடியாலேயே மகேந்திர பல்லவர் பின்வாங்கவும் கோட்டைக்குள் ஒளியவும் நேர்ந்தது என்றும் பரஞ்சோதியும் மாமல்லரும் அறிந்திருந்தார்கள். எனவே, வாதாபிப் படையெடுப்புக்குப் பெரும் யானைப் படை சேகரிக்கத் தீர்மானித்து, சேர நாட்டிலிருந்து ஆயிரக்கணக்கான யானைகள் தருவித்திருந்தார்கள். அந்த யானைகளைப் போருக்குப் பழக்குவதற்கு மானவன்மன் மிக்க உதவியாயிருந்தான்.

வாதாபிக்குப் படை கிளம்ப வேண்டிய தினம் நெருங்க நெருங்க, மானவன்மனுக்கும் மாமல்லருக்கும் ஒரு பெரும் வாக்குப் போர் நடக்கலாயிற்று. படையெடுப்புச் சேனையோடு தானும் வாதாபி வருவதற்கு மானவன்மன் மாமல்லரின் சம்மதத்தைக் கேட்டுக் கொண்டிருந்தான். மாமல்லரோ வேறு யோசனை செய்திருந்தார். அதிதியாக வந்து அடைக்கலம் புகுந்தவனைப் போர்க்களத்துக்கு அழைத்துப் போக அவருக்கு விருப்பம் இல்லை. அதோடு அவர் மனத்தில் இன்னொரு யோசனையும் இருந்தது. தாமும் பரஞ்சோதியும் வாதாபிக்குச் சென்ற பிறகு, காஞ்சி இராஜ்யத்தைக் கவனித்துக் கொள்ளவும் அவசியமான போது தளவாடச் சாமான்கள், உணவுப் பொருள்கள் முதலியவை சேர்த்துப் போர்க்களத்துக்கு அனுப்பி வைக்கவும் திறமையுள்ள ஒருவர் காஞ்சியில் இருக்க வேண்டும். அதற்கு மானவன்மனை விடத் தகுந்தவர் வேறு யார்.

அன்றியும் மானவன்மனைக் காஞ்சியில் விட்டுப் போவதற்கு மாமல்லரின் இதய அந்தரங்கத்தில் மற்றொரு காரணமும் இருந்தது. வாழ்வு என்பது சதமல்ல. எந்த நிமிஷத்தில் யமன் எங்கே, எந்த ரூபத்தில் வருவான் என்று சொல்ல முடியாது. அதிலும் நெடுந்தூரத்திலுள்ள பகைவனைத் தாக்குவதற்குப் படையெடுத்துப் போகும்போது, எந்த இடத்தில் உயிருக்கு என்ன அபாயம் நேரும் என்று யாரால் நிர்ணயிக்க முடியும்? புலிகேசியைக் கொன்று, வாதாபியையும் நிர்மூலமாக்காமல் காஞ்சிக்குத் திரும்புவதில்லையென்று மாமல்லர் தம் மனத்திற்குள் சங்கல்பம் செய்து கொண்டிருந்தார். வெற்றி கிடைக்காவிட்டால் போர்க்களத்தில் உயிரைத் தியாகம் செய்யும்படியிருக்கும். அப்படி ஒருவேளை நேர்ந்தால் காஞ்சிப் பல்லவ இராஜ்யம் சின்னாபின்னமடையாமல் பார்த்துக் கொள்வதற்கும், குமாரன் மகேந்திரனைச் சிம்மாசனத்தில் ஏற்றி ஸ்திரப்படுத்துவதற்கும் யாராவது ஒரு திறமைசாலி வேண்டாமா? அந்தத் திறமைசாலி தம்முடைய நம்பிக்கைக்கு முழுதும் பாத்திரமானவனாயும் இருக்க வேண்டும்.

காஞ்சி இராஜ்யத்தையும் குமாரன் மகேந்திரனையும் நம்பி ஒப்படைத்து விட்டுப் போவதற்கு மானவன்மனைத் தவிர யாரும் இல்லை. தம் மைத்துனனாகிய ஜயந்தவர்ம பாண்டியனிடம் மாமல்லருக்கு அவ்வளவாக நம்பிக்கை இல்லை. ஜயந்தவர்மனுக்கு ஒரு காலத்தில் தமிழகம் முழுவதையும் ஒரு குடையின் கீழ் ஆள வேண்டுமென்ற ஆசை இருந்ததென்பது மாமல்லருக்குத் தெரியும்.

பாண்டியனிடம் தமக்கு உள்ளுக்குள் இருந்த அவநம்பிக்கையை மாமல்லர் வெளியே காட்டிக் கொள்ளாமல் வாதாபி படையெடுப்புக்கு அவனுடைய உதவியைக் கோரினார். ஜயந்தவர்மனும் தன்னுடைய மகன் நெடுமாறனின் தலைமையில் ஒரு பெரிய சைனியத்தை அனுப்புவித்தான். அந்தச் சைனியந்தான் வராக நதிக்கரைக்கு அப்போது வந்திருந்தது. இப்படி மாமல்லர் பாண்டியனிடம் யுத்தத்துக்கு உதவி பெற்றாரெனினும், தம் ஆருயிர்த் தோழனான மானவன்மனிடமே முழு நம்பிக்கையும் வைத்து, அவனைக் காஞ்சியில் இருக்கச் சொல்லி விட்டுத் தாம் வாதாபி செல்வதென்று தீர்மானித்தார்.

மானவன்மனோ, பிடிவாதமாகத் தானும் வாதாபிக்கு வரவேண்டுமென்று சொல்லிக் கொண்டிருந்தான். மேற்படி விவாதம் அவர்களுக்குள் இன்னும் முடியாமலே இருந்தது.

மாமல்லர் ரதத்திலிருந்தும் மானவன்மன் குதிரை மீதிருந்தும் கீழே குதித்தார்கள். ஒருவரையொருவர் ஆலிங்கனம் செய்து கொண்டு மகிழ்ந்தார்கள். பிறகு மானவன்மன் ரதத்திலிருந்த ஆயனரைச் சுட்டிக்காட்டி, "அண்ணா! இந்தக் கிழவரை எதற்காக அழைத்து வந்தீர்கள். படையெடுக்கும் சைனியத்தைப் பார்த்துவிட்டுப் போவதற்கா? அல்லது ஒருவேளை யுத்தத்துக்கே அழைத்துப் போக உத்தேசமா?" என்று கேட்டான்.

அதற்கு மாமல்லர், "அதை ஏன் கேட்கிறாய், தம்பி! ஆயனக் கிழவர் எல்லார்க்கும் முன்னால் தாம் போருக்குப் போக வேண்டும் என்கிறார். அவருக்குப் போட்டியாகக் குமாரன் மகேந்திரன் தானும் யுத்தத்துக்குக் கிளம்புவேனென்கிறான். 'அண்ணா யுத்தத்துக்குப் போனால் நானும் போவேன்' என்கிறாள் குந்தவி. இதோடு போச்சா? நமது சாரதி கண்ணன் மகன் சின்னக் கண்ணன் இருக்கிறான் அல்லவா? அவன் நேற்றுக் கையிலே கத்தி எடுத்து கொண்டு தோட்டத்துக்குள் புகுந்து, 'சளுக்கர் தலையை இப்படித்தான் வெட்டுவேன்' என்று சொல்லிக் கொண்டே அநேகச் செடிகளை வெட்டித் தள்ளி விட்டானாம்!" என்றார்.

மானவன்மன் குறுக்கிட்டு, "ஆயனக் கிழவர், சின்னக் கண்ணன், குமார சக்கரவர்த்தி, குந்தவி தேவி ஆகிய வீரர்களைப் போர்க்களத்துக்கு அழைத்துப் போங்கள். என்னைப் போன்ற கையாலாகாதவர்களைக் காஞ்சியில் விட்டு விடுங்கள்!" என்றான்.

"அப்படியெல்லாம் உன்னைத் தனியாக விட்டு விட்டுப் போக மாட்டேன். மாமா காஞ்சியில் இருந்தால் தானும் இருப்பதாக மகேந்திரன் சொல்கிறான். மகேந்திரன் இருந்தால் தானும் இருப்பதாகக் குந்தவி சொல்கிறாள்" என்றார் மாமல்லர்.

உடனே மானவன்மன், குமார சக்கரவர்த்தியைத் தூக்கிக் கொண்டு, "நீ ஒரு குழந்தை! நானும் ஒரு குழந்தை, நாம் இரண்டு பேரும் காஞ்சியில் இருப்போம். மற்ற ஆண் பிள்ளைகள் எல்லாம் யுத்தத்துக்குப் போகட்டும்!" என்றான்.

அப்போது குந்தவி, "ஏன் மாமா! உங்கள் அப்பாவுக்கு நீங்கள் குழந்தைதானே?" என்று வெடுக்கென்று கேட்டாள்.

மானவன்மன் குமார மகேந்திரனைத் தரையில் விட்டு விட்டுக் குந்தவியின் முன்னால் வந்து கைகட்டி வாய் புதைத்து நின்று, "தேவி! தாங்கள் இருக்குமிடத்தில் யாரும் வாயைத் திறக்கக் கூடாதல்லவா? நான் பேசியது பிசகு! மன்னிக்க வேண்டும்!" என்று வேடிக்கையான பயபக்தியோடு சொல்லவும், ஆயனர் உள்பட அனைவரும் நகைத்தார்கள்.

அன்று சாயங்காலம் மாமல்லரும் மானவன்மனும் தனிமையில் சந்தித்த போது, "அண்ணா! உண்மையாகவே ஆயனரை வாதாபிக்கு அழைத்துப் போகப் போகிறீர்களா?" என்று கேட்டான்.

"ஆமாம், தம்பி! இரண்டு முக்கிய காரணங்களுக்காக அவரை அழைத்துப் போகிறேன். முதலாவது, நம் படை வீரர்கள் தூர தேசத்தில் இருக்கும் போது காலொடிந்த கிழவரைப் பார்த்தும் அவருடைய புதல்வியை நினைத்தும் மனஉறுதி கொள்வார்கள். அதோடு, யாருக்காக இத்தகைய பெருஞ்சேனை திரட்டிக் கொண்டு படையெடுத்துச் செல்கிறோமோ, அவளை ஒருவேளை உயிரோடு மீட்க முடிந்தால், உடனே யாரிடமாவது ஒப்புவித்தாக வேண்டுமல்லவா? அவளுடைய தந்தையிடமே ஒப்புவித்து விட்டால் நம் கவலையும் பொறுப்பும் விட்டது" என்றார் மாமல்லர்.

அப்போது அவர் விட்ட பெருமூச்சு மானவன்மனுடைய இருதயத்தில் பெரு வேதனையை உண்டாக்கியது.
Back to top Go down
AruN
Admin
Admin
AruN


Posts : 1961
Join date : 2012-01-26

கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 7 Empty
PostSubject: Re: கல்கியின் சிவகாமியின் சபதம்   கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 7 Icon_minitimeTue May 29, 2012 6:35 pm

கல்கியின் சிவகாமியின் சபதம்


நான்காம் பாகம் : சிதைந்த கனவு

3. ருத்ராச்சாரியார்



காஞ்சி நகரமானது முன்னம் மகேந்திரவர்ம சக்கரவர்த்தியின் காலத்தில் இருந்ததுபோல் கலைமகளும் திருமகளும் குதூகலமாகக் கொலுவீற்றிருக்கும் பெருநகரமாக இப்போது விளங்கியது. இருபுறமும் கம்பீரமான மாடமாளிகைகளையுடைய விசாலமான வீதிகளில் எப்போது பார்த்தாலும் 'ஜே ஜே' என்று ஜனக் கூட்டமாயிருந்தது. மாடு பூட்டிய வண்டிகளும், குதிரை பூட்டிய ரதங்களும் மனிதர் தூக்கிய சிவிகைகளும் ஒன்றையொன்று நெருங்கி வீதியையும் அடைத்தன. ஸ்திரீகளும் புருஷர்களும் விதவிதமான வர்ணப் பட்டாடைகளும் ஆபரணங்களும் அணிந்து அங்குமிங்கும் உலாவினார்கள்.

ஆலயங்களிலே பூஜாகாலத்து மணி ஓசையும் மங்கள வாத்தியங்களின் கோஷமும் இடைவிடாமற் கேட்டுக் கொண்டிருந்தன. சமஸ்கிருத கடிகைகளில் வேத மந்திரங்களின் கோஷமும் சைவத் தமிழ் மடங்களில் நாவுக்கரசரின் தெய்வீகமான தேவாரப் பாசுரங்களின் கானமும் எழுந்தன. சிற்ப மண்டபங்களில் கல்லுளியின் 'கல் கல்' ஒலியும், நடன மண்டபங்களில் பாதச் சதங்கையின் 'ஜல் ஜல்' ஒலியும் எழுந்து கலைப்பற்றுள்ளவர்களின் செவிகளுக்கு இன்பமளித்தன.

வீதிகளை நிறைத்திருந்த ஜனக்கூட்டத்தில் இடையிடையே கத்தி கேடயங்களைத் தரித்த போர் வீரர்கள் காணப்பட்டார்கள். அவர்கள் எதிர்ப்புறமாக வரும் வீரர்களைச் சந்திக்கும்போதெல்லாம் ஒருவருடைய கத்தியை ஒருவர் தாக்கி முகமன் கூறிக் கொண்டார்கள். இவ்வாறு வீரர்கள் சந்திக்கும் இடங்களிலெல்லாம் ஜனங்கள் கூடி, "மாமல்லர் வாழ்க!", "புலிகேசி வீழ்க!" "காஞ்சி உயர்க!", "வாதாபி அழிக!" என்ற கோஷங்களை எழுப்பினார்கள்.

கலகலப்பு நிறைந்த காஞ்சி நகரின் வீதிகளின் வழியாக மாமல்ல சக்கரவர்த்தியின் ரதம் சென்று, பிரசித்திபெற்ற ருத்ராச்சாரியாரைத் தலைமை ஆசிரியராகக் கொண்ட சம்ஸ்கிருத கடிகையின் வாசலை அடைந்து நின்றது.

உள்ளேயிருந்து ஆசிரியரும் மாணாக்கருமாகச் சிலர் வெளிவந்து "ஜய விஜயீபவ!" என்று கோஷித்துச் சக்கரவர்த்தியை வரவேற்றார்கள். மாமல்லரும், மானவன்மனும் கடிகைக்குள்ளே பிரவேசித்தார்கள்.

அந்த நாளில் பரதகண்டத்திலேயே மிகப் பிரபலமாக விளங்கிய அந்தச் சர்வ கலாசாலையின் கட்டடம் மிக விஸ்தாரமாயிருந்தது. அழகான வேலைப்பாடமைந்த தூண்கள் தாங்கிய மண்டபங்களிலே ஆங்காங்கு வெவ்வேறு வகை வகுப்புக்கள் நடந்து கொண்டிருந்தன. ரிக் வேதம், யஜுர்வேதம், சாமவேதம் ஆகியவற்றை வெவ்வேறு மண்டபங்களில் தனித்தனியாக வித்தியார்த்திகள் அத்தியயனம் செய்து கொண்டிருந்தார்கள்.

வேதங்களிலும் வேதாகமங்களிலும் பூரணப் பயிற்சியுள்ள ஆசிரியர்கள் அந்தக் காலத்தில் காஞ்சி கடிகையிலேதான் உண்டு என்பது தேசமெங்கும் பிரசித்தமாயிருந்தது. இன்னும் வெவ்வேறு மண்டபங்களில் சாஸ்திர ஆராய்ச்சியும், காவிய படனமும் நடந்து கொண்டிருந்தன.

ஒரு மண்டபத்தில் வியாகரண சாஸ்திரம் படித்துக் கொண்டிருந்தார்கள். மற்றொரு மண்டபத்தில் வால்மீகி இராமாயணம் படிக்கப்பட்டது. இன்னொரு மண்டபத்தில் பகவத் கீதை பாராயணம் நடந்தது. வேறொரு மண்டபத்தில் காளிதாசனுடைய சாகுந்தல நாடகத்தை மாணவர்கள் நாடகமாக நடித்துக் கொண்டிருந்தார்கள்.

இதெல்லாவற்றையும் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் மாமல்லரும் மானவன்மனும் மேலே சென்றார்கள். கடைசியாக அவர்கள் வந்து சேர்ந்த மண்டபம், சிறிதும் சந்தடியில்லாத நிசப்தமான ஒரு மூலையில் இருந்தது. அந்த மண்டபத்தின் மத்தியில் போட்டிருந்த கட்டிலில், கிருஷ்ணாஜினத்தின் மீது ஒரு தொண்டுக் கிழவர் சாய்ந்து படுத்திருந்தார். தும்பை மலர்போல நரைத்திருந்த அவருடைய தாடி நீண்டு வளர்ந்து தொப்புள் வரையில் வந்திருந்தது. அவருடைய சடா மகுடம் வெள்ளை வெளேரென்று இலங்கியது. இந்தக் கிழவர் தான் அந்தப் புகழ்பெற்ற சம்ஸ்கிருத கடிகையின் தலைவர் ருத்ராச்சாரியார். அவர் படுத்திருந்த கட்டிலுக்கருகில் ஆசிரியர்கள் நாலு பேர் தரையிலே உட்கார்ந்து தைத்திரீய உபநிஷதம் பாடம் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

மாமல்லரின் வருகையைப் பார்த்ததும் அவர்கள் பாடத்தை நிறுத்திவிட்டு எழுந்து சக்கரவர்த்திக்கு வணக்கம் செலுத்திவிட்டு அப்பால் சென்றார்கள்.

"பல்லவேந்திரா! தங்களை எழுந்து வரவேற்பதற்கும் அசக்தனாகப் போய் விட்டேன் மன்னிக்க வேண்டும். விஜயதசமி அன்று புறப்படுகிறீர்கள் அல்லவா?" என்று ஆச்சாரியார் கேட்டார்.

"புறப்படுவதற்கு எல்லா ஆயத்தமும் ஆகிவிட்டது. ஆனால், பாண்டிய குமாரன் இன்னும் வந்து சேரவில்லை. வராக நதிக் கரையிலேயே தங்கியிருக்கிறான். ஏதோ தேக அசௌக்கியம் நேர்ந்து விட்டதாம்!"

"பிரபு! பாண்டியன் வந்தாலும், வராவிட்டாலும் நீங்கள் விஜயதசமியன்று கிளம்பத் தவற வேண்டாம். இந்த விஜயதசமி போன்ற கிரக நட்சத்திரச் சேர்க்கை ஆயிரம் வருஷத்துக்கு ஒரு தடவைதான் ஏற்படும். இராமபிரான் இலங்காபுரிக்குப் படையெடுத்துப் புறப்பட்டது இம்மாதிரி நாளிலேதான்."

"அப்படியானால் இராமபிரானைப் போலவே நானும் வெற்றியுடன் திரும்புவேன் அல்லவா?" என்று மாமல்லர் கேட்டார்.

"அவசியம் விஜய கோலாகலத்துடன் திரும்புவீர்கள். ஆனால், அதைப் பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிட்டாது."

"குருதேவா! அப்படிச் சொல்லக் கூடாது!" என்று மாமல்லர் பரிவுடனே கூறினார்.

"அதனால் என்ன? நான் இவ்வுலகை விட்டு மேல் உலகம் போன போதிலும் இந்தக் காஞ்சியையும் கடிகையையும் என்னால் மறந்திருக்க முடியாது. மாமல்லரே! தாங்கள் வாதாபியிலிருந்து திரும்பிவரும் நாளில் நான் தங்கள் தந்தை மகேந்திர சக்கரவர்த்தியையும் அழைத்துக் கொண்டு இந்தக் கடிகைக்கு மேலே வந்து நிற்பேன். நாங்கள் இருவரும் தேவலோகத்துப் பாரிஜாத மலர்களைத் தூவித் தங்களை வரவேற்போம்" என்று ருத்ராச்சாரியார் கூறியபோது மாமல்லரின் கண்கள் கலங்கிக் கண்ணீர் கசிந்தது.

Back to top Go down
AruN
Admin
Admin
AruN


Posts : 1961
Join date : 2012-01-26

கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 7 Empty
PostSubject: Re: கல்கியின் சிவகாமியின் சபதம்   கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 7 Icon_minitimeTue May 29, 2012 6:37 pm

கல்கியின் சிவகாமியின் சபதம்


நான்காம் பாகம் : சிதைந்த கனவு

4. நாவுக்கரசர்


ஏகாம்பரேசுவரர் கோயில் சந்நிதியில் இருந்த சைவத் திருமடத்திலும் அன்று மிக்க கலகலப்பாக இருந்தது. திருநாவுக்கரசர் பெருமான் சில நாளாக அந்த மடத்தில் எழுந்தருளியிருந்தார். அப்பெரியாரின் இசைப்பாடல்களை மாணாக்கர்கள் பாடிக் கொண்டிருந்தார்கள். கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக நாவுக்கரசர் அப்பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தார். அவருக்கு அருகில் அமர்ந்திருந்த ஆயனச் சிற்பியின் கண்களும் கசிவுற்றிருந்தன.

ஏகாம்பரேசுவரர் கோயிலில் உச்சிக் கால பூஜைக்குரிய மணி அடித்தது. பேரிகை முழக்கமும் கேட்டது. மாணாக்கர்கள் பதிகம் பாடுவதை நிறுத்தி உணவு கொள்வதற்காகச் சென்றார்கள்.

நாவுக்கரசரும் ஆயனரும் மட்டும் தனித்திருந்தார்கள். "சிற்பியாரே! பத்து வருஷத்துக்கு முன்னால் இதே இடத்தில் உம்முடைய புதல்வி அபிநயம் பிடித்தாள். அந்தக் காட்சி என் கண் முன்னால் இன்னமும் அப்படியே நிற்கிறது. 'முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்' என்று மாணாக்கர்கள் சற்றுமுன் பாடியபோது உம் புதல்வியை எண்ணிக் கொண்டேன். என்னை அறியாமல் உடனே கண்ணீர் பெருகிவிட்டது" என்றார்.

"அடிகளே! எனக்கும் அந்த நினைவு வந்தது. அன்றைக்கு நாங்கள் புறப்படும் போது என்னைப் பின்னால் நிறுத்தித் தாங்கள் எச்சரித்தபடியே நடந்துவிட்டது."

"ஆம், ஆயனரே! எனக்கும் அது ஞாபகம் வருகிறது. 'இப்பேர்ப்பட்ட தெய்வீக கலைத்திறமை பொருந்திய பெண்ணுக்கு உலக வாழ்க்கையில் கஷ்டம் ஒன்றும் வராமல் இருக்க வேண்டுமே!' என்ற கவலை ஏற்பட்டது, அதைத்தான் உம்மிடம் சொன்னேன்."

"சுவாமி, தங்களுடைய திரு உள்ளத்தில் உதயமான எண்ணம் எவ்வளவு உண்மையாய்ப் போய்விட்டது! சிவகாமிக்கு வந்த கஷ்டம் சொற்பமானதா? கனவிலும் எண்ணாத பேரிடியாக அல்லவா என் தலையில் விழுந்து விட்டது? பச்சைக் குழந்தையாகத் தொட்டிலில் கிடந்தபோதே அவளை என்னிடம் ஒப்புவித்துவிட்டு அவள் தாயார் கண்ணை மூடிவிட்டாள். அது முதல் பதினெட்டு வயது வரையில் என் கண்ணின் மணியைப் போல் அவளைப் பாதுகாத்தேன். ஒரு நாளாவது நாங்கள் ஒருவரையொருவர் பிரிந்து இருந்ததில்லை. அப்படி வளர்த்த குழந்தையைப் பிரிந்து இன்றைக்கு ஒன்பது வருஷமாயிற்று. இன்னமும் உயிரை வைத்துக் கொண்டிருக்கிறேன். அடிகளே! ஒரு பாவமும் அறியாத எங்களைக் கருணைக் கடலான பெருமான் ஏன் இத்தகைய சோதனைக்கு ஆளாக்கினார்? நாங்கள் இறைவனுக்கு என்ன அபசாரம் இழைத்தோம்?" என்று ஆயனர் கேட்ட போது, அவருடைய கண்களிலிருந்து கலகலவென்று கண்ணீர் பொழிந்தது.

"ஆயனரே! வருந்த வேண்டாம். இறைவனுடைய திருவுள்ளத்தின் இரகசியங்களை மானிடர் அறிவது கடினம். அடியேனும் என் மனமறிந்து இந்தப் பூவுலகில் யாருக்கும் எந்தத் தீமையும் செய்ததில்லை. ஆயினும் இந்தச் சட உடலும் எத்தனையோ துன்பங்களை அனுபவித்தது. சிற்பியாரே! அடியேன் கண்ட உண்மையை உமக்குச் சொல்கிறேன். நாம் துன்பம் என்று நினைப்பது உண்மையில் துன்பம் அல்ல! இன்பம் என்று கருதுவது உண்மையில் இன்பம் அல்ல. இன்ப துன்ப உணர்ச்சியானது உலக பாசத்தினால் ஏற்படுகிறது. இந்தப் பாசத்தைத்தான் பெரியோர் மாயை என்கிறார்கள். மாயை நம்மைவிட்டு அகலும் போது இன்பமும் இல்லை, துன்பமும் இல்லை என்பதை அறிவோம். அந்த இறைவனுடைய திருவருளாகிய பேரின்பம் ஒன்றுதான் மிஞ்சி நிற்கக் காண்போம்."

"சுவாமி! தங்களுடைய அமுத மொழிகளில் அடங்கிய உண்மையை நான் உணர்கிறேன். ஆயினும், என்னைவிட்டுப் பாசம் அகலவில்லையே? என்ன செய்வேன்?"

"பாசம் அகலுவதற்கு வழி இறைவனை இறைஞ்சி மன்றாடுவதுதான்!" என்றார் நாவுக்கரசர்.

"நான் மன்றாடவில்லையா? மன்றாடியை எண்ணி, இடைவிடாமல் மன்றாடிக் கொண்டுதானிருக்கிறேன். ஆயினும் என் மகள் மேல் உள்ள பாசம் விடவில்லையே! ஈசனைப் பிரார்த்திக்க நினைக்கும் போதெல்லாம் தூர தேசத்திலே, பகைவர்களின் கோட்டையிலே சிறையிருக்கும் என் மகளின் நினைவுதானே வருகிறது? 'இறைவா! என் மகளைக் காப்பாற்று, என் வாழ்நாள் முடிவதற்குள்ளாகச் சிவகாமியை இந்தக் கண்கள் பார்க்கும்படி கருணை செய்!' என்றுதானே வரங்கேட்கத் தோன்றுகிறது! என்ன செய்வேன்!" என்று ஆயனர் கூறி விம்மினார்.

"வேண்டாம், ஆயனரே! வருந்த வேண்டாம்!" என்று அவருக்கு ஆறுதல் கூறினார், உழவாரப்படை தரித்த உத்தமர். மேலும், "உமது மனோரதந்தான் நிறை வேறப் போகிறதே. மாமல்ல சக்கரவர்த்தி வாதாபி படையெடுப்புக்குப் பெரும் படை திரட்டியிருக்கிறாரே? இறைவன் அருளால் உம் மகள் திரும்பி வந்து சேருவாள், கவலைப்பட வேண்டாம். அதுவரையில் நீர் என்னுடன் இந்த மடத்திலேயே தங்கியிருக்கலாமே? அரண்ய வீட்டில் தனியாக ஏன் இருக்கவேண்டும்?" என்றார்.

"அடிகளே! மன்னிக்க வேண்டும், பல்லவ சைனியத்தோடு நானும் வாதாபிக்குச் செல்கிறேன்..." என்று ஆயனர் கூறியது வாகீசருக்குப் பெரும் வியப்பை அளித்தது.

"இதென்ன, ஆயனரே? போர்க்களத்தின் பயங்கரங்களைப் பார்க்க ஆசை கொண்டிருக்கிறீர்களா? மனிதர்களின் இரத்தம் ஆறுபோல் ஓடுவதைப் பார்க்க விரும்புகிறீரா? வெட்டப்பட்டும் குத்தப்பட்டும் கால் வேறு, கை வேறு, தலை வேறாகக் கிடக்கும் சடலங்களைப் பார்க்கப் பிரியப்படுகிறீரா?" என்று பெருந்தகையார் வினவினார்.

ஆயனர் சிறிது வெட்கமடைந்தவராய், "இல்லை அடிகளே! அதற்காகவெல்லாம் நான் போகவில்லை. என் மகளைப் பார்த்து அழைத்து வரலாமே என்ற ஆசையினாலே தான் போகிறேன்" என்றார்.

இந்தச் சமயத்தில் மடத்தின் வாசற்புறத்திலிருந்து சில ஸ்திரீ புருஷர்கள் வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் நமக்கு ஏற்கெனவே தெரிந்தவர்கள்தான். சேனாதிபதி பரஞ்சோதி, அவருடைய மனைவி உமையாள், நமசிவாய வைத்தியர், அவருடைய சகோதரி ஆகியவர்கள் உள்ளே வந்து நாவுக்கரசருக்கு நமஸ்கரித்தார்கள்.

எல்லாரும் உட்கார்ந்த பிறகு, நமசிவாய வைத்தியர், "சுவாமி விடைபெற்றுப் போக வந்தேன்" என்றார்.

"ஆகா! ஊருக்குத் திரும்பிப் போகிறீர்களா? எனக்குக் கூடத் திருவெண்காட்டு இறைவனைத் தரிசிக்க வேண்டுமென்றிருக்கிறது. மறுபடியும் சோழ நாட்டுக்கு யாத்திரை வரும்போது தங்கள் ஊருக்கு வருவேன்" என்றார் வாகீசர்.

"இல்லை, அடிகளே! நான் திருவெண்காட்டுக்குப் போகவில்லை, வடக்கே வாதாபி நகருக்குப் போகிறேன்."

"இது என்ன! காஞ்சி நகரிலே ஒருவருமே மிஞ்சமாட்டார்கள் போலிருக்கிறதே? ஆயனர்தாம் அவருடைய மகளை அழைத்து வருவதற்காகப் போகிறார். நீர் எதற்காகப் போகிறீர் வைத்தியரே?"

"வைத்தியம் செய்வதற்குத்தான் போகிறேன், சுவாமி! சைனியத்தோடு ஒரு பெரிய வைத்தியர் படையும் போகிறது. அதன் தலைவனாக நானும் போகிறேன். சளுக்கர்கள் தர்ம யுத்தம் அதர்மயுத்தம் என்ற வித்தியாசம் இன்றி யுத்தம் செய்கிறவர்கள். முனையில் விஷம் ஏற்றிய வாள்களையும் வேல்களையும் உபயோகிப்பவர்கள். நம் மகேந்திர சக்கரவர்த்தி மீது விஷக்கத்தி பாய்ந்த செய்தி தங்களுக்குத் தெரியுமே? சக்கரவர்த்திக்குச் சிகிச்சை செய்தபோது அந்த விஷத்துக்கு மாற்றுக் கண்டுபிடித்தேன். அதன் பயனாக, யுத்தத்துக்கு நானும் வரவேண்டுமென்று பல்லவ சேனாதிபதியின் கட்டளை பிறந்தது!" என்று கூறிய நமசிவாய வைத்தியர், சேனாதிபதி பரஞ்சோதியைப் பெருமையுடன் பார்த்தார்.

"ஆ! இந்தப் பிள்ளைதான் தேசமெல்லாம் பிரசித்தி பெற்ற பல்லவ சேனாதிபதியா?" என்று கூறித் திருநாவுக்கரசர் பரஞ்சோதியை உற்றுப் பார்த்தார்.

"இவனுடைய முகத்தில் சாத்விகக் களை விளங்குகிறதே? மகோந்நதமான சிவபக்திப் பெருஞ் செல்வத்துக்கு உரியவனாகக் காணப்படுகிறானே? இவன் ஏன் இந்த கொலைத் தொழிலில் பிரவேசித்தான்?" என்று வினவினார்.

இதைக் கேட்டதும் நமசிவாய வைத்தியரும் அவருடைய சகோதரியும் ஒருவரையொருவர் பார்த்துப் புன்னகை புரிந்தார்கள். உமையாளும் தன் கணவனுடைய முகத்தைச் சிறிது நாணத்துடன் பார்த்துக் குறுநகை புரிந்தாள். பரஞ்சோதியின் முகத்திலும் புன்னகை தோன்றவில்லையென்று நாம் சொல்ல முடியாது.

"சுவாமி! தங்களுடைய திருமடத்தில் சேர்ந்து தமிழ்க்கல்வி கற்பதற்காகத்தான் இவனைப் பன்னிரண்டு வருஷத்துக்கு முன்னால் காஞ்சிக்கு அனுப்பினோம். விதியானது இவனை இந்த நிலைக்குக் கொண்டு சேர்த்தது. இவனோடு என்னையும் சேர்த்துக் கட்டிப் போர்க்களத்திற்கு இழுக்கிறது" என்றார்.

நாவுக்கரசர் பரஞ்சோதியை இன்னொரு முறை உற்றுப் பார்த்துவிட்டு "இவனையா விதி இழுத்துச் செல்கிறது என்கிறீர்கள்! விதியையே மாற்றி அமைக்கக் கூடிய உறுதி படைத்தவன் என்று இவன் முகக் களை சொல்கிறதே?" என்றார்.

தளபதி பரஞ்சோதி அந்தக்கணமே எழுந்து திருநாவுக்கரசரின் அடிபணிந்து, "குருதேவரே! தங்களுடைய திருவாக்கை ஆசிமொழியாகக் கொள்கிறேன்!" என்று சொன்னார்.

பரஞ்சோதியின் தாயார் அப்போது எழுந்து நின்று வணக்கத்துடன், "சுவாமி! முன்னொரு சமயம் தாங்கள் திருவெண்காட்டுக்கு வந்திருந்தபோது இவள் தங்களை நமஸ்கரித்தாள். 'சீக்கிரம் விவாகம் ஆகவேண்டும்' என்று கூறினீர்கள். அதன்படியே விவாகம் நடந்தது" என்று சொல்லி நிறுத்தினாள்.

"என் வாக்குப் பலித்தது பற்றி மிகவும் சந்தோஷம், அம்மா!" என்றார் வாகீசப் பெருமான்.

"தங்களுடைய திருவாக்கிலே எது வந்தாலும் அது பலிக்கும். கருணை கூர்ந்து இவளுக்குப் புத்திர பாக்கியம் உண்டாகும்படி ஆசீர்வதிக்க வேண்டும்" என்று அந்த மூதாட்டி கூறினாள்.

திருநாவுக்கரசர் மலர்ந்த முகத்துடன் பரஞ்சோதியையும் உமையாளையும் பார்த்தார். "கதைகளிலும் காவியங்களிலும் பிரசித்தி பெறப்போகும் உத்தமமான புதல்வன் இவர்களுக்கு உதிப்பான்!" என்று அருள் புரிந்தார்.
Back to top Go down
AruN
Admin
Admin
AruN


Posts : 1961
Join date : 2012-01-26

கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 7 Empty
PostSubject: Re: கல்கியின் சிவகாமியின் சபதம்   கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 7 Icon_minitimeTue May 29, 2012 6:39 pm

கல்கியின் சிவகாமியின் சபதம்


நான்காம் பாகம் : சிதைந்த கனவு

5. மாமல்லரின் பயம்


காஞ்சி அரண்மனையின் மேல் உப்பரிகையில் பளிங்குக் கல் மேடையில், விண்மீன் வைரங்கள் பதித்த வான விதானத்தின் கீழ், மாமல்லரும் மானவன்மனும் அமர்ந்திருந்தார்கள்.

இலட்சக்கணக்கான ஜனங்கள் வாழ்ந்த காஞ்சி மாநகரத்தில், அப்போது அசாதாரண நிசப்தம் குடிகொண்டிருந்தது.

மாமல்லர், அந்த நள்ளிரவில், காஞ்சி நகரின் காட்சியை ஒரு தடவை சுற்றி வளைத்துப் பார்த்து விட்டு, ஒரு பெருமூச்சு விட்டார்.

"இந்தப் பெருநகரம் இன்றைக்கு அமைதியாகத் தூங்குகிறது. நாளைக்கு இந்நேரம் ஏக அமர்க்களமாயிருக்கும். நகர மாந்தர் நகரை அலங்கரிக்கத் தொடங்குவார்கள். படை வீரர்கள் புறப்பட ஆயத்தமாவார்கள். ஆகா! நாளை இரவு இந்த நகரில் யாரும் தூங்கவே மாட்டார்கள்!" என்றார் மாமல்லர்.

"பல்லவேந்திரா! அப்படியானால் குறித்த வேளையில் புறப்படுவதென்று முடிவாகத் தீர்மானித்து விட்டீர்களா? பாண்டியன் வந்து சேராவிட்டால் கூட?" என்று மானவன்மன் கேட்டான்.

"விஜயதசமியன்று காலையில் ஒருவேளை சூரியன் தன் பிரயாணத்தைத் தொடங்காமல் நின்றாலும் நான் நிற்கமாட்டேன். ருத்ராச்சாரியார் சொன்னதைக் கேட்கவில்லையா, இளவரசே!"

மானவன்மன் இலங்கை அரசனாக இன்னும் முடிசூட்டப்படவில்லையாதலால் 'இளவரசன்' என்றே அழைக்கப்பட்டு வந்தான்.

"ஆம்; ருத்ராச்சாரியார் கூறியதைக் கேட்டேன். பல்லவேந்திரா! அப்புறம் ஒரு முறை நான் தனியாகவும் ருத்ராச்சாரியாரிடம் சென்று ஜோசியம் கேட்டு விட்டு வந்தேன்."

"ஓஹோ! அப்படியா! ஆச்சாரியார் என்ன சொன்னார்?"

"எல்லாம் நல்ல சமாசாரமாகத்தான் சொன்னார்."

"அப்படியென்றால்?"

"இலங்கைச் சிம்மாசனம் எனக்கு நிச்சயம் கிடைக்குமென்றார். அதற்கு முன்னால் பல இடையூறுகள் நேரும் என்றும் பல போர் முனைகளில் நான் சண்டை செய்வேன் என்றும் சொன்னார்."

மாமல்லர் புன்னகை புரிந்து, "இவ்வளவுதானா? இன்னும் உண்டா?" என்று கேட்டார்.

"தாங்கள் வாதாபியைக் கைப்பற்றி, வெற்றி வீரராகத் திரும்பி வருவீர்களென்றும், இந்தக் காரியத்தில் இரண்டு இராஜ குமாரர்கள் தங்களுக்கு உதவி புரிவார்கள் என்றும் கூறினார்."

மாமல்லர் சிரித்துக் கொண்டே, "அந்த இரண்டு இராஜகுமாரர்கள் யார்?" என்று கேட்டார்.

"இதே கேள்வியை நானும் ருத்ராச்சாரியாரைக் கேட்டேன். ஜோசியத்தில் அவ்வளவு விவரமாகச் சொல்ல முடியாது என்று கூறி விட்டார்" என்றான் மானவன்மன்.

"என் அருமைத் தோழரே! அந்த விவரத்தை நான் சொல்கிறேன். எனக்கு வாதாபிப் போரில் உதவி செய்யப் போகிற அரச குலத்தினரில் நீர் ஒருவர். நீர் இந்தக் காஞ்சி நகரில் இருந்தபடியே எனக்கு உதவி செய்யப் போகிறீர்!...." என்று மாமல்லர் சொல்வதற்குள், இலங்கை இளவரசன் குறுக்கிட்டு, "பல்லவேந்திரா! என்னுடைய விண்ணப்பத்தை கேட்டருளுங்கள். குமார பாண்டியன் வந்து சேருவது தான் சந்தேகமாயிருக்கிறதே, அவனுடைய ஸ்தானத்தில் என்னை அழைத்துப் போகலாகாதா? தாங்கள் போர்க்களம் சென்ற பிறகு, காஞ்சி அரண்மனையில் என்னைச் சுகமாக உண்டு, உடுத்தி, உறங்கச் சொல்கிறீர்களா? இது என்ன நியாயம்!" என்று கேட்டான்.

"என் அருமைத் தோழரே! நான் உம்மைப் போருக்கு அழைத்துப் போக மறுப்பதற்கு எல்லாவற்றிலும் முக்கியமான காரணம் ஒன்று இருக்கிறது. அதை இது வரையில் சொல்லவில்லை. நீர் பிடிவாதம் பிடிப்பதால் சொல்கிறேன். ஒருவேளை போர்க்களத்தில் உமது உயிருக்கு அபாயம் நேர்கிறதென்று வைத்துக் கொள்ளுங்கள். பின்னர், இலங்கை இராஜ்ய வம்சத்தின் கதி என்ன ஆவது? உமது இராஜ்யத்தை அநீதியாகவும் அக்கிரமமாகவும் அபகரித்துக் கொண்டிருக்கிறவனுக்கே அல்லவா இராஜ்யம் நிலைத்துப் போய் விடும்! மானவன்மரே! இராஜ குலத்தில் பிறந்தவர்கள் தங்களுடைய வம்சம் தடைப்பட்டுப் போகாமல் பார்த்துக் கொள்வதில் முதன்மையான சிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். பல்லவ வம்சத்தை விளங்க வைப்பதற்கு, எனக்கு ஒரு புதல்வன் இருக்கிறான். உமக்கு இல்லை. ஆகையினால் தான் முக்கியமாக உம்மை வரக் கூடாதென்கிறேன்" என்றார் மாமல்லர்.

இதைக் கேட்ட மானவன்மன் பொருள் பொதிந்த புன்னகை புரிந்த வண்ணம், "பல்லவேந்திரா! இதைப் பற்றி என் மனைவி ஸுஜாதையிடம் இப்போதே சொல்லி, அவளோடு சண்டைப் பிடிக்கப் போகிறேன். இலங்கை இராஜ வம்சத்துக்கு அவள் இன்னும் ஒரு புதல்வனைத் தராத காரணத்தினால்தானே என் வாழ்நாளில் ஓர் அரிய சந்தர்ப்பம் கை நழுவிப் போகிறது? உலக சரித்திரத்தில் என்றென்றைக்கும் பிரசித்தி பெறப் போகிற வாதாபி யுத்தத்தில் நான் சேர்ந்து கொள்ள முடியாமலிருக்கிறது?" என்று சொல்லிக் கொண்டே எழுந்தான்.

"நண்பரே! உட்காரும், உமது துணைவியோடு சண்டை பிடிப்பதற்கு இப்போது அவசரம் ஒன்றும் இல்லை. நான் வாதாபிக்குப் புறப்பட்டுப் போன பிறகு, சாவகாசமாகத் தினந்தோறும் சண்டை போட்டுக் கொண்டிருக்கலாம்" என்றார் சக்கரவர்த்தி.

மேடையிலிருந்து எழுந்த மானவன்மன் மீண்டும் உட்கார்ந்து, "பிரபு! நள்ளிரவு தாண்டி விட்டதே? நாளை இரவுதான் யாரும் தூங்குவதற்கில்லை. இன்றைக்காவது தாங்கள் சிறிது தூங்க வேண்டாமா?" என்று கேட்டான்.

"என்னைத் தூங்கவா சொல்கிறீர்! எனக்கு ஏது தூக்கம்? நான் தூங்கி வருஷம் பன்னிரண்டு ஆகிறது!" என்றார் மாமல்லர்.

"லக்ஷ்மணர் காட்டுக்குப் போனபோது, அவருடைய பத்தினி ஊர்மிளை, அவருடைய தூக்கத்தையும் வாங்கிக் கொண்டு, இரவும் பகலும் பதினாலு வருஷம் தூங்கினாளாம். அம்மாதிரி தங்களுடைய தூக்கத்தையும் யாராவது வாங்கிக் கொண்டு தூங்குகிறார்களா, என்ன?" என்று மானவன்மன் கேட்டான்.

"இளவரசே! என்னுடைய தூக்கத்தையும் ஒரு பெண்தான் கொண்டு போனாள். என்னைக் கேட்டு அவள் வாங்கிக் கொள்ளவில்லை. அவளே அபகரித்துக் கொண்டு போய் விட்டாள். ஆகா! அந்தச் சிற்பி மகள் இங்கே சமீபத்தில் அரண்ய வீட்டில் இருந்தபோதும் எனக்குத் தூக்கம் இல்லாதபடி செய்தாள். இப்போது நூறு காத தூரத்துக்கப்பால் பகைவர்களின் நகரத்தில் இருக்கும் போதும் எனக்குத் தூக்கம் பிடிக்காமல் செய்கிறாள்..." என்று மானவன்மனைப் பார்த்துச் சொல்லி வந்த மாமல்லர், திடீரென்று வானவெளியைப் பார்த்துப் பேசலானார்: "சிவகாமி! ஏன் என்னை இப்படி வருத்துகிறாய்? உனக்கு நான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காகப் பகலெல்லாம் பாடுபடுகிறேனே. இரவிலே சற்று நேரம் என்னை நிம்மதியாகத் தூங்க விடக் கூடாதா? வாதாபியில் தனி வீட்டிலே இரவெல்லாம் நந்தா விளக்கே துணையாக உட்கார்ந்து என்னைச் சபித்துக் கொண்டிருக்கிறாயா? தாங்காத களைப்பினால் தப்பித் தவறி நான் சற்றுத் தூங்கினால், கனவிலும் வந்து என்னை வதைக்கிறாயே? உன்னை நான் மறக்கவில்லை, சிவகாமி! உனக்கு நான் கொடுத்த வாக்குறுதியையும் மறந்துவிடவில்லை. இத்தனை நாள் பொறுத்துக் கொண்டிருந்தவள் இன்னும் கொஞ்ச நாள் பொறுத்திரு!"

மாமல்லர் வெறிகொண்டவர் போல் வானவெளியைப் பார்த்துப் பேசியது, இலங்கை இளவரசனுக்குப் பயத்தை உண்டாக்கிற்று.

"பல்லவேந்திரா! இது என்ன? சற்று அமைதியாயிருங்கள்" என்றான் மானவன்மன்.

"நண்பரே! என்னை அமைதியாயிருக்கவா சொல்கிறீர்! இந்த வாழ்நாளில் இனி எனக்கு எப்போதாவது மன அமைதி கிட்டுமா என்பதே சந்தேகந்தான். மானவன்மரே! பத்து வருஷத்துக்கு முன்பு நான் ஒரு தவறு செய்தேன். ஓர் அபலைப் பெண்ணின் ஆத்திரமான பேச்சைக் கேட்டு, அந்தக் கணத்தில் மதியிழந்து விட்டேன். நானும் சேனாதிபதியும் வாதாபியில் சிவகாமியைச் சந்தித்து அழைத்த போது, அவள் சபதம் செய்திருப்பதாகவும், ஆகையால் எங்களுடன் வர மாட்டேனென்றும் சொன்னாள். அப்போது சேனாதிபதி அவளுடைய பேச்சைக் கேட்கக் கூடாதென்றும் பலவந்தமாகக் கட்டித் தூக்கி வந்துவிட வேண்டும் என்றும் கூறினார். அதைக் கேளாமல் போய் விட்டேன். அந்தத் தவறை நினைத்து நினைத்துப் பத்து வருஷமாக வருந்திக் கொண்டிருக்கிறேன்."

இவ்விதம் கூறி விட்டுச் சற்று மாமல்லர் மௌனமாகச் சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். பிறகு கூறினார்: "மானவன்மரே! வாதாபிக்குப் படையெடுத்துச் செல்லும் நாளை நான் எவ்வளவோ ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன். அந்த நாளைத் துரிதப்படுத்துவதற்காக எவ்வளவோ தீவிரமான முயற்சிகள் எல்லாம் செய்தேன். ஆனால் கடைசியாகப் புறப்படும் நாள் நெருங்கியிருக்கும் போது பயமாயிருக்கிறது....!"

"என்ன? தங்களுக்கா பயம்?" என்று மானவன்மன் அவநம்பிக்கையும் அதிசயமும் கலந்த குரலில் கூறினான்.

"ஆம்! எனக்கு பயமாய்த்தானிருக்கிறது. ஆனால், போரையும் போர்க்களத்தையும் நினைத்து நான் பயப்படவில்லை. புலிகேசியைக் கொன்று, வாதாபியைப் பிடித்த பிறகு நடக்கப் போவதை எண்ணித் தான் பயப்படுகிறேன். பகைவரின் சிறையில் பத்து வருஷமாகச் சிவகாமி எனக்காகக் காத்திருக்கிறாள். அந்த நாளில் அவளுடைய குழந்தை உள்ளத்தில் தோன்றிய காதலையும் அன்று போல் இன்றும் தூய்மையாகப் பாதுகாத்து வந்திருக்கிறாள். ஆனால், என்னுடைய நிலைமை என்ன? கலியாணம் செய்து கொண்டு, இரண்டு குழந்தைகளுக்குத் தகப்பனாக இருக்கிறேன். சிவகாமியை எந்த முகத்தோடு நான் பார்ப்பது? அவளிடம் என்ன சொல்லுவது? இதை நினைக்கும் போதுதான் எனக்குப் பயமாகயிருக்கிறது. அதைக் காட்டிலும் போர்க்களத்தில் செத்துப் போனாலும் பாதகமில்லை!"

"பல்லவேந்திரா! தாங்கள் போர்க்களத்தில் உயிரை விட்டால், தங்களை நம்பி இங்கு வந்து உட்கார்ந்திருக்கும் என்னுடைய கதி என்ன? இலங்கைச் சிம்மாசனத்தில் என்னை அமர்த்துவதாகத் தாங்கள் எனக்கு அளித்த வாக்குறுதிதான் என்ன ஆவது?..." என்று நாத்தழுதழுக்கக் கேட்டான் மானவன்மன்.

Back to top Go down
AruN
Admin
Admin
AruN


Posts : 1961
Join date : 2012-01-26

கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 7 Empty
PostSubject: Re: கல்கியின் சிவகாமியின் சபதம்   கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 7 Icon_minitimeTue May 29, 2012 6:42 pm

கல்கியின் சிவகாமியின் சபதம்


நான்காம் பாகம் : சிதைந்த கனவு

6. ஏகாம்பரர் சந்நிதி



பரதகண்டம் எங்கும் புகழ் பரவியிருந்த காஞ்சி ஏகாம்பரேசுவரர் கோவிலில் உச்சிக்கால பூஜை நடந்து கொண்டிருந்தது. அதற்கு அறிகுறியான ஆலாசிய மணியின் ஓங்கார நாதமும் பேரிகை முழக்கமும் கேட்டுக் கொண்டிருந்தன.

கோயிலுக்கு வெளியே கோபுர வாசலிலும் சந்நிதி வீதியிலும் கணக்கற்ற ஜனங்கள் நெருங்கி மொய்த்துக் கொண்டிருந்தார்கள். பல்லவ சக்கரவர்த்தி பரிவார சகிதமாக ஆலயத்துக்கு வந்திருந்ததுதான் அவ்விதம் ஜனக்கூட்டம் திரண்டிருந்ததற்குக் காரணமாகும்.

ஆலயத்துக்குள்ளே ஏகாம்பரநாதரின் சந்நிதி என்றுமில்லாத சோபையுடன் அன்று விளங்கிற்று. வெள்ளிக் குத்துவிளக்குகளில் ஏற்றியிருந்த பல தீபங்களின் ஒளியில், சந்நிதியில் நின்ற இராஜ வம்சத்தினாரின் மணிமகுடங்களும் ஆபரணங்களும் ஜாஜ்வல்யமாய்ச் சுடர் விட்டு பிரகாசித்தன. சந்நிதியில் ஒரு பக்கத்தில் இராஜ குலத்து ஆடவர்களும், மற்றொரு பக்கத்தில் அந்தப்புரத்து மாதர்களும் நின்றார்கள். அவர்கள் யார் யார் என்பதைச் சற்றுக் கவனிப்போம்.

எல்லாருக்கும் முதன்மையாகப் பல்லவ சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி மாமல்ல நரசிம்மர், அறுநூறு வருஷமாக அவருடைய மூதாதையர் அணிந்த கிரீடத்தைத் தம் சிரசில் அணிந்து, கம்பீரமாக நின்றார். கரங்களைக் கூப்பி இறைவனை இறைஞ்சி வழிபட்டுக் கொண்டிருந்த நிலையிலும் அவருடைய தோற்றத்திலே பரம்பரையான இராஜகுலத்தின் பெருமிதம் காணப்பட்டது.

அவருக்கு இருபுறத்திலும் இலங்கை இளவரசர் மானவன்மரும் சேனாதிபதி பரஞ்சோதியும் நின்றார்கள். பரஞ்சோதிக்கு அடுத்தாற்போல், பல்லவ வம்சத்தின் மற்றொரு பிரிவைச் சேர்ந்தவனும், வேங்கி நாட்டை மீண்டும் புலிகேசிக்குப் பறி கொடுத்து விட்டுக் காஞ்சியில் வந்து அடைக்கலம் புகுந்தவனுமான அச்சுதவர்மன் அடக்க ஒடுக்கத்துடன் நின்றான்.

அவனுக்குப் பின்னால் கொடும்பாளூர்ச் சோழ வம்சத்தைச் சேர்ந்த செம்பியன் வளவனும், அச்சுத விக்கிராந்தனுடைய சந்ததியில் தோன்றிய உண்மையான வஜ்ரபாஹுவும் நின்றார்கள்.

இன்னும் பின்னால், பல்லவ சாம்ராஜ்யத்துப் பிரதம மந்திரி சாரங்கதேவ பட்டர், முதல் அமைச்சர் ரணதீர பல்லவ ராயர், மற்ற மந்திரி மண்டலத்தார், கோட்டத் தலைவர்கள் முதலியோர் ஒருவரையொருவர் நெருங்கியடித்துக் கொண்டு நின்றார்கள்.

நல்லது! எதிர்ப்பக்கத்தில் நிற்கும் பெண்மணிகளை இனி பார்க்கலாம். முதற்பார்வைக்கு, அந்தப் பெண்மணிகள் எல்லாரும் சௌந்தர்ய தேவதையின் பலவித வடிவங்களாகவே தோன்றுகிறார்கள். சிறிது நிதானித்துப் பார்த்துத்தான், அவர்களில் யார் இன்னவர் என்று தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

முதலில் காலம் சென்ற மகேந்திர சக்கரவர்த்தியின் பட்டமகிஷி புவனமகாதேவி சாந்தமும் பக்தியுமே உருக்கொண்டாற் போன்ற தெய்வீகத் தோற்றத்துடன் நின்றார். அவருக்கு அருகில் மாமல்ல சக்கரவர்த்தியின் தர்மபத்தினியும் பாண்டிய ராஜன் திருக்குமாரியுமான வானமாதேவி நின்றாள். சக்கரவர்த்தினியோடு இணைந்து நின்று இளவரசி குந்தவிதேவி தன் கரிய விழிகளினால் குறுகுறுவென்று அங்குமிங்கும் பார்த்துக் கொண்டிருந்தாள்.

வானமாதேவிக்கு அருகில் பக்தியும் தூய்மையும் சௌந்தரியமுமே உருக்கொண்டவள் போல் நின்ற மற்றொரு பெண் தெய்வத்தைச் சிறிது கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். சுமார் பதினெட்டுப் பிராயம் உடைய இந்த இளமங்கைதான் சோழ வம்சத்தின் கொடும்பாளூர்க் கிளையைச் சேர்ந்தவனான செம்பியன் வளவனுடைய திருப்புதல்வியான மங்கையர்க்கரசி. பிற்காலத்தில் பாண்டியன் நெடுமாறனின் தேவியாகி, ஞானசம்பந்தரை மதுரைக்குத் தருவித்து, சிவனடியார் கூட்டத்தில் என்றும் அழியாத புகழ்பெறப் போகிறவர்.

இன்னும் பல அந்தப்புரமாதரும் அங்கே இருந்தார்கள். அவர்களையெல்லாம் பற்றி நாம் தனித்தனியாகத் தெரிந்து கொள்வது அவசியமில்லையாதலால், மேலே செல்வோம்.

டண் டாண், டண் டாண் என்று ஆலாசிய மணி அவசர அவசரமாக அடித்தது. தம் தாம், தம் தாம் என்று பேரிகை பரபரப்புடன் முழங்கிற்று. சங்கங்கள், எக்காளங்கள், மேளங்கள் தாளங்கள், எல்லாமாகச் சேர்ந்து சப்தித்து ஆலயத்தின் விசாலமான மண்டபங்களில் நாலாபுறமும் கிளம்பிய எதிரொலியுடன் சேர்ந்து மோதிய போது, நாதக் கடல் பொங்கி வந்து அந்தக் கோயிலையே மூழ்கடித்தது போன்ற உணர்ச்சி அனைவருக்கும் உண்டாயிற்று. ஏகாம்பரேசுவரருக்கு தீபாராதனை நடந்ததை முன்னிட்டு இவ்வளவு ஆரவார ஒலிகளும் எழுந்தன. அந்த ஒலிகளுக்கு மத்தியில் பரவசமடைந்த பக்தர்களின் தழுதழுத்த குரல்களிலிருந்து கிளம்பிய "நமப் பார்வதீ பதயே!", "ஹரஹர மகா தேவா!" முதலிய கோஷங்களும் ஏற்பட்டன.

தீபாராதனை சமயத்தில் பலர் பக்தியுடன் கைகூப்பி நின்றனர். பலர் கன்னத்தில் அடித்துக் கொண்டனர். இளவரசன் மகேந்திரனும் இளவரசி குந்தவியும் மற்றவர்களைப் பார்த்து விட்டுச் சடசடவென்று தங்கள் கன்னத்தில் போட்டுக் கொண்டது, வெகு வேடிக்கையாயிருந்தது.

தீபாராதனை முடிந்ததும் குமார சிவாச்சாரியார் கையில் விபூதிப் பிரஸாதத்துடன் கர்ப்பக்கிருஹத்துக்குள்ளிருந்து வெளியே வந்தார். சக்கரவர்த்தியின் அருகில் வந்து நின்று, சிவாச்சாரியார் உரத்த குரலில் கூறினார்: "காலனைக் காலால் உதைத்தவரும், சிரித்துப் புரமெரித்தவரும், கஜமுகாசுரனைக் கிழித்து அவன் தோலை உடுத்தவரும், நெற்றிக் கண்ணில் நெருப்பை உடையவருமான திரிபுராந்தகரின் அருளால், பல்லவேந்திரருக்குப் பூரண வெற்றி உண்டாகட்டும்! புலிகேசியை வதம் செய்து வாதாபியை அழித்து வெற்றி வீரராய்த் திரும்புக! ஜய விஜயீபவா!"

இவ்விதம் சிவாச்சாரியார் சொல்லி விபூதிப் பிரஸாதத்தைச் சக்கரவர்த்தியின் கையில் கொடுத்தார். அதை மாமல்லர் பக்தியுடன் பெற்று நெற்றியிலே தரித்த போது, உள்ளே சிவலிங்கத்துக்கு அருகில் எரிந்து கொண்டிருந்த தீபம் திடீரென்று சுடர் விட்டு எரிந்து அதிக ஒளியுடன் பிரகாசித்தது. அப்படி எரிந்த தீபப்பிழம்பிலிருந்து ஒரு சுடர் சடசடவென்ற சப்தத்துடன் கீழே விழுந்தது. சில வினாடி நேரம் பிரகாசமான ஒளி வீசி விட்டு மங்கி அணைந்தது.

இந்தச் சம்பவமானது, சக்கரவர்த்தி எந்த நோக்கத்துடன் கிளம்புகிறாரோ அந்த நோக்கம் நன்கு நிறைவேறும் என்பதற்கு ஒரு நன்னிமித்தம் என்ற எண்ணம் அங்கே கூடியிருந்த எல்லோருடைய மனத்திலும் ஏக காலத்தில் தோன்றவே, 'ஜய விஜயீபவா!" "ஹர ஹர மகாதேவா!" என்ற கோஷங்கள் கிளம்பிக் கர்ப்பக்கிருஹம், அர்த்த மண்டபம், மகாமண்டபம் எல்லாம் அதிரச் செய்தன.

பல்லவேந்திரரின் திக் விஜயத்துக்கு ஏகாம்பரநாதர் அனுமதி கொடுத்து விட்டார் என்ற செய்தி வெளி மண்டபங்களிலும் கோயில் பிராகாரங்களிலும் கோயிலுக்கு வெளியே வீதிகளிலும் கூடியிருந்த ஜனங்களிடையே பரவி எங்கெங்கும், "ஹர ஹர மகாதேவா!" என்ற கோஷத்தைக் கிளப்பிற்று. அப்படிக் காஞ்சி நகரையே மூழ்கடித்த உற்சாக ஆரவார ஜயகோஷத்தில் கலந்து கொள்ளாமல் மௌனம் சாதித்தவன் ஒருவனும் அந்தக் கூட்டத்தில் இருந்தான். அவன் பல்லவ சக்கரவர்த்தியின் ரதசாரதியான கண்ணபிரான்தான்.
Back to top Go down
AruN
Admin
Admin
AruN


Posts : 1961
Join date : 2012-01-26

கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 7 Empty
PostSubject: Re: கல்கியின் சிவகாமியின் சபதம்   கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 7 Icon_minitimeTue May 29, 2012 6:44 pm

கல்கியின் சிவகாமியின் சபதம்


நான்காம் பாகம் : சிதைந்த கனவு

7. கண்ணனின் கவலை



கோபுர வாசலில் அழகிய அம்பாரிகளுடன் பட்டத்து யானைகள் நின்றன. அரண்மனையைச் சேர்ந்த தந்தப் பல்லக்குகளும் தங்கப் பல்லக்குகளும் பளபளவென்று ஜொலித்துக் கொண்டிருந்தன. சக்கரவர்த்தியின் அலங்கார வேலைப்பாடமைந்த ரதமும் இரண்டு அழகிய வெண்புரவிகள் பூட்டப் பெற்று நின்றது. குதிரைகளின் கடிவாளத்தை இழுத்துக் கொண்டு கண்ணபிரான் தன் ஆசனத்தில் உட்கார்ந்திருந்தான். அவனுடைய முகத்தில் என்றுமில்லாத கவலை குடிகொண்டிருந்தது.

அந்த அழகிய தங்க ரதத்தையும் அழகே வடிவமாய் அமைந்த உயர் சாதிப் புரவிகளையும் பார்ப்பதற்காக ஜனங்கள் ரதத்தைச் சூழ்ந்து நின்றார்கள். அவர்களில் ஒருவன், "என்ன, சாரதியாரே! முகம் ஏன் வாட்டமாயிருக்கிறது?" என்று கேட்டான்.

கண்ணன் அந்தக் கேள்விக்கு மறுமொழி ஒன்றும் சொல்லவில்லை.

அப்போது பக்கத்தில் நின்ற இன்னொருவன், "கவலைக்குக் காரணம் கேட்பானேன்? நாளைக்குப் போர்க்களத்துக்குப் புறப்பட வேண்டுமல்லவா! பெண்சாதி பிள்ளையை விட்டு விட்டுப் போக வேண்டுமே என்ற கவலைதான்!" என்றான்.

இதைக் கேட்டதும் கண்ணபிரானுடைய கண்கள் நெருப்புத் தழல் போல் சிவந்தன. கையிலிருந்த குதிரைச் சாட்டையை அந்த உயர் சாதிக் குதிரைகள் மேல் என்றும் உபயோகிக்க நேராத அலங்காரச் சாட்டையை மேற்கண்டவாறு சொன்ன ஆளின் மீது கண்ணன் வீசினான்.

நல்லவேளையாக அந்த மனிதன் சட்டென்று நகர்ந்து கொண்டபடியால் அடிபடாமல் பிழைத்தான். சற்றுத் தூரத்தில் நின்றபடியே அந்த விஷமக்காரன், "அப்பனே! ஏன் இத்தனை கோபம்? உனக்கு யுத்தகளத்துக்குப் போக விருப்பமில்லாவிட்டால் ரதத்தை என்னிடம் கொடேன்! நான் போகிறேன்!" என்றான்.

அதற்குள் அவன் அருகில் நின்ற இன்னொருவன், "அடே பழனியாண்டி! எதற்காகக் கண்ணபிரானின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்கிறாய்? அவனைச் சக்கரவர்த்தி நாளைக்குப் புறப்படும் சேனையுடன் யுத்தகளத்துக்குப் புறப்படக் கூடாது என்று சொல்லி விட்டாராம், அது காரணமாகத்தான் அவனுக்குக் கவலை!" என்று சொல்லவும், பக்கத்தில் நின்றவர்கள் எல்லோரும் "த்ஸௌ" "த்ஸௌ" "அடடா" "ஐயோ! பாவம்!" என்று தங்கள் அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டார்கள்.

ஆலயத்திலிருந்து வெளிவந்த புவனமகாதேவி முதலியவர்களைக் கண்ணபிரான் அரண்மனையிலே கொண்டு போய்ச் சேர்த்து விட்டுத் தன் வீட்டுக்குத் திரும்பினான். குதிரைகளைக் கொட்டடியில் விட்டுத் தட்டிக் கொடுத்து விட்டு கண்ணன் தன்னுடைய வீட்டுக்குள் நுழைந்த போது, அங்கே விநோதமான ஒரு காட்சியைக் கண்டான். கண்ணனுடைய மகன் பத்து வயதுச் சிறுவன், கையில் ஒரு நீண்ட பட்டாக் கத்தியை வைத்துக் கொண்டு, அப்படியும் இப்படியும் சுழற்றிக் கொண்டிருந்தான். அவ்விதம் அவன் கத்தியைச் சுழற்றியபோது, ஒவ்வொரு சமயம் அவனுடைய முகமானது ஒவ்வொரு தோற்றத்தைக் காட்டியது. சில சமயம் அந்தப் பால்வடியும் முகத்தில் கோபம் கொதித்தது. சில சமயம் அந்த முகம் நெருக்கடியில் சிக்கிக் கஷ்டப்படுவதைக் காட்டியது. சில சமயம் எதிரியை வெட்டி வீழ்த்தியதனால் ஏற்பட்ட குதூகலத்தை அந்த முகம் உணர்த்தியது!

இவ்விதம் அந்தச் சிறுவன் கத்தியைச் சுழற்றி யுத்த விளையாட்டு விளையாடுவதைச் சற்றுத் தூரத்தில் உட்கார்ந்திருந்த கமலி வெகு உற்சாகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்குத் தெரியாதபடி சப்தமின்றி வீட்டுக்குள்ளே வந்த கண்ணபிரான் மேற்படி காட்சியைப் பார்த்ததும் முதலில் அவனுடைய முகத்தில் சந்தோஷப் புன்னகை உண்டாயிற்று. புன்னகை ஒரு கணத்தில் மாறி முகச் சுணுக்கம் ஏற்பட்டது.

கோபமான குரலில், "முருகையா! நிறுத்து இந்த விளையாட்டை!" என்று கண்ணபிரான் அதட்டியதைக் கேட்டதும் சிறுவன் பிரமித்துப் போய் நின்றான். கமலியும், வியப்பும் திகைப்புமாகக் கண்ணனைப் பார்த்தாள்.

"தலையைச் சுற்றிக் கத்தியை வீசி எறி! குதிரை ஓட்டும் சாரதியின் மகனுக்குப் பட்டாக்கத்தி என்ன வந்தது கேடு? வேண்டுமானால் குதிரைச் சாட்டையை வைத்துக் கொண்டு விளையாடு! கத்தியை மட்டும் கையினால் தொடாதே! தெரியுமா?" என்று கண்ணன் கர்ஜனை புரிந்தான்.

இதைக் கேட்ட சிறுவன் கத்தியை இலேசாகத் தரையில் நழுவ விட்டுக் கமலியை அணுகி வந்து அவளுடைய மடியில் உட்கார்ந்து தேம்பித் தேம்பி அழத் தொடங்கினான். v கமலி, "இது என்ன கண்ணா! குழந்தையை எதற்காக இப்படி அழச் செய்கிறாய்? நாளைக்கு நீ யுத்தகளத்திற்குப் புறப்பட்டாக வேண்டும். திரும்பி வர எத்தனை நாள் ஆகுமோ, என்னவோ?" என்றாள்.

"கமலி! அந்த ஆசையை விட்டு விடு! உன் புருஷன் போர்க்களத்துக்குப் போகப் போவதில்லை. குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டிக் கொண்டு நான் காஞ்சி நகரத்திலேதான் இருக்கப் போகிறேன். சக்கரவர்த்தியின் கட்டளை அப்படி!" என்றான் கண்ணன்.

கமலியின் முகத்தில் அப்போது சொல்லி முடியாத ஏமாற்றத்தின் அறிகுறி காணப்பட்டது. "இது ஏன் கண்ணா? சக்கரவர்த்தி எதற்காக உன்னை இப்படி வஞ்சனை செய்தார்? கால் ஒடிந்த ஆயனச் சிற்பியைக் கூடப் போர்க்களத்துக்கு அழைத்துப் போகிறாராமே?" என்று கேட்டாள்.

"இராமர் வானர சைனியத்தோடு இலங்கைக்குப் போனாரே, அப்போது அந்த இலங்கைத் தீவைச் சமுத்திரத்தில் அமிழ்த்தி விட்டு வந்திருக்கக் கூடாதா?" என்றான் கண்ணபிரான்.

"என்ன இப்படிப் புதிர் போடுகிறாய்? இராமர் இலங்கையைச் சமுத்திரத்தில் அமிழ்த்தாததற்கும் நீ போருக்குப் போகாததற்கும் என்ன சம்பந்தம்?" என்றாள் கமலி.

"சம்பந்தம் இருக்கிறது. இலங்கை அப்போது சமுத்திரத்தில் மூழ்கியிருந்தால், அந்த ஊர் இளவரசர் இப்போது இங்கே வந்திருக்க மாட்டார் அல்லவா? அவருக்கு ரதம் ஓட்டுவதற்காக நான் இங்கே இருக்க வேண்டுமாம்! சக்கரவர்த்தியின் கட்டளை!"

"ஆஹா! அப்படியானால் மானவன்மரும் யுத்தத்துக்குப் போகப் போவதில்லையா? நமது சக்கரவர்த்தியும் அவரும் சிநேகிதம் என்று சொல்கிறார்களே?"

"பிராண சிநேகிதன்தான், அதனாலேதான் இந்தத் தொல்லை நேர்ந்தது. மானவன்மர் போர்க்களத்துக்கு வந்து அவருடைய உயிருக்கு அபாயம் நேர்ந்து விட்டால், இலங்கையின் இராஜவம்சம் நசித்துப் போய் விடுமாம். மானவன்மருக்கு இன்னும் சந்ததி ஏற்படவில்லையாம். ஆகையால், இலங்கை இளவரசர் போருக்கு வரக்கூடாதென்று சக்கரவர்த்தியின் கட்டளை. அவருக்காக என்னையும் நிறுத்தி விட்டார்!"

"இதுதானே காரணம்? அப்படியானால், நீ கவலைப்பட வேண்டாம், கண்ணா! கூடிய சீக்கிரத்தில் இலங்கை இளவரசரும் நீயும் போருக்குப் புறப்படலாம்!" என்றாள் கமலி.

"அது என்னமாய்ச் சொல்லுகிறாய்? என்று கண்ணபிரான் சந்தேகக் குரலில் கேட்டான்.

"காரணத்தோடுதான் சொல்லுகிறேன், இலங்கை இராணிக்குச் சீக்கிரத்தில் குழந்தை பிறக்கப் போகிறது."

"ஓகோ! இலங்கை இளவரசிக்கு உடம்பு சௌக்கியமில்லை என்று சொன்னதெல்லாம் இதுதானா?

"ஏகாம்பரேசுவரா! இலங்கை இளவரசிக்குப் பிறக்கும் குழந்தை, ஆண் குழந்தையாய்ப் பிறக்கட்டும்!" என்று கண்ணன் ஏகாம்பரர் ஆலயம் இருந்த திக்கு நோக்கிக் கைகூப்பி வணங்கினான்.

Back to top Go down
AruN
Admin
Admin
AruN


Posts : 1961
Join date : 2012-01-26

கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 7 Empty
PostSubject: Re: கல்கியின் சிவகாமியின் சபதம்   கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 7 Icon_minitimeTue May 29, 2012 6:48 pm

கல்கியின் சிவகாமியின் சபதம்


நான்காம் பாகம் : சிதைந்த கனவு

8. வானமாதேவி



அன்றைய இரவைக் காஞ்சி வாசிகள் பகலாகவே மாற்றிக் கொண்டிருந்தார்கள். காஞ்சி நகரில் வாழ்ந்த ஐந்து லட்சம் ஜனங்களில் கைக் குழந்தைகளைத் தவிர யாரும் அன்றிரவு உறங்கவில்லை.

நகரமெங்கும் வீதி விளக்குகள் ஜகஜ்ஜோதியாய் பிரகாசித்துக் கொண்டிருந்தன. யானைப் படைகளும், குதிரைப் படைகளும், காலாட் படைகளும், வெண் புரவிகள் பூட்டிய ரதங்களும் வரிசை வரிசையாக நின்றன. பொழுது புலரும் சமயத்தில் அரண்மனை வாசலில் வந்து சேருவதற்கு ஆயத்தமாக அவை அணிவகுக்கப்பட்டு வந்தன. மறுநாள் காலையில் சக்கரவர்த்தி போருக்குப் புறப்படும் வைபவத்தை முன்னிட்டு நகர மாந்தர்கள் இரவெல்லாம் கண் விழித்து வீதிகளையும், வீட்டு வாசல்களையும் அலங்காரம் செய்தார்கள். முற்றிய தார்களையுடைய வாழை மரங்களையும், செவ்விளநீர்க் குலைகளையும், தோரணங்களையும், திரைச் சீலைகளையும், தென்னங் குருத்துக் கூந்தல்களையும், எங்கெங்கும் தொங்க விட்டார்கள். ஒவ்வொரு வீட்டின் உச்சியிலும் ரிஷபக் கொடியைப் பறக்க விட்டார்கள்.

பெண்மணிகள் வீட்டுத் திண்ணைச் சுவர்களுக்கு வர்ணப் பட்டைகள் அடித்தார்கள். தெரு வாசல்களில் சித்திர விசித்திரமான கோலங்களைப் போட்டார்கள். பெரும்பாலும் போர்க்களக் காட்சிகளே அந்தக் கோலங்களில் அதிகமாகக் காணப்பட்டன. யானை வீரர்களும், குதிரை வீரர்களும் வாள்களும் வேல்களும் தரித்த காலாள் வீரர்களும் அக்கோலங்களில் காட்சியளித்தனர். ஒரு கோலத்தில் ஐந்து ரதங்களிலே பஞ்ச பாண்டவர்கள் தத்தம் கைகளில் வளைத்த வில்லும், பூட்டிய அம்புமாக காட்சி தந்தார்கள். இன்னொரு கோலத்தில் இராம லக்ஷ்மணர்கள் தசகண்ட ராவணனுடன் கோர யுத்தம் செய்யும் காட்சி தென்பட்டது. மற்றொரு கோலத்தில் மகாரதர்கள் பலருக்கு மத்தியில் அபிமன்யு தன்னந்தனியாக நின்று போராடும் காட்சி தோன்றியது. ஆஹா! காஞ்சி நகரத்துப் பெண்மணிகள் பாரத நாட்டு வீரர் கதைகளை நன்கு அறிந்திருந்ததோடு சித்திரக் கலையிலும் மிக வல்லவர்கள் என்பதிலே சந்தேகமில்லை.

சக்கரவர்த்தியின் அரண்மனையிலும் அன்றிரவெல்லாம் ஒரே கலகலப்பாயிருந்தது. அரண்மனை வாசலிலும் நிலா முற்றத்திலும் அலங்காரங்கள் செய்யப்பட்டன. வாழை மரங்களும் தோரணங்களும் கட்டினார்கள். செக்கச் சிவந்த மலர்க் கொத்துக்களோடு கூடிய தொண்டைக் கொடிகளைக் கட்டுக் கட்டாய்க் கொண்டு வந்து நெடுகிலும் கட்டித் தொங்கவிட்டார்கள். நிலா முற்றத்தில் வாள்களையும் வேல்களையும் நெய் தடவித் தேய்த்துத் தீட்டிக் கண்கள் கூசும்படி மின்னச் செய்தார்கள். யானைகளுக்கும் குதிரைகளுக்கும் பூட்ட வேண்டிய ஆபரணங்களுக்கு மெருகு கொடுத்துப் பளபளக்கச் செய்தார்கள்.

வீதிகளிலும் அரண்மனை வாசலிலும் இப்படியெல்லாம் அல்லோலகல்லோலமாயிருக்க, அரண்மனையின் அந்தப்புரத்துக்குள்ளே மட்டும் அமைதி குடிகொண்டு நிசப்தமாயிருந்தது. அங்குமிங்கும் முக்கிய காரியமாகச் சென்ற தாதிகள் அடிமேல் அடிவைத்து மெல்ல நடந்தார்கள். ஒருவருக்கொருவர் பேசும் போது காதோடு வாய் வைத்து மிகவும் மெதுவாகப் பேசினார்கள்.

இதன் காரணம் அச்சமயம் சக்கரவர்த்தி அந்தப்புரத்துக்கு வந்து தமது பட்டமகிஷியிடம் விடைபெற்றுக் கொண்டிருக்கிறார் என்று அவர்களுக்கெல்லாம் தெரிந்திருந்ததுதான்.

இதுவரையில் நாம் பிரவேசித்தறியாத பல்லவ சக்கரவர்த்தியின் படுக்கை அறைக்குள்ளே, சந்தர்ப்பத்தின் முக்கியத்தைக் கருதி நாமும் இப்போது போய்ப் பார்ப்போம். நீலப் பட்டு விதானத்தாலும் முத்துச் சரங்களினாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த தந்தணைக் கட்டிலில் பஞ்சணைமெத்தை மீது சக்கரவர்த்தி அமர்ந்திருக்கிறார். அவருக்கெதிரில் பல்லவ சாம்ராஜ்யத்தின் பட்டமகிஷி பாண்டியராஜன் குமாரி, வானமாதேவி மிக்க மரியாதையுடன் நின்று கொண்டிருக்கிறாள். சற்றுத் தூரத்தில் திறந்திருந்த வாசற்படியின் வழியாகப் பார்த்தால், அடுத்த அறையிலே தங்கக் கட்டில்களில் விரித்த பட்டு மெத்தைகளிலே பல்லவ குமாரன் மகேந்திரனும், அவன் தங்கை குந்தவியும் நிம்மதியாகத் தூங்குவது தெரிகிறது.

ஒன்பது வருஷத்துக்கு முன்னால் மாமல்லரை மணந்து, பல்லவ சிம்மாசனத்துக்குரியவளான பாண்டிய குமாரி வானமாதேவியை முதன் முதல் இப்போதுதான் நாம் நெருங்கி நின்று பார்க்கிறோம். அப்படிப் பார்க்கும்போது, பாண்டிய நாட்டுப் பெண்ணின் அழகைப் பற்றிக் கவிகளிலும் காவியங்களிலும் நாம் படித்திருப்பதெல்லாம் நினைவிற்கு வருகிறது. அந்த அழகெல்லாம் திரண்டு ஓர் உருவம் பெற்று நம் முன்னால் நிற்கிறதோ எனத் தோன்றுகிறது. அவளுடைய திருமேனியின் நிறம் செந்தாமரை மலரின் கண்ணுக்கினிய செந்நிறத்தை ஒத்திருக்கிறது. அவளுடைய திருமுகத்திலுள்ள கருவிழிகளோ, அன்றலர்ந்த தாமரை மலரில் மொய்க்கும் அழகிய கருவண்டுகளை ஒத்திருக்கின்றன..... இதென்ன அறியாமை? வானமாதேவியின் சௌந்தரியத்தையாவது, நாம் வர்ணிக்கவாவது? தபஸிகளுக்குள்ளே மிகக் கடுந்தபஸியான சிவபெருமானுடைய தவம் கலைவதற்கு எந்தத் திவ்ய சுந்தராங்கி காரணமாயிருந்தாளோ எவளுடைய மோகன வடிவத்தைக் கண்டு அந்த ருத்ர மூர்த்தியின் கோபாக்னி தணிந்து உள்ளம் குளிர்ந்ததோ அத்தகைய உமாதேவி பூமியில் அவதரிக்கத் திருவுளங்கொண்ட போது, மதுரைப் பாண்டியராஜனுடைய குலத்தையல்லவா தேர்ந்தெடுத்தாள்? சுடுகாட்டில் பூத கணங்களுக்கு மத்தியில் சாம்பலைப் பூசிக் கொண்டு பீபத்ஸ நடனம் புரிந்த எம்பெருமான் மண்டை ஓடு முதலிய தன்னுடைய கோர ஆபரணங்களையெல்லாம் அகற்றிவிட்டுச் சுந்தரேசுவரராக உருக்கொண்டு எந்தச் சகல புவன சுந்தராங்கியைத் தேடி வந்து மணம் புரிந்தாரோ, அந்தப் பார்வதி தேவி பிறந்த குலமல்லவா பாண்டிய குலம்? அப்பேர்ப்பட்ட குலத்தில் உதித்த வானமாதேவியின் சௌந்தரியத்தை நம் போன்றவர்களால் வர்ணிக்க முடியுமா?

"தேவி! புறப்பட வேண்டிய தருணம் வந்துவிட்டது. நாளைச் சூரியன் உதயமாகும்போது நானும் போருக்குப் பிரயாணமாவேன்!" என்றார் சக்கரவர்த்தி. வானமாதேவி மறுமொழி ஒன்றும் சொல்லவில்லை. அவளுடைய கண்களின் ஓரத்திலே இரு கண்ணீர்த் துளிகள் ததும்பி நின்று தீபச் சுடரின் ஒளியில் முத்துக்களைப் போல் பிரகாசித்தன.

"திரும்பி வர எத்தனை காலம் ஆகுமோ தெரியாது. ஒருவேளை திரும்பி வருகிறேனோ, என்னவோ! அதுவும் சொல்வதற்கில்லை. தேவி! உனக்குப் பெரும் பொறுப்பைக் கொடுத்து விட்டுப் போகிறேன். மகேந்திரனையும் குந்தவியையும் நீ கண்ணும் கருத்துமாய் வளர்த்து வர வேண்டும். இந்தப் பல்லவ ராஜ்யத்தைப் பாதுகாத்து, மகேந்திரனுக்கு வயது வந்ததும் அவனிடம் ஒப்புவிக்க வேண்டும்!" என்று மாமல்லர் கூறியபோது, அதுவரை தலைகுனிந்து நின்று கொண்டிருந்த வானமாதேவி சக்கரவர்த்தியின் காலடியில் அமர்ந்து, அவருடைய பாதங்களைக் கண்ணீரால் நனைத்தாள்.

"தேவி! இது என்ன? வீரபாண்டியன் குலத்தில் உதித்தவள் கணவனைப் போர்க்களத்துக்கு அனுப்பத் தயங்குகிறாயா?" என்று சக்கரவர்த்தி சிறிது பரபரப்புடன் கேட்டார். வானமாதேவி நிமிர்ந்து நோக்கிக் கூறினாள்: "பிரபு! அத்தகைய தயக்கம் எனக்குச் சிறிதும் இல்லை. இந்த இராஜ்யத்தைப் பாதுகாத்து மகேந்திரனிடம் ஒப்படைக்கும் பொறுப்பும் எனக்கு நிச்சயமாய் ஏற்படாது. நான் பிறந்த மதுரைமா நகரில் ஜோசியக் கலையில் தேர்ந்த நிபுணர்கள் பலர் உண்டு. அவர்கள் என்னுடைய மாங்கல்ய பலத்தைப் பற்றி ரொம்பவும் சொல்லியிருக்கிறார்கள். தாங்கள் சளுக்கரை வென்று, வாதாபியை அழித்துவிட்டு வெற்றி வீரராகத் திரும்பி வருவீர்கள், சந்தேகம் இல்லை!"

"பின் எதற்காக உன்னுடைய கண்களிலிருந்து கண்ணீர்த் துளிகள் சிந்தின? உனக்கு என்ன துயர் யாரால் ஏற்பட்டது? மனத்தைத் திறந்து சொல்ல வேண்டும்" என்றார் மாமல்லர்.

"சுவாமி என்னுடைய மாங்கல்யத்தின் பலத்தைப் பற்றிச் சொன்ன அரண்மனை ஜோசியர்கள் இன்னொரு விஷயமும் சொல்லியிருக்கிறார்கள். என் கழுத்திலே மாங்கல்யத்தோடு என் நெற்றியிலே குங்குமத்தோடு, மீனாக்ஷியம்மனின் பாதமலரை நான் அடைவேன் என்று சொல்லியிருக்கிறார்கள். ஒருவேளை தாங்கள் திரும்பி வருவதற்குள் அவ்விதம் நேர்ந்துவிடுமோ என்று எண்ணினேன், அதனாலேதான் கண்ணீர் வந்தது. தாங்கள் வெற்றி மாலை சூடி இந்த மாநகருக்குத் திரும்பி வருவதைக் கண்ணாற் பாராமல் வானுலகத்துக்குப் போகக் கூட எனக்கு இஷ்டமில்லை!" என்று வானமாதேவி கூறியபோது, மீண்டும் அவளுடைய விசாலமான நயனங்களிலிருந்து கலகலவென்று கண்ணீர்த் துளிகள் சிந்தின.

அப்போது மாமல்லர் அந்தப் பாண்டியர் குலவிளக்கைத் தமது இரு கரங்களினாலும் தூக்கிக் கட்டிலில் தம் அருகில் உட்கார வைத்துக் கொண்டார். தமது வஸ்திரத்தின் தலைப்பினால் அவளுடைய கண்களில் பெருகிய கண்ணீரைத் துடைத்தார்.

"தேவி! நானும் ஒரு ஜோசியம் சொல்லுகிறேன், கேள்! புலிகேசியைக் கொன்று, வாதாபியையும் அழித்துவிட்டு நான் வெற்றி மாலை சூடித் திரும்பி வருவேன். திக்விஜயம் செய்து விட்டுத் திரும்பி வரும் சக்கரவர்த்தியைக் காஞ்சிநகர் வாசிகள் கண்டு களிக்கும் பொருட்டு, வெண் புரவிகள் பூட்டிய தங்க ரதத்திலே நான் ஏறி நகர்வலம் வருவேன். அப்போது என் அருகில் நீ வீற்றிருப்பாய். உன்னுடைய மடியில் மகேந்திரனும் என்னுடைய மடியில் குந்தவியும் அமர்ந்திருப்பார்கள்..."

"பிரபு! அத்தகைய ஆசை எல்லாம் எனக்கில்லை. தாங்கள் திக்விஜயத்திலிருந்து திரும்பி வருவதைக் கண்ணால் பார்க்கும் பேறு பெற்றேனானால் அதுவே போதும். தாங்கள் திரும்பி வந்த பிறகும் நான் இந்தப் பூமியில் இருக்க நேர்ந்தால், நான் இத்தனை நாளும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் ஸ்தானத்தை, தங்கள் அருகில் வீற்றிருக்கும் பாக்கியத்தை, அதற்கு நியாயமாக உரியவளிடம் உடனே ஒப்புவித்துவிட்டு அகன்று விடுவேன். இந்த அரண்மனையில் தாங்கள் மனம் உவந்து ஒரு சிறு இடம் கொடுத்தால் இங்கேயே இருப்பேன். தங்கள் சித்தம் வேறு விதமாயிருந்தால் என் பிறந்தகத்துக்குப் போய்விடுவேன்!" என்று வானமாதேவி கூறிய மொழிகள் மாமல்லரைத் தூக்கிவாரிப் போட்டன.

"தேவி! இது என்ன? இந்த ஒன்பது வருஷமாக ஒருநாளும் சொல்லாத வார்த்தைகளைக் கூறுகிறாய்? உன்னிடம் யார் என்ன சொன்னார்கள்? எதை எண்ணி இவ்வாறெல்லாம் பேசுகிறாய்?" என்று மாமல்லர் மனக் கிளர்ச்சியோடு வினவினார்.

"சுவாமி! இந்த அரண்மனையிலும் இந்த மாநகரிலும் இந்தப் பல்லவ ராஜ்யத்தில் எல்லாருக்கும் தெரிந்த விஷயம் எனக்கு மட்டும் தெரியாமலிருக்கும் என்றா நினைத்தீர்கள்!"

"நீ எதைப்பற்றிச் சொல்லுகிறாய் என்பது இன்னமும் எனக்குத் தெரியவில்லை. அரண்மனையிலும் ராஜ்யத்திலும் எல்லாருக்கும் தெரிந்த அந்த மர்மமான விஷயந்தான் என்ன?" என்று சக்கரவர்த்தி ஆர்வத்துடன் கேட்டார்.

"மர்மம் ஒன்றுமில்லை பிரபு! தாங்கள் வாதாபிக்கு எதற்காகப் படையெடுத்துச் செல்கிறீர்கள் என்பதைப் பற்றித்தான்."

"எதற்காகப் படையெடுத்துப் போகிறேன்? அதைப்பற்றி நீ என்ன கேள்விப்பட்டாய்?" என்று மாமல்லர் கேட்டார்.

"என் வாயினால் சொல்லத்தான் வேண்டுமா? ஆயனச் சிற்பியின் மகளைச் சிறை மீட்டுக் கொண்டு வருவதற்காகப் போகிறீர்கள்..."

"ஆஹா! உனக்கும் அது தெரியுமா? எத்தனை காலமாகத் தெரியும்? எப்படித் தெரியும்?"

"எத்தனையோ காலமாகத் தெரியும், ஒன்பது வருஷத்துக்கு முன்னால் நான் இந்த அரண்மனையில் பிரவேசித்த புதிதில் தாய்மார்களும் தாதிகளும் என்னை அடிக்கடி பரிதாபமாகப் பார்த்தார்கள். என்னைப் பற்றி ஒருவருக்கொருவர் அனுதாபத்துடன் பெருமூச்சு விட்டுக் கொண்டு பேசினார்கள். சிறிது சிறிதாக அவர்களுடைய பேச்சுக்களிலிருந்து நான் ஊகித்துத் தெரிந்து கொண்டேன். சுவாமி! நான் தங்களுடைய பட்ட மகிஷியாகி ஒரு வருஷத்துக்குள்ளேயே தங்களுடைய இதய சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் பட்டமகிஷி வேறொருத்தி உண்டு என்று அறிந்து கொண்டேன்....."

"அப்படித் தெரிந்திருந்தும், நீ என்னை ஒரு முறையாவது அந்த விஷயமாகக் கேட்கவில்லை. ஒன்பது வருஷத்தில் ஒரு முறையாவது என் மீது குற்றங்கூறி நிந்திக்கவில்லை. தேவி! கதைகளிலும் காவியங்களிலும் எத்தனையோ கற்பரசிகளைப் பற்றி நான் கேட்டிருக்கிறேன், அவர்களில் யாரும் உனக்கு இணையாக மாட்டார்கள்" என்று மாமல்லர் பெருமிதத்துடன் கூறினார்.

"பிரபு! தங்களுடைய வார்த்தைகள் எனக்குப் புளகாங்கிதத்தை அளிக்கின்றன. ஆனால், அந்தப் புகழுரைகளுக்கு நான் அருகதையுடையவள் அல்ல!" என்றாள் பாண்டிய குமாரி.

"நீ அருகதையுடையவள் அல்ல என்றால் வேறு யார்? உன்னை அக்கினி சாட்சியாக மணந்த புருஷன் இன்னொரு பெண்ணுக்குத் தன் உள்ளத்தைப் பறி கொடுத்தவன் என்று தெரிந்திருந்தும் நீ ஒரு தடவையாவது அதைப்பற்றி என்னைக் கேட்கவில்லை. என்பேரில் குற்றம் சொல்லவும் இல்லை. பெண் குலத்திலே இதைக் காட்டிலும் உயர்ந்த குணநலத்தை யார் கண்டிருக்கிறார்கள்?"

"சுவாமி! தங்கள் பேரில் எதற்காகக் குற்றம் சொல்லவேண்டும்? குற்றம் ஏதாவது இருந்தால் அது என் தந்தையையும் தமையனையுமே சாரும். அவர்கள்தானே என்னைத் தாங்கள் கலியாணம் செய்து கொள்ள வேண்டுமென்று பிடிவாதம் பிடித்தார்கள்? தாங்கள் அதை மறுத்ததற்காக என் தமையன் ஜயந்தவர்மன் கோபம் கொண்டு இந்தப் பல்லவ ராஜ்யத்தின் மேல் படையெடுத்துக்கூட வந்தானல்லவா? அவனைத் தாங்கள் கொள்ளிடக் கரையில் நடந்த போரில் வென்று புறங்காட்டி ஓடச் செய்யவில்லையா? என் தமையன் திரும்பிவந்து தங்களை ஜயித்துவிட்டதாகச் சொன்னபோது மதுரை அரண்மனையிலே நாங்கள் யாரும் அதை நம்பவில்லை. தற்பெருமை மிகுந்த என் தமையனுக்குத் தங்களால் நேர்ந்த கர்வபங்கத்தைப் பற்றிப் பேசிப் பேசி மகிழ்ந்தோம். அப்படியும் என் அண்ணன் தங்களை விடவில்லை. தன்னுடைய வார்த்தையை நிலை நாட்டுவதற்காக எப்படியாவது என்னைத் தங்கள் கழுத்தில் கட்டிவிடப் பிரயத்தனம் செய்தான்...."

"தேவி! ஜயந்தவர்மனுடைய கட்டாயத்துக்காகவே நான் உன்னை மணந்ததாக இன்னமும் நீ நம்புகிறாயா?" என்று நரசிம்ம வர்மர் கேட்டபோது அவருடைய முகத்தில் புன்னகை தோன்றியது.

"இல்லை, பிரபு! ஜயந்தவர்மனுடைய கட்டாயத்துக்காக என்னைத் தாங்கள் மணக்கவில்லை. பல்லவ ராஜ்யத்தின் நன்மைக்காக என்னை மணந்தீர்கள். வடக்கேயுள்ள ராட்சதப் பகைவனோடு சண்டை போடுவதற்காகத் தெற்கேயுள்ள மன்னர்களுடன் சிநேகமாயிருக்க வேண்டுமென்று என்னை மணந்தீர்கள். என் தமையனுடைய கட்டாயத்துக்காக என்னைத் தாங்கள் மணக்கவில்லை. தங்கள் தந்தையின் உபதேசத்தைக் கேட்டு மணந்தீர்கள். இந்த அரண்மனைக்கு வந்த சில நாளைக்குள்ளேயே இதெல்லாம் நான் தெரிந்து கொண்டேன்..."

"ஆயினும் ஒரு தடவையாவது இதையெல்லாம் பற்றி என்னிடம் நீ கேட்கவில்லை. ஆகா! பெண்களின் இருதயம் வெகு ஆழமானது என்று சொல்வது எவ்வளவு உண்மை?" என்று மனத்திற்குள் எண்ணிய வண்ணம் மாமல்லர் தன் பட்டமகிஷியின் முகத்தை உற்றுப் பார்த்தார்.

அந்தச் செந்தாமரை முகத்தில் கபடத்தின் அறிகுறியை அணுவளவும் அவர் காணவில்லை. எல்லையில்லாத நம்பிக்கையும் அளவு காணாத அன்பும் சாந்தமும் உறுதியும் காணப்பட்டன!

வானமாதேவி கூறினாள்: "சுவாமி! தாங்கள் எதற்காக என்னை மணந்து கொண்டீர்கள் என்பது பற்றி நான் என்றைக்கும் கவலைப்படவில்லை. ஏனெனில், நான் எதற்காகத் தங்களை மணந்தேன் என்பது என் உள்ளத்தில் நன்கு பதிந்திருந்தது. ஜயந்தவர்மன் கொள்ளிடக் கரையில் தங்களால் முறியடிக்கப்பட்டுத் திரும்பி வந்த செய்தியைக் கேட்டபோது, என் உள்ளம் தங்களைத் தேடி வந்து அடைந்தது. அடுத்த நிமிஷத்தில், மணந்தால் தங்களையே மணப்பது, இல்லாவிடில் கன்னிகையாயிருந்து காலம் கழிப்பது என்ற உறுதி கொண்டேன். என் விருப்பம் நிறைவேறியது. தங்களை மணக்கும் பாக்கியத்தை அடைந்தேன். தங்கள் அரண்மனையின் ஒன்பது வருஷ காலம் எவ்வளவோ ஆனந்தமாக வாழ்ந்து வந்தேன். பிரபு! இந்த ஆனந்தம் என்றென்றைக்கும் நீடித்திருக்க வேண்டுமென்று நான் ஆசைப்படவில்லை. சில காலமாவது மற்றவர்களும் சந்தோஷமாயிருக்க வேண்டுமல்லவா. ஆயனர் மகளைச் சிறை மீட்டு அழைத்துக் கொண்டு தாங்கள் என்றைக்கு இந்த மாநகருக்கு திரும்பி வருகிறீர்களோ, அன்றைக்கே நான் இந்தப் புராதன பல்லவ சாம்ராஜ்யத்தின் தங்கச் சிம்மாசனத்திலிருந்தும், இந்தப் பூர்வீக அரண்மனையின் தந்தக் கட்டிலிலிருந்தும் கீழே இறங்கச் சித்தமாயிருப்பேன்" என்று தழுதழுத்த குரலில் கூறி வானமாதேவி கண்ணீர் ததும்பிய கரிய கண்களினால் மாமல்லரைப் பார்த்தாள்.

உணர்ச்சி ததும்பிய அந்த வார்த்தை ஒவ்வொன்றும் கள்ளம் இல்லாத உண்மை உள்ளத்திலேயிருந்து வந்தனவென்பதை மாமல்லர் தெளிந்து உவகை கொண்டார்.
Back to top Go down
Sponsored content





கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 7 Empty
PostSubject: Re: கல்கியின் சிவகாமியின் சபதம்   கல்கியின் சிவகாமியின் சபதம் - Page 7 Icon_minitime

Back to top Go down
 
கல்கியின் சிவகாமியின் சபதம்
Back to top 
Page 7 of 7Go to page : Previous  1, 2, 3, 4, 5, 6, 7

Permissions in this forum:You cannot reply to topics in this forum
RaaGaM GloBaL ChaT FoRuM :: ENTERTAINMENT :: NOVELS-
Jump to: