RaaGaM GloBaL ChaT FoRuM
RaaGaM GloBaL ChaT FoRuM
RaaGaM GloBaL ChaT FoRuM
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

RaaGaM GloBaL ChaT FoRuM

Never Blame any Day In Your Life. Good Days Give You Happiness. Bad Days Give You Experience. Both Are Essential In Life. All Are God's Blessings.
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inChaT
Latest topics
» The Girl Next Door
Tamil Story - பய - பக்தி  Icon_minitimeSat Oct 26, 2013 3:00 pm by Anjali

» The Role Play
Tamil Story - பய - பக்தி  Icon_minitimeFri Oct 25, 2013 2:37 pm by Lekha

» Yealae Yealae Dosthu Da Song Lyrics From Endrendrum Punnagai Movie
Tamil Story - பய - பக்தி  Icon_minitimeThu Oct 24, 2013 3:20 pm by Selection

» Vaan Engum Nee Minna Song Lyrics From Endrendrum Punnagai Movie
Tamil Story - பய - பக்தி  Icon_minitimeThu Oct 24, 2013 3:17 pm by Selection

» Othaiyila Ulagam Song Lyrics From Endrendrum Punnagai Movie
Tamil Story - பய - பக்தி  Icon_minitimeThu Oct 24, 2013 3:11 pm by Selection

» Kadal Naan Thaan Song Lyrics From Endrendrum Punnagai Movie
Tamil Story - பய - பக்தி  Icon_minitimeThu Oct 24, 2013 3:07 pm by Selection

» Ennai Saaithaale Song Lyrics From Endrendrum Punnagai Movie
Tamil Story - பய - பக்தி  Icon_minitimeThu Oct 24, 2013 3:01 pm by Selection

» Oru Nodi Piriyavum Song Lyrics From Rummy Movie
Tamil Story - பய - பக்தி  Icon_minitimeThu Oct 24, 2013 2:52 pm by Selection

» Kooda Mella Kooda Vachi Song Lyrics From Rummy Movie
Tamil Story - பய - பக்தி  Icon_minitimeThu Oct 24, 2013 2:25 pm by Selection

May 2024
MonTueWedThuFriSatSun
  12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
CalendarCalendar

 

 Tamil Story - பய - பக்தி

Go down 
AuthorMessage
AruN
Admin
Admin
AruN


Posts : 1961
Join date : 2012-01-26

Tamil Story - பய - பக்தி  Empty
PostSubject: Tamil Story - பய - பக்தி    Tamil Story - பய - பக்தி  Icon_minitimeWed Apr 10, 2013 2:09 pm






Tamil Story - பய - பக்தி





குடும்பம்… குட்டி… என்றில்லாமல் தனிக்காட்டு ராசாவாக வலம் வரும் மேன்சன் வாழ்க்கை சுகம் உடம்பில் ஊறிப் போயிருந்தது. அதிலும் திருவல்லிக்கேணி மேன்சன் பேச்சலர் வாழ்க்கையை ஒருமுறை வாழ்ந்து விட்டால் அதிலிருந்து அவ்வளவு எளிதில் விடுபட மனசு இடம் தராது. சாம்பாரில் மிதக்கும் ரத்னா கபே இட்லிகள், ரசம், சாம்பார், மோர் என்று எதை ஊற்றினாலும் குழைத்துப் போகும் காசி வினாயகா மெஸ் சாப்பாடு, மூக்கைத் துளைக்கும் முனியாண்டி மெஸ், ஒரிரு முறைகள் மணக்கும் பீப் பிரியாணி-சுக்கா வருவல் என்று வயிற்றுக்கும், வாயிற்கும் வஞ்சமும்-பஞ்சமுமில்லாமல் விதவிதமாய் கிடைக்கும் உணவுகளுக்கு கொஞ்சம் நாட்களில் நான் கரைந்துதான் போனேன்.

விருப்பத்திற்கு தகுந்தாற் போல் டிபனையோ, சாப்பாட்டையோ முடித்து விட்டு காலாற ரூம்மேட் நண்பனுடன் நடந்து கடற்கரையில் கண்ணுக்கு குளிர்ச்சியாய் ஜோடிகளை இரசிக்கலாம். நீண்டதூரம் போக வேண்டும்… பேருந்தைப் பிடிக்க வேண்டும்…. இரவு வெகுநேரமாகி விட்டது.. என்ற நினைப்பு வராமல் தினமும் வேறுவேறு நண்பர்களுடன், நடந்து ஈரமணலில் அமர்ந்து ஊர்க்கதைகளைப் பேசலாம்.. உலக அரசியலை விவாதிக்கலாம்… வெட்டிபந்தாக்களை அளந்து விடலாம். கடலை போடலாம்… செக்ஸ் பேசலாம்.. வானத்திற்கு கீழ் உள்ள எதை வேண்டுமானலும் பேசலாம். ஒரிரு சமயங்களில் நண்பிகளுடன் "கேட்வாக்” பயின்ற அந்த ஒரிரு மணித்துளிகளை மாத, ஆண்டுக்கணக்கில் பேசிக் கொண்டு திரியலாம்.

எதுவும் வேலைக்கு ஆகவில்லை என்றால் "..கரையை யார் முதலில் தொடுவது என்று ஒவ்வொரு கடல் அலையும் போட்டியிட்டாலும் கரையைத் தொடமுடியாமல் கரைந்து போகின்றன.… ஆனாலும் கடலலைகள் சோர்ந்தா போகின்றன. தொடர்ந்து ஒயாது கடலலைகள் கரையை தொட விடா முயற்சி செய்து கொண்டிருக்கிறன. நம்ம வாழ்க்கையிலும் அது போலத்தான் தொடர்ந்து போராடனும்…..” என்று தத்துவமும் பேசலாம்.

வார இறுதியில் கறுப்பு, சிவப்பு, மாநிறம் என்று அனைத்தும் கலவையாய் குழம்பிக் கிடக்கும் நண்பர்கள் குழாமுடன் .பீர் அருந்தி மட்டையாகலாம். கொஞ்சம் நிதானமாய் இருந்தால், கடற்கரை மணலில் சிகரெட் பற்ற வைத்து புகைக்காமல் அது சாம்பலாகும்வரை விரலிடுக்குகளில் வைத்துக் கொண்டு அரட்டை அடிக்கலாம். அப்படிப் புகைக்காமல் சாம்பலான சிகரெட் துண்டின் கடைசிக் கனல் கங்கை அலட்சியத்துடன் சுண்டி கடல் நீரில் எறிந்து இரசிக்கலாம். நள்ளிரவு தாண்டியதும் மிரட்டும் போலிசாருடன் சில்லறை சச்சரவில் ஈடுபட்டு, பின் சமரசமாகி மீதி கையிலிருக்கும் சில்லறையை கையூட்டாக கொடுத்து சிநேகமாகிக் கொள்ளலாம்….

இப்படியான திருவல்லிக்கேணி மேன்சன் வாழ்க்கையில் மூழ்கி ஐந்தாறு ஆண்டுகள் ஒடி விட்டது. இவைகள் எல்லாவற்றையும்விட இந்த வாழ்க்கை போர் அடிக்காமல் இருக்க முதல் காரணம் எனது "ரூம்மெட்”. பால்ய சிநேகிதன், பள்ளி நண்பன், கல்லூரி நண்பன் … இப்படி ஒவ்வொரு வளர்ச்சிப் பருவத்திலும் சமூகம் உறவுகளை புத்துயிர்ப்பு செய்து வாழ்க்கையை சுவாரசமாக்கி வைக்கிறது. எலி பொந்து போன்ற மேன்சன் அறையில் அவன் ரூம்மெட்டாக வாய்க்காமல் இருந்தால் நொந்து போயிருப்பேன். ஒரு வார்த்தையில் சொல்வதெனில் அவன் ஒரு கண்ணியமான நண்பன். எனது ரூம்மெட்-வுடன்……..இப்படி அழைத்து… அழைத்து என்னைப் பொருத்த அளவில் அவனது பெயரே "ரூம்மெட்” என்றாகி விட்டது.

மேன்சனில் ‘முதிர் கண்ணன்களாய்’ வலம் வரும் நண்பர்கள் சிலரின் வரிசையில் நானும் சேர்ந்து விடுவேனோ என்ற பயம் அடிக்கடி வரும். ஆனால் அதையும் தாண்டி இப்பொழுது வேறு பயம் மேன்சன்வாசிகளிடம் தொற்றிப் படர்கிறது. மெல்ல மெல்ல இனம்புரியாத கவலை ரேகைகள் ஒவ்வொருவர் முகத்திலும் அரும்புகின்றன.

நாள்தோறும் தொலைக்காட்சி செய்திகளை, நாளிதழ் விளம்பரங்களைப் பார்க்கும் பொழுதும் வாசிக்கும் பொழுதும் அவை அதிகரிக்கிறது. தேநீர்க் கடைகளில், மெஸ்சில் வரிசையாய் சாப்பிடுகையில் பயம் அங்குள்ளவர்களின் தோளில் தொற்றிக் கொண்டு இருப்பதைப் பார்க்க முடிகிறது. சக மனிதர்களை சந்தேகத்துடன், அவநம்பிக்கையுடன் பார்க்க அந்த பயம் நம்மைத் தூண்டுகிறது. மவுண்ட் ரோடு திரையரங்குகளில் இரவு சினிமா காட்சி பார்த்து விட்டு நண்பர்களுடன் கூச்சலாய் உரையாடிக் கொண்டு "பாய்கடை”யில் மசாலா பால் குடித்து விட்டு நிதானமாய் நடந்து, மேன்சன் இரும்புக் கேட்டை படபடவென இனிமேல் தட்ட முடியாது. "பாய்கடை”யில் இப்பொழுது கூட்டம் குறைந்து காணப்படுகிறது. நள்ளிரவு வரை கடற்கரையில் நடமாடுவது சிக்கலாகிப் போக வாய்ப்புள்ளதாக நண்பர்கள் கிசுகிசுக்கின்றனர்.

சமூக இணக்கத்திற்கு மாறாக சமூக பயம் இந்த நாட்களில் மூளைக்குள் குடியேறி அமர்ந்து விடுகிறது. வினாயகர் சதுர்த்தி விழா வரும் அக்டோபர் மாதங்களில் இந்த வியாதி வந்து தோலில் தொற்றிக் கொள்கிறது.

காசி விநாயகா மெஸ்சில் நண்பர்களுடன் கும்பலாகக் காத்திருந்து, உணவு அருந்தி விட்டு ரூம்மெட்டுடன் திரும்பிக் கொண்டிருந்தேன். அண்ணாச்சி பழ ரசத்தின் சுவை எங்கள் கைகளிலிருந்து மறையாமல் கூடவே பறந்து வந்து கொண்டிருந்தது.

பெரும் ஆரவாரத்துடன் எங்களைக் கடந்த அந்த எட்டு சக்கரங்கள் வண்டியில் இருந்து பூதாகரமான உருவத்தைப் பார்த்து ஒருகணம் திணறிப் போனோம்.. மழு, வேலாயுதம், சிறிய கத்தி, பட்டாக்கத்தி, வெட்டுஅரிவாள், கடப்பாரை, வில், அம்பு, கதாயுதம், வெடிகுண்டு, துப்பாக்கியுடன்….. 100 அடிகளுக்கு மேல் இருந்த வீர விக்னேஷ்வரரைப் பார்க்கவே பயமாக இருந்தது. ரூம்மெட்டின் முகம் பயத்தில் இன்னும் வெளிறிப் போய் விட்டது.

வளவளவென்று பேசிக்கொண்டு சென்ற எங்கள் பேச்சு நின்று, எங்கள் மூச்சு எங்களுக்கே கேட்டது. அந்த அமைதி என்னை தொந்தரவு செய்தது. ஒரு பெருமூச்சுடன் எனது பால்ய நினைவுகளை ரூம்மெட்டுடன் பகிர்ந்து கொண்டேன்.

பொங்கள், தீபாவளி, கார்த்திகை போன்ற பண்டிகை நாட்களில் கிடைக்கும் கறிக் குழம்பு சுவை உடம்பில் ஒரு கிளர்ச்சியை உண்டு பண்ணும். பொங்கலுக்கு பொங்கல் கிடைக்கும் புதுத்துணியின் மணம், மாட்டுக் கொம்புகளுக்கு பூசப்படும் வண்ணங்களின் வாசனையைவிட சின்ன வயதில் அதிக மகிழ்ச்சியைத் தரும். புதுத் துணியை அடிக்கடி மோந்து பார்த்துக் கொள்வோம்.

பிள்ளையார் பண்டிகை சின்னப் பசங்களுக்கு கொண்டு வரும் மகிழ்ச்சி அளவில்லாதது. பிள்ளையாருக்குப் படைக்க சிறப்பான உணவுகள் ஏதும் இருக்காது.. சுண்டலும், எள்ளு கொழுக்கட்டை மட்டும் சாமிக்கு வைப்பார்கள். கொழுக்கட்டையின் உள்ளே இருக்கும் வெல்லபாகு எள்ளை தனியா எடுத்துத் தின்று விட்டு, சுவையற்ற கொழுக்கட்டையை நாய்களுக்கு போட்டு விடுவேன். அப்பா பார்த்து விட்டு வள்வள்ளென்று குரைப்பார். எல்லா பசங்களும் இப்படித்தான்.

ஆடு, மாடுகள் மேய்க்கின்ற சிறிய குன்றில் பிள்ளையார் கண்களான குன்றி மணிகளை தேடி அலைந்து சேகரிக்கின்றது எங்களது முதல் வேலை. பளபளவென அடர் சிவப்பு, கருப்பு நிறங்களில் மின்னும் குன்றிமணிகளை யார் அதிகம் சேகரிப்பது என்று பசங்களுக்கிடையில் பெரும் போட்டி நடக்கும். முட்புதர்களில் சுற்றிக் கிடைக்கும் கொடிகளில் காய்ந்து தொங்கும் குன்றிமணிகளை வேகாத வெயிலில் தேடிப் பிடித்து பறிப்போம். முட்கள் கைகளில் சிராய்த்து வீரத்தழும்புகள் ஏற்பட்டதை ஒவ்வொருவரும் மாற்றி மாற்றி காண்பித்து பீற்றிக் கொள்வோம்.

தூங்கி எழுந்ததும் கிராமத்க்ச் சுற்றி உள்ள எருக்கம் பூக்களை தேடி ஒடிவோம். முதிர்ந்த எருக்கம் பூ மொட்டுகளை அமுக்கினால் பட்பட்வென ஒலிகள் கேட்கும். எத்தனை மொட்டுகளை உடைத்தோம் என்றும், யாருடைய மொட்டு அதிக ஒலி உண்டாக்கியது என்றும் எங்களுக்குள் போட்டி நடக்கும். கைகளில் எருக்கப்பால் பட்டு பிசுபிசுவென்றாகி விடும். எங்களை நாலு சாத்து சாத்தி, கைகளை மண்ணில் வைத்து விரால்மீனை ஆய்வது மாதிரி தேய்த்து அம்மா சுத்தப்படுத்துவாள்.

நானும், தங்கையும் மனைக்கட்டையை தூக்கிக் கொண்டு ஒரு கிலோ மீட்டர் தாண்டி உள்ள சிற்றூருக்க்ச் செல்வோம். களி மண்ணாலான அரை, முக்கால், ஒரடி பிள்ளையார்களை அச்சுகளில் அடித்து வைத்திருப்பார்கள். தேடி, தேடி அலைந்து அப்பா தந்த காசுக்கு அழகான பிள்ளையாரை வாங்கி மனையில் வைத்து தலை சுமந்து வருவோம். ஒரிரு சந்தர்ப்பத்தில் சில பசங்களின் பிள்ளையார் கீழே விழுந்து பிள்ளையார் குரங்காக-களிமண் மொந்தையான கதைகளும் உண்டு. வண்ண காகிதத்திலான குடையை தங்கை தனது குட்டி தலையில் பிடித்துக் கொண்டு வாலாக பின் தொடர்வாள்.

அதற்குப் பிறகுதான் எங்களது அதிமுக்கிய வேலையே ஆரம்பம் ஆகும். கழனியிலும், குளத்து ஒரங்களிலும் ஓடித் திரிந்து களிமண்ணைக் கொத்தி எடுத்து வருவோம். எல்லா மண்களிலும் பொம்மை செய்ய இயலாது. வண்டல் கலக்காத சுத்தமான குழகுழப்பான களிமண் அதற்கு வேண்டும். பெரிய காதுகளைக் கொண்ட யானை முகமும், கொழுத்த தொந்தியும், மூஞ்சூறும் களிமண்ணில் குழைந்து செய்யும் பொழுது வரும் ஆனந்தம் அனுபவித்தால் மட்டுமே தெரியும். வீட்டுப் புறக்கடையில் விரிந்த வேப்பமரத்தடி அன்றைய தினம் களை கட்டி இருக்கும். சிற்பக் கலை கூடமாய் மாறி இருக்கும். எல்லாப் பசங்களும் பதமான களிமண்ணைப் பிசைந்து முதலில் உருவாக்குவது கொழுக்கட்டைகளைத்தான். பதினைந்து நிமிடத்திற்குள் நூற்றுக்கு மேல் களிமண் கொழுக்கட்டைகள் எங்களைச் சுற்றி இருக்கும்.

"கொழுக்கட்டை போதும்டா….பிள்ளையார் எலி செய்வோம்”

கொழுக்கட்டையை உள்ளங்கையில் வைத்து உருட்டி முன்னால் லேசாகவும் பின்னால் பலமாகவும் முன் விரல்களால் அழுத்தினால் எலி உருவாகி விடும். குன்றி மணிகள் இரண்டை சொருகினால் உண்மையான மூஞ்சூறு குறுகுறுவென முழிக்கும். குட்டியாய், பெரிதாய், நீளமாய் எங்களைச் சுற்றி நூற்றுக்கணக்கில் மூஞ்சூறுகள் ஒடிக் கொண்டு இருக்கும். ஆனால் திருவல்லிக்கேணியில் தெருவிற்குத் தெரு வைக்கப்பட்டு இருந்த வினாயகர் சிலைகளில் தேடி தேடிப் பார்க்கிறேன். பிள்ளையார் வாகனமாக மூஞ்சூறு காணவில்லை….. மாறாக வயிறுபுடைத்த பெருச்சாளிகள் கூரிய பற்கள் காட்டி பயமுறுத்தி இளித்துக் கொண்டிருந்தன! மூஞ்சூறுகள் கீச்..கீச்ச்சென மூக்கை நீட்டிக்கொண்டு குடிசையில் அடிக்கடி இரவில் வலம் வரும். நான் அடிப்பதற்கு அதன் பின்னால் ஒடுவேன் ஆனால் அம்மா,

"பிள்ளையார் எலிடா… அதை அடிக்காதடா.. ஒன்னும் செய்யாதுடா அது…” என்பார். இரவானது கருவாட்டை சுட்டு எலிப்பொறிக்குள் வைப்பாள். அதில் மாட்டும் எலிகள் மூஞ்சூறு கிடையாது. அது வேறு வகையான திருட்டு எலிகள். காலையில் கால்வாய் நீரில் எலிப்பொறியை அழுத்தி அந்த எலியைக் கொல்வது எனக்குப் பிடித்த விளையாட்டு.

நாங்கள் அடுத்ததாக பிள்ளையாரைச் செய்வோம். களிமண்ணில் பிள்ளையார் பொம்மைகள் செய்வது மாதிரியான மகிழ்ச்சி ஏதும் கிடையாது. அவரவர் கற்பனைகளுக்கு தகுந்தாற் போன்று இடம் தரும் உருவம் பிள்ளையார். பிள்ளையார் களிமண்ணில் பிடிக்க குரங்கு மட்டுமல்லாமல் கரடி, யானை, காட்டாமிருகம், புலி, சிங்கம் எல்லாம் அந்த குழந்தைகள் சிற்பக் கூடத்தில் வரும். என் தங்கை இன்னும் கொழுக்கட்டை விட்டு நகர்ந்து இருக்கமாட்டாள். பிள்ளையாரைப் பிசைவதாய் நினைத்து உடம்பு முழுக்க களிமண்ணைப் பூசிக் கொண்டு அவளே குட்டிப் பிள்ளையாராய் குந்தி இருப்பாள்.

வாங்கி வந்த பிள்ளையார் நடுக்கூடத்தில் இருக்க, நாங்கள் செய்த பிள்ளையர் அழகாய் எருக்கம் மாலைகள் அணிந்து ஒரமாக வீற்று இருக்கும். அதனுடன் மூஞ்சூறுகள், தங்கை செய்த கொழுக்கட்டைகளும் கண்டிப்பாக கொலு வீற்று இருக்கும்.

நான்கைந்து நாட்கள் வைத்து செய்யும் பிள்ளையார் அரசியல் அன்று கிடையாது. மாலையே பிள்ளையாரை எல்லா பசங்களும் கொண்டு போய் கிணற்றில் பொத், பொத்தென்று போடுவார்கள். பிள்ளையார் வயிற்றில் ஒட்டி கொண்டு இருக்கும் ஐந்துகாசு, பத்துகாசு நாணயங்களை கைப்பற்ற கிணற்றில் அம்மணக் குட்டியாக பசங்க அடிக்கும் பல்டிகளும், அலப்பரைகளும் தாங்க முடியாது.

கற்பூரத்திற்கு அம்மா காசு தரமாட்டாள். பிள்ளையார் வயிற்றில் ஒட்டி இருக்கும் ஐந்து காசில் கற்பூரம் வாங்கச் சொல்வாள். மூன்று காசுக்கு சிறிய கற்பூரக் கட்டியும், மீதியான இரண்டு காசில் அண்ணனும் தங்கையும் ஆளுக்கொரு தேன் மிட்டாயும் வாங்கி கன்னத்தில் அதக்கிக் கொள்வோம். வண்ணக்குடையை வீட்டிற்கு எப்படியும் கொண்டு சென்று விட வேண்டும் என்று தங்கை நினைப்பாள். பசங்க போடுகின்ற விளையாட்டு சண்டையில் குச்சியும் வண்ணக் காகிதங்களுமாய் அது வீடு போய் சேரும்.

அடுத்தடுத்த சில நாட்களில் இந்த களிமண் பிள்ளையார் பொம்மைகளை எங்கள் ஆசை தீரும்வரை அழித்து அழித்து விளையாடுவோம். பிள்ளையார் நினைவாக பிறப்பம் பழங்கள் வீட்டில் கிடக்கும். பழம் என்று ஏமாற்றி அதை தங்கைக்குக் கொடுப்பேன். அதன் புளிப்பு தாங்க முடியால் தூ..தூ.தூத் என்று முகத்தை அஷ்ட கோணலாக்கித் துப்புவாள். அதெல்லாம் முடிந்து போன பழைய கதை..

இன்று சென்னையில் பிள்ளையார் வீரவிக்னேஷ்வராய் உருமாறி இருந்தார். இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, சிவசேனா ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி. பஜ்ரங்தள் ……..என்று தெருவிற்குத் தெரு ஒவ்வொரு அமைப்பும் வினாயகரை குத்தகை எடுத்துக் கொண்டு கலாட்டா செய்துக் கொண்டு இருந்தனர். கட்டாய வசூல் வேட்டைகள் நடந்தன. பணம் ‘தண்ணீராய்’ ஓடியது. கார்கில் பிள்ளையார், அணுகுண்டு பிள்ளையார், சிங்க வாகன வினாயகர், மூஷிக வாகனன் என்று வினாயகர் இப்பொழுதெல்லாம் பயங்கரமாய் மாறி இருந்தார். வழிபாடு, நம்பிக்கை, பக்தி எல்லாம் பழங்கதையாகி துவேஷம், கலவரம், மதவெறியாய் புதிய அவதாரங்கள் எடுத்து விட்டார்.

சுத்த சைவாள் ஒட்டலில் அன்று காலை சிற்றுண்டி அருந்திக் கொண்டிருந்தேன். கல்லாவில் இருந்த வெளுத்த உளுவ மீன் கருத்த சுறாவிடம் இணைக்கமாய் குசுகுசுவென காதை கடித்துக் கொண்டிருந்தது. நான் வேலை பார்க்கும் வடநாட்டு பண திமிங்கலம் தொழிலாளிகளை சனாகுனி பெடிசு மீன்களை போன்று அலட்சியமாக எப்பொழுதும் கவனிப்பான். வினாயகர் சதுர்த்தி விழா நாட்களில் அந்த திமிங்கலத்தின் வாயில் சில பெடிசுகள் முத்தம் கொடுத்து கொஞ்சிக் கொண்டிருந்தன. ஆண்டு முழுவதும் வராத முதலாளி- தொழிலாளி இணக்கம் இப்பொழுது எதற்காக வருகிறது என்ற கேள்விக்கு பதில்தான் தெரியவில்லை.

மெல்ல மெல்ல பயம் நச்சரவமாய் காற்று, நிலம், வானமென்று படர்ந்து ஊடுருவி வியாபித்தது. அதை எப்பொழுது வேண்டுமென்றாலும் படமெடுத்து ஆட வைக்க முடியும் என்று மூலைக்கு மூலை வைக்கப்பட்டிருந்த .ஸ்பீக்கர்கள் முழங்கி பறை சாற்றின. தினமும் போலிஸ்காரர்கள் கொடி அணிவகுப்புகள் நடத்தி தங்கள் பங்கிற்கு பயமுறுத்தினர்.

எங்கள் மேன்சனிலிருந்து பார்த்தால் சாலை நன்றாகத் தெரியும். தலைவலி அதிகமானதால் அரைநாள் விடுமுறை கேட்டு மதியமே மேன்சன் திரும்பி விட்டேன். எனது அறை திறந்து கிடந்தது.

"ரூம்மெட்…. ஏன் சீக்கரம் வந்துட்டே..” என்று ஆச்சிரியத்துடன் கேட்டேன். வழக்கமாக உற்சாகமாக காணப்படும் அவன் வெளிறிய புன்னகையை வீசினான். இரண்டு நாட்களுக்கு முன் ஏற்றிய போதையின் பின்விளைவாக இருக்குமா என்று சந்தேகப்பட்டேன். சிறிது ஒய்வுக்குப் பின்பு வேடிக்கை மனநிலை தொற்றிக்கொள்ள பிள்ளையார் ஊர்வலம் பார்க்க ரூம்மெட்டுடன் கிளம்பினான்.

வெறியேற்றப்பட்ட கும்பல் காவி ரிப்பன்களைக் கட்டிக்கொண்டு வண்ணப் பொடிகளை தூவிக் கொண்டு கூச்சலிட்டது. சல்லிப்பயல்கள் பெண்களைக் கண்டதும் இடுப்பை முன்னும் பின்னும் ஒடித்து ஒடி ஆபாசம் காட்டினர். அந்த நூறடி சிலை வீர விக்னேஷ்வர் சிலை முன்னிலும் இப்பொழுது பயங்கரமாய் காட்சி தந்தது.

மேன்சனிலிருந்து நான்கு கட்டிடம் தள்ளி மசூதி ஒன்று இருந்தது. அந்த வழிபாட்டு தலம் சந்தில் யாருக்கும் தொந்தரவில்லாமல் அதுபாட்டிற்கு இருந்தது . அதிகாலையில் நடைபயிலச் செல்லும்பொழுது பல தாய்மார்கள் தங்கள் கைக்குழந்தைகளுடம் நெற்றி நிறைய குங்குமங்களுடன் மசூதி வாசலில் காத்திருப்பதைப் பார்த்திருக்கிறேன்.

மசூதியைக் கண்டதும் வீரவிக்னேஷ்வர் காட்டுக்கூச்சல் அதிகமாகியது.

"நாலு நாலு எட்டு….துலுக்கன கண்டா வெட்டு..” என்று கத்தி கலாட்டா செய்தனர். கல்லாய் காய்ந்து போயிருந்த களிமண் பிள்ளையார் எங்கிருந்தோ பறந்து வந்து சரியாக எனது ரூம்மெட் மண்டையைப் பதம் பார்த்தது. பெருச்சாளியும் தன்பங்கிற்கு பல்லைக் காட்டிக்கொண்டு விர்ர்..விர்ர்ர்.. எனப் பறந்து வந்து தாக்கியது..

"..அல்லா ….” என்று அவன் அலறினான். இத்தனை ஆண்டுகளில் ஒருநாள் கூட அவன் அடையாளம் வெளிப்படையாக எனக்கு உறைத்தது இல்லை.

சிறிய கலவரம் தடியடிக்குப் பின்பு ஒய்ந்தது. தலையில் போட்ட கட்டுடன் சுருண்டு ரூம்மெட் படுத்திருந்தான். காசிவிநாயகா மெஸ்லிருந்து அவனுக்கு எடுப்புச் சாப்பாடு வாங்கி வந்தேன். அவன் வெளியே வர மறுத்து விட்டான்.

பலபேர் கூட்டத்தில் எனது ரூம்மெட்டை தனியாகப் பிரித்து பார்த்து தாக்கிய அவர்களின் சதித்திட்டம் நிறைவேறிவிட்டது. ஒரு தாயின் பிள்ளையாய் மேன்சனில் வாழ்ந்தவர்களுடன் இந்தக் கலவரம் சிறுபிளவிற்கு விதை ஊன்றி விட்டதாகவே தோன்றியது. சாலையின் வெறிச்சோடிய தனிமையை மீறி கோபமும், எரிச்சலும் பற்றி எரிந்தது. பழமென நம்பி பிறப்பம் பழத்தைத் தின்று தூ..தூவென துப்பியது நினைவிற்கு வந்து தொலைத்தது.






Back to top Go down
 
Tamil Story - பய - பக்தி
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» Tamil story - (a+b)2 = a2+b2+2ab
» Tamil Story - வசை
» Tamil Story - ஒத்தப்பனமரக்காடு
» Tamil Story - கருக்கல்
» Tamil Story - பள்ளித்தளம்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
RaaGaM GloBaL ChaT FoRuM :: ENTERTAINMENT :: SHORT STORIES-
Jump to: